Published:Updated:

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19

அரிப்பைப் போக்கும் அருகம் புல் சாறு!டாக்டர் கு.சிவராமன்

பிரீமியம் ஸ்டோரி

'என் கை கால் எல்லாம் வேர்க்குரு மாதிரி ஏதோ சிவப்புத் திட்டா வந்திருக்கு. என்ன பாட்டி இது? வெயில்கூட இல்லையே... அம்மையா இருக்குமோ?'

''அட, இது அம்மையும் இல்லை, அப்பச்சியும் இல்லை... அலர்ஜி.'

''என்ன அலர்ஜியா?''

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19

''நேத்து வீட்டுல சாப்பிடாம வெளியிலயே  சாப்பிட்டு வர்றேன்னு போனியே, என்ன சாப்பிட்ட?'

'ஹாட் அண்ட் சோர் சூப் மட்டும்தான் குடிச்சேன்.'

'அப்ப அதுதான் காரணமா இருக்கும்.'

''பாட்டி நான் ரொம்ப நாளா இந்த சூப் சாப்பிடறேனே. இத்தனை நாளா இல்லாம இப்ப மட்டும் எப்படி? ரொம்ப அரிக்குது, தடிப்பு வேற அதிகமாயிட்டே இருக்குது.'

'சரி, வயலின் வாசிச்சிட்டே இருக்காத, ஒண்ணும் ஆகாது. அதுவாகவே அரை மணி நேரத்துல சரியாயிடும். நான் சொல்றதை மட்டும் செய்.

என் வெத்தலைப் பெட்டியிலிருந்து நாலு வெத்தலை, பூஜை ரூம்ல பிள்ளையாருக்கு போட்டிருக்கிற அருகம்புல் ஒரு கைப்பிடி, அஞ்சறைப் பெட்டியில இருக்கும் மிளகு 10 எடுத்துக்க. எல்லாத்தையும்  இடிச்சுக்க. ஒரு மண் சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி, அடுப்பை சிம்மில் வெச்சுக் கொதிக்கவை. தண்ணீர் பாதியா வத்தினதும் எடுத்து வடிகட்டி,  இந்தக் கஷாயத்தை 120 மி.லி அளவுக்கு, ரெண்டு வேளை குடி.'

'சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன்' என்றபடியே, டம்ளரில் கஷாயத்தை ஊற்றிக் குடித்தபடி வந்தாள் ஷைலு. 'எவ்ளோ நாளைக்கு இந்தக் கஷாயம் குடிக்கணும் பாட்டி?'

'மூணு, நாலு நாள் சாப்பிட்டாப் போதும்.'

'என் ஃப்ரெண்டு ஒருத்திக்கும் இதே மாதிரி அரிப்பு இருக்கு. கூடவே வீசிங்கும் வந்திடும். அவளையும் குடிக்கச் சொல்லலாமா?'

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19

'அரிப்புன்னா அலர்ஜி மட்டும் கிடையாது. அவளோட தைராய்டு சுரப்பு அளவு சரியா இருக்கானு பார்க்கச் சொல்லு. ஹைப்போதைராய்டு இருந்தாலும் சிலருக்கு அரிப்பு வரும். வயசானவங்களுக்குக் காரணமே இல்லாம அரிக்கும். கரப்பான் என்ற எக்ஜீமா இருந்தாலும் அரிப்பு இருக்கும்.'

'நிறையப் பேருக்கு இடுப்புல டிரெஸ் இறுக்கமாக் கட்டுறதுனாலயும், அந்த இடம் கறுத்து, அரிப்பு, தடிப்பு எல்லாம் வருதே.  அதை ஏன் பூஞ்சைத் தோல் நோய்னு சொல்றாங்க பாட்டி?'

'பூஞ்சைத் தோல் நோயை உடனடியாக் கவனிக்காம, சுகமா சொறிஞ்சுக்கிட்டு இருந்தா, அது கரப்பான் நோயா மாறிடும். அப்புறம் குணப்படுத்தறதுக்கு ரொம்ப நாளாகும். சாதாரணமா வயல்வெளியில் கிடைக்கிற சிவனார்வேம்புங்கிற ஒரு மூலிகைச்செடியோட இலை, பூவை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கணும். இதுல அரை ஸ்பூன் எடுத்துத் தேன்ல குழைச்சு, காலையும் மாலையும் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தா,  அரிப்புப் பிரச்னை தீரும்.

இதேபோல, நெல்லு அறுத்த பிறகு களைச்செடியா வளர்ற கொட்டைக்கரந்தைச் செடியை உலர்த்திப் பொடிச்சு இதேமாதிரி கொடுக்கலாம்.'

'உன் வைத்தியத்துல, அரிப்பு, தடிப்பைப் போக்கும், வெளிப்பூச்சு மூலிகை ஏதாச்சும் இருக்கா பாட்டி?'

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19

' செம்பருத்தி இலைகூட, காட்டுச்சீரகத்தை அரைச்சு, கரப்பான் என்கிற தடிச்ச, கருத்த தோல்படைக்கு வெளிப்பூச்சா பூசலாம். நல்லெண்ணெயில் பூவரசம் பட்டையைப் போட்டுக் காய்ச்சிய எண்ணெயை, எந்த நாள்பட்ட தோல் அரிப்புக்கும் தடவலாம். அருகம்புல்லைச் சாறு எடுத்து, சம அளவுத் தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்கு நீர் வத்தற வரைக்கும் காய்ச்சணும். இந்த அருகம்புல் தைலம் குழந்தைகளுக்கு வர்ற தோல் அரிப்பு, படைக்கு சிறந்த மருந்து.'

'நீ ஒரு மூலிகை டெர்மடாலஜிஸ்ட்னு தெரியாமப்போச்சே.'

'அரிப்புக்கு உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கம்பு, சோளம், வரகு முதலான சிறுதானியங்கள், காளான், சோயா, நிலக்கடலை, கத்தரிக்காய், மீன், நண்டு, இறால், கருவாடு எதுவும்  சேர்க்கக் கூடாது.அலர்ஜிங்கிறது  ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். சிகிச்சை முடிகிற வரைக்கும்,  ஒவ்வாத உணவை ஒதுக்கித்தான் ஆகணும்.'

'அரை மணி நேரம் உன்கிட்ட பேசிட்டிருந்தேன், அரிப்பு போயிடுச்சு பாட்டி.'

' பேசினதால இல்லைடி நீ குடிச்ச அருகம்புல் கஷாயத்தோட மகிமை அது!'

மருந்து மணக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு