Published:Updated:

தூக்கம் தொலைத்த இரவாடியா நீங்கள்... உடற்பருமன், வயிற்றுப்புண், ரத்தக்கொதிப்பு ஆபத்து!

தூக்கம் தொலைத்த இரவாடியா நீங்கள்... உடற்பருமன், வயிற்றுப்புண், ரத்தக்கொதிப்பு ஆபத்து!
தூக்கம் தொலைத்த இரவாடியா நீங்கள்... உடற்பருமன், வயிற்றுப்புண், ரத்தக்கொதிப்பு ஆபத்து!

மரபு ரீதியாக, மனித இனம் இரவுகளில் செயல்பட்டதில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக உறங்கி, உடலையும் மனதையும் செப்பனிட்டுக்கொள்ளவே இரவுப் பொழுதை நெடுங்காலமாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த மரபு அண்மைக்காலமாக மாறி வருகிறது. தூக்கம் தொலைத்து, இரவாடிகளாக மனிதர்கள் உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.  

இரவுகளில் அதிகமாக செயல்படும் விலங்குகள் மற்றும் பறவைகளை விட, மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள்தான் அதிகநேரம் இரவுகளில் செயல்படுகின்றனர். இரவில் தொலைத்த தூக்கத்தை மறுநாள் பகல் நேரத்தில் தூங்கி ஈடுகட்டிக்கொள்ளலாம் என்பது தவறான நம்பிக்கை. இரவின் மையிருட்டு நமது உடலுக்கும் மனதுக்கும் கொடுக்கும் அமைதியான சூழலை நிச்சயமாக பகல் வெளிச்சத்தால் கொடுக்க முடியாது. குறிப்பாக இருளில் மட்டுமே அதிகமாக சுரக்கும் ’மெலடோனின்’ சுரப்பினை (Melatonin hormone) வெளிச்சம் கண்களை சூழ்ந்திருக்கும் பகல் உறக்கத்தில் தேட முடியாது. உடலின் முக்கியமான செயல்பாடுகளுக்கு மெலடோனின் முக்கியம்.

குழப்பமடையும் மூளை:

’இந்த மாசம் முழுசும் நைட் சிப்ட், அடுத்த மாசம் முழுசும் பகல் சிப்ட்…’ -இதுவே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மாற்றமில்லா ’டைம்-டேபிள்’. இப்படி மாறுபட்ட சிப்ட் முறைகள், உடல் இயங்கியலை முற்றிலுமாக சீர்கெடச் செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இரவையும் பகலையும் சிப்ட் அடிப்படையில் புரட்டிப் போட்டால், நோய்களும் சிப்ட் போட்டு தாக்க ரெடி ஆகிவிடும். மாதம் ஒரு முறை இரவு பகலென மாறி மாறி கண்விழித்தால், ஒரு கட்டத்தில் உறக்கத்தையும் விழிப்பு நிலையையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி குழப்பமடைந்து, தூக்கமின்மை நோயை உண்டாக்கிவிடும். ’குட் நைட்’ சொல்ல வேண்டிய நேரத்தில் மார்னிங் உழைப்பை கொடுப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்காது. 

மரபணுப் பதிவு:

அவ்வப்போது சில நாள்கள் இரவில் தூக்கத்தைத் தொலைப்பது பெரிய பாதிப்புகளை உண்டாக்காது. ஆனால் வருடக் கணக்கில் இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு, பகலில் உறக்கத்தை நாடும் மனிதர்களுக்கு நிச்சயம் நோய்களின் தாக்கம் விரைவில் வந்து சேரும். பல்லாயிரம் வருடங்களாக மனித இனத்தின் மரபணுக்களில் பதிந்த ’உறக்கம் – விழிப்பு’ சமநிலைத் தன்மையை தலைகீழாக புரட்டுவது விபரீதத்தைத் தான் உருவாக்கும். 

கஃபைன் (Caffeine) அடிமை:

இரவுகளில் கண்விழித்து வேலை செய்பவர்கள் ’கஃபைன்’ (காபி, கோலா போன்ற பானங்களில் இருக்கும் வேதிப்பொருள்) பொருளுக்கு அடிமையாவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உறக்கத்தை விரட்ட கஃபைனுக்கு அடிமையாகி அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, நரம்பியல் தொந்தரவுகள் முதல் உளவியல் தொந்தரவுகள் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஒருநாள் இரவில் கண்விழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலே கஃபைன் கலக்கப்பட்ட காபிக்காக ஏங்குகிறோம். தொடர்ந்து பல நாள்கள் இரவில் விழித்திருக்க வேண்டியவர்கள் அதிகளவில் காபியைப் பருகி, உடல்நிலையை கெடுத்துக்கொள்வது உறுதி. தற்காலிக உற்சாகத்தை கொடுத்து, நிரந்தர உடலியல் தொந்தரவுகளை கஃபைன் கொடுக்கக்கூடும். 

மனம் சார்ந்த பிரச்னைகள்:

’ராத்திரி முழுசும் தூங்காம முழிச்சிட்டு இருக்காண்டா… ஏதாவது பித்து கித்து பிடிச்சுப் போச்சான்னு பாக்கனும்…’ இரவில் தூங்காமல் இருப்பவர்களை இப்படி கிண்டல் செய்வதை நாம் பார்த்திருப்போம். உண்மையும் அதுதான். தொடர்ந்து நீண்ட நாள்கள் இரவில் தூங்காமல் இருப்பவர்களுக்கு அதீத கோபம், அதிக வெறுமை, உற்சாகமின்மை போன்ற மனம் சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம். ஒருநாள் சரியாக தூங்கவில்லை என்றாலே, அடுத்த நாள் நமக்கு உண்டாகும் தொல்லைகளை நாமே உணர்ந்திருப்போம். 

பகல் உறக்கம் கூடாது:

பகலில் சிறிது நேரம் உறங்குவதே பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்கும் என்ற நிலையில், மணிக்கணக்கில் தினமும் பகலில் உறங்குவது தீவிரமான நோய் நிலைகளை வருவிக்கும். வயது முதிர்ந்தவர்கள் சிறிது நேரம் இளைப்பாற பகலில் உறங்குவதில் தவறில்லை. ஆரோக்கியமாக இருப்பவர்கள் நிச்சயமாக பகல் உறக்கத்தை தவிர்க்க வேண்டும். இரவில் தூக்கத்தை தொலைத்தால், பகல் உறக்கம் கட்டாயமாகிவிடும். எந்தவித காரணமுமின்றி நோய் உண்டாகிறதா? உங்கள் உறக்கத்தின் அளவு, காலம், தன்மை ஆகியவை சரியாக இருக்கிறதா என்று சுயப் பரிசோதனை செய்துபாருங்கள்.

வரிசைக் கட்டும் நோய்கள்:

பெரும்பாலான நோய்களுக்கு தொடக்கப்புள்ளி தூக்கமின்மையே. உடலின் பல்வேறு சூட்சும செயல்பாடுகள் இரவு உறக்கத்தில்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தூக்கமின்மையால் மறதி, உடற்பருமன், வயிற்றுப்புண், உளவியல் சார்ந்த நோய்கள், மலக்கட்டு, செரியாமை, ரத்த அழுத்தம் என பல நோய்கள் தாக்குவதற்கு வரிசைகட்டி நிற்கும் என்பதை நாம் நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு தூக்கமின்மையால் உருவாகும் கவனமின்மையே காரணம்.

தூக்கம் என்பது பல்வேறு கட்டங்கள் அடங்கியது. N-REM Sleep, REM Sleep (Rapid Eye Movement) என்று பிரிக்கலாம். இவை உறக்கத்தின்போது சுழற்சி முறையில் நடைபெறும் நிகழ்வுகள். சுழற்சிக்கு அனுமதியே அளிக்காமல், விழிப்பு நிலையிலேயே இருப்பது உடலுக்குள் குழப்ப நிலையினை உருவாக்கும். மூளை செல்கள் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு உறக்கம் மிக முக்கியம். அனைத்து உறுப்புகளும் தங்களுக்கு இருக்கும் சில பிரச்னைகளை சரி செய்துகொள்ளவும் தூக்கம் அவசியம்.

வாழ்க்கை முறையால் தொலைந்த தூக்கம்:

சில நோய் நிலைகள், வயது அல்லது மருந்துகளால் உண்டாகும் தூக்கமின்மையை எளிதாக தீர்க்கலாம். நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து மருத்துவம் செய்தால் குணமாகிவிடும். ஆனால், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டிய நள்ளிரவில் உறங்கச்செல்வது, போதைப் பொருளுக்கு அடிமையாகி தூக்கத்தைத் தொலைப்பது, அதிகரித்துவிட்ட பார்ட்டி கலாசாரத்தால் இரவை பகலாக்கி களியாட்டம் போடுவது போன்ற காரணிகளுக்கு மருத்துவம் கிடையாது. வாழ்க்கை முறையில் நிச்சயம் மாற்றம் செய்தாக வேண்டும். 

இரவின் அமைதியை உறக்கத்துக்காகவே இயற்கை வடிவமைத்துக் கொடுத்திருக்கலாம். அதை மாற்ற நினைப்பது தவறாகவே முடியும். மனித இனத்தில் இதுவரை இரவாடிகள் கிடையாது. செயற்கையாக மாற வேண்டாமே! தூக்கத்தை தொலைத்து இயற்கை விதியை மீறி நடக்காமல் இருப்பதுதான் உடலுக்கு நல்லது. 

இரவின் அதிசயம்… அமாவாசையின் கும்மிருட்டு… பெளர்ணமியின் வெளிச்சம்… தனிமையின் ஆழம்… காதலின் மென்மை… இப்படி இரவின் சூழலை எப்போதாவது ரசிப்பதில் தவறில்லை. தூக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட இரவு எனும் கொடையை கலாசார மாற்றத்தால் வீணாக்குவதுதான் தவறு!... திருத்திக்கொள்வோம்! இரவில் உறங்குவோம் ஆழமாக!