Published:Updated:

நீங்கள் பயன்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் உண்மையிலேயே மருந்து தானா?- ஓர் எச்சரிக்கை!

நீங்கள் பயன்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் உண்மையிலேயே
News
நீங்கள் பயன்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் உண்மையிலேயே

நிலவேம்புக் குடிநீர்... சமீப காலங்களாக அரசாங்கத்தில் தொடங்கி பாமர மக்கள் வரை எல்லோரும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை

நிலவேம்புக் குடிநீர்... சமீப காலங்களாக அரசாங்கத்தில் தொடங்கி பாமர மக்கள் வரை  எல்லோரும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை.  அந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது நிலவேம்புக் குடிநீர். எந்த நோய்க்கும் நவீனத்தையும் ஆங்கில மருந்துகளையும் நம்பியிருந்த இன்றைய தலைமுறையினரை நமது பாரம்பர்ய மருத்துவத்தின் பக்கம் திரும்ப வைத்த பெருமை  நிலவேம்புக் குடிநீருக்கு உண்டு என்றால் அது மிகையல்ல. டெங்கு, சிக்குன்குனியா போன்ற உயிர்குடிக்கும் நோய்கள் பற்றிய பீதியையும் அதன் மீதான அச்சத்தையும் போக்க நமக்குக் கிடைத்த ஓர் ஆரோக்கிய கேடயமாக இதை பயன்படுத்துகிறோம். அந்த அளவுக்கு நிலவேம்புக் குடிநீர் பிரபலமாகியிருக்கிறது. 

இன்றைக்கு ரத்த தானம், கண் தானம் போன்ற சமூக நிகழ்வுகளை நடத்தி வந்த தன்னார்வ நிறுவனங்கள்கூட ஒரு சிறிய கொட்டகை அமைத்து, இலவசமா நிலவேம்புக் குடிநீரை வழங்கி அதை ஒரு விழாவாக நடத்துவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. ஆனால், அங்கே வழங்கப்படும் அந்த நிலவேம்புக் குடிநீர் தரமானதா, அது  உண்மையான நிலவேம்புக் குடிநீர்தானா? என்றால் அது சந்தேகமே. 

'நிலவேம்புக் குடிநீர்' என்று அழைக்கப்படுவதால், அது நிலவேம்பினை மட்டுமே காய்ச்சித் தயாரிக்கப்படுவது என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், மருத்துவர்களோ நிலவேம்பு அதில் ஒரு மூலப்பொருளாக மட்டுமே உள்ளது. அதற்கு இணையாக மேலும் பல மூலிகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பெரும்பாலான நிலவேம்புக் குடிநீர் உண்மையான நிலவேம்புக் குடிநீரே இல்லை" என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.  மேலும் நிலவேம்பு தயாரிக்கும் முறை அதை எப்படி குடிக்க வேண்டும். எப்போது குடிக்கக் கூடாது? அதன் மருத்துவக் குணங்கள் என்ன என்பது பற்றிய அத்தனை சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறார். 

"குறிப்பிட்ட ஒரு நோயின் நோய்த்தொற்று ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ அல்லது ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டத்துக்கோகூட பரவி ,  மக்களைப் பெரிதாக தாக்கும்போது, அதை 'உலகம் பரவுநோய்' என்கிறது மருத்துவம். அதுவே, நோய் பரவுவதைவிட அதிகமானோரைத் தாக்கும்போது, அதை உலக சுகாதார அமைப்பால் 'கொள்ளை நோய் (Epidemic)'  என்று அறிவிக்கப்படுகிறது. 

இதை பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது பாரம்பர்ய மருத்துவங்களான சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் 'பிரளயம்' என்று அழைத்துள்ளார்கள். இப்படியான கொள்ளை நோய்கள் நவீன மருத்துவங்கள் தோன்றாத காலத்தில் பாரம்பர்ய மருத்துவத்தாலேயே கட்டுப்படுத்தப்பட்டன. சூரணம், லேகியம், கஷாயம் போன்ற வடிவில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு நோய்கள் குணப்படுத்தப்பட்டன.  அத்தகைய காலக்கட்டங்களில் தவிர்க்கமுடியாத ஒரு கொள்ளை நோயாக இருந்தது விஷக் காய்ச்சல். இதைத்தான் சிக்குன் குனியா, டெங்கு என்பதுபோன்ற பல பெயர்களில் நவீன மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள்.  அத்தகைய விஷக் காய்ச்சல்களைக் குணப்படுத்தும் நோக்கில் கஷாய வடிவில் கொடுக்கப்பட்டதுதான்  இந்த 'நிலவேம்புக் குடிநீர்'.  

நிலவேம்புக் குடிநீர் பற்றி  'சித்த வைத்திய திரட்டு' என்ற நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு பொருளும் மக்களிடையே பிரபலமாகும்போது, அதற்கு இணையாக போலிகள் உருவாவதையும் தடுக்க முடியாது. அது, நிலவேம்புக் குடிநீருக்கும் பொருந்தும். அதற்கு முன்பாக, உண்மையில் நிலவேம்புக் குடிநீர் எப்படித் தயாரிக்கப்படுகிறது. அதன் மருத்துவக் குணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மூலப்பொருள்கள்

நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ),  பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு,  மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.

தயாரிக்கும் முறை

இந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம் தயாரிக்கும்போதும் தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து, அதனுடன் நான்கு அல்லது எட்டு அல்லது 16 மடங்கு என

 அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படும். 

அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்து,  அதை 4 மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர்  ஆற வைத்து வடிகட்டினால் நிலவேம்புக் குடிநீர் தயார். 

எப்படிக் குடிக்க வேண்டும்?

நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல,   முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை,  அடுத்த நாள்வரை  வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது. 

எப்போது, எவ்வளவு  குடிக்கலாம்?

நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு  10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி சிறுவர்கள் 15 மி.லி பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம்.

நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் உட்கிரகித்துக் கொள்ளும்.

மருத்துவக் குணங்கள்

இந்த ஒன்பது மூலப்பொருள்களில் நோய் தீர்ப்பதில் நிலவேம்புக்குத்தான் முக்கியப் பங்கு உள்ளது.  இதனால்தான் இதை நிலவேம்புக் குடிநீர் என்கிறோம். இதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும் கொண்டது. 

கோரைக்கிழங்கு , பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல் குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும். சுக்கு, மிளகு ஆகியவை உடலின் நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும்.  'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்' என்பது நம் முதுமொழி. இதன் மூலம் சுக்கு எந்தளவுக்கு விஷ முறிவாகச் செயல்படுகிறது என்பதை அறியலாம்.

வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம் ஆகியவை உடல் ஜுரத்தால் ஏற்படும்  சூட்டைத் தணிக்கும். சுக்கு, மிளகு ஆகியவை உடல் சூட்டை அதிகரிக்கும் இயல்பு உடையது. ஆனால், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம்  ஆகியவை இந்த சூட்டைத் தணித்து சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

சந்தன மரத்தின் மேல்பட்டையில் இருந்து இதற்கான சந்தனம் எடுக்கப்படுகிறது. இதிலும் சந்தனத்தில் உள்ள அதே மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக,  உடல் சூட்டைத் தணிக்கும் சந்தனத்தின் பண்பு இவற்றுக்கும் உள்ளது.

என்ன செய்யலாம்?

இப்படி, நோய்களைத் தீர்க்க கிடைத்த அரிய வரப்பிரசாதமான நிலவேம்புக் குடிநீர் சரியாகவும் தரமாகவும்  இல்லாவிட்டால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது. நாம் பயன்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் உண்மையிலேயே நோய் தீர்க்கப் பயன்படுமா என்பது மருந்துகளின் சேர்க்கை மற்றும் அதன் தயாரிப்பு முறையைப் பொறுத்தது. எனவே, கடைகளில் விற்கப்படும் நிலவேம்புப் பொடி அரசால் அங்கீகரிக்கப்பட்டதா? அதில் என்னென்ன மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதையெல்லாம் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது.  மேலும், நிலவேம்புக் குடிநீர் அரசு மருத்துமனைகளிலும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்" என்கிறார்.