Published:Updated:

மழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்!

இந்துலேகா.சி

மழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்!

இந்துலேகா.சி

Published:Updated:

ழைக்காலத்தில் பெரியவர்களே சளி, இருமல், ஜுரம் என்று சுருண்டுவிடுகிறோம். குழந்தைகளின் நிலை, அதனினும் பரிதாபம். ''வரும் முன் காப்பது சிறந்தது. எனவே, மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை!'' என்று சொல்லும் நாமக்கல், குழந்தைகள் நல மருத்துவர் சுகுமார், அதுகுறித்து அளிக்கும் டிப்ஸ்...

மழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்!

மழைக்காலத்தில் தினமும் குளியல்..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழைக்காலத்தில் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்கிற தவறான கருத்து உள்ளது. மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் காலையில் தலைக்கு ஊற்றி, மாலையில் வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிடலாம். மழைக்காலத்தில் வெந்நீரில் குழந்தைகளைக் குளிப்பாட்ட வேண்டும் என்றில்லை. பச்சைத் தண்ணீரில் குளித்துப் பழகிய குழந்தைகளை அதிலேயே குளிப்பாட்டலாம். எப்படி குளித்தாலும் நன்றாக தலை துவட்ட வேண்டியது முக்கியம்.

குளியல் பொடி, ஏன் வேண்டாம்?

குழந்தையைக் குளிப்பாட்ட சோப்புக்குப் பதில் சிலர் பச்சைப் பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் கலவையை உபயோகிப்பதுண்டு. மழைக்காலத்தில் இதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது குழந்தையின் மென்மையான சருமத்தை இந்த சீதோஷ்ண நிலையில் வறண்டு போகச் செய்யும். சரியாக பராமரிக்காமல் போனால், பொடியில் பூஞ்சை வளர வாய்ப்பிருக்கிறது.

துணிகளை நன்கு உலர்த்துங்கள்!

துவைத்த துணிகள் நன்கு காயாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் துணியில் பூஞ்சைகள் வரும். இந்தத் துணியை குழந்தைகளுக்கு அணிவிக்கும்போது ஸ்கின் அலர்ஜி, ரேஷஸ் போன்றவை ஏற்படும். துணிகளை, குழந்தை வாயில் வைத்து கடித்தாலோ, துணி களைத் தொட்ட கைகளை வாயில் வைத்தாலோ, உமிழ் நீரின் மூலம் பூஞ்சையானது வயிற்றுக்குள் சென்று டயரியா போன்றவை ஏற்படலாம். எனவே, குழந்தைகளின் ஆடைகள், துண்டு போன்றவற்றை நன்கு உலர்த்துங்கள்.

குறைவான தண்ணீர் அருந்தினால் போதும்!

பாலூட்டும் தாய்மார்கள் ஆறு மாதம், ஒரு வருடத்தில் பாலூட்டுவதை நிறுத்தாமல், தொடர்ந்து இரண்டு வயது வரை கொடுத்து வந்தால், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், சீஸனல் வியாதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும். மேலும், தாய்ப்பாலில் நீர்ச்சத்து இருப்பதால், கட்டாயப்படுத்தி தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. வளர்ந்த குழந்தைகள் மழைக்காலத்தில் அதிகம் நீர் அருந்தாவிட்டாலும், கஞ்சி, சூப், ரசம் போன்ற உணவுகளை கொடுக்கும்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

மழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்!

மழைக்காலத்தில் கிருமிகள் பரவும். எனவே...

வெளியில் விற்கப்படும் உணவுகளை, குழந்தைக்கு கட்டாயம் வாங்கித் தராதீர்கள். வீட்டில் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்களை நன்கு கழுவி சுத்தப்படுத்தி காயவைத்து விளையாடக் கொடுங்கள். கல்யாணம், பார்ட்டி, பொருட்காட்சி போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுள் யாருக்காவது சளி, ஜுரம், இருமல் இருக்கும் என்பதால், அங்கெல்லாம் குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள். டெங்கு நோயைத் தவிர்க்க, வீட்டின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

டாக்டரிடம் எப்போது செல்ல வேண்டும்?

சளி, காய்ச்சல், இருமல் இருக்கும் குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ளுங்கள். தினசரி 3 -  4 முறை இருமினால் நார்மல்தான். அதுவே நாள் முழுக்க இருமல், தும்மல், கூடவே வாந்தி, காய்ச்சல், டயரியா, இரவு தூங்காமை, மூச்சுத் திணறல், பால் குடிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டும். சளி பிடித்த குழந்தைகள் இருமும்போதும், தும்மும்போதும் கர்சீஃப் கொண்டு வாயை மூடக் கற்றுக்கொடுங்கள்.

இந்த சீஸனில் பழங்கள் சாப்பிடலாமா?!

மழை, குளிர் காலங்களில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறான நம்பிக்கை. சொல்லப்போனால், காய்கறி மற்றும் பழங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism