Published:Updated:

மீண்டும் தலையெடுக்கும் உயிர்க்கொல்லி மலேரியா... தற்காத்துக் கொள்வது எப்படி?

மீண்டும் தலையெடுக்கும் உயிர்க்கொல்லி மலேரியா... தற்காத்துக் கொள்வது எப்படி?
News
மீண்டும் தலையெடுக்கும் உயிர்க்கொல்லி மலேரியா... தற்காத்துக் கொள்வது எப்படி?

மீண்டும் தலையெடுக்கும் உயிர்க்கொல்லி மலேரியா... தற்காத்துக் கொள்வது எப்படி?

மழைக்காலங்களில் ஏற்படும் முக்கிய நோய்களில் ஒன்று மலேரியா. பொதுவாக மழைக்காலங்களில் ஜலதோஷம், சளி, இருமல் என்ற வரிசையில் காய்ச்சலும் வந்து மனிதர்களைப் பாடாய்ப் படுத்தி எடுக்கும். அதிலும் மழைக்காலங்களில் கொசுக்கள் மற்றும் ஈக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால் காய்ச்சல் வருவது இயல்பே. குறிப்பாக கொசுக்களால் பரவும் மலேரியா  இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் இன்னும் அடியோடு ஒழிக்க முடியாத நோயாக மலேரியா உள்ளது. இங்கு அதன் தாக்கமும் வீரியமும் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்தியா தவிர மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கு மலேரியா பற்றி எச்சரிக்கையும் விடப்படுகிறது என்றால் அந்த அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது.

மலேரியாவால் மாநிலம் முழுவதும், சுமார்  2,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 400 பேர் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெங்குக் காய்ச்சல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சலின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

“மலேரியா மற்ற காய்ச்சல்களில் இருந்து பலவகையில் மாறுபட்டது. இதனால்தான் மற்ற எந்த காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சென்றாலும் மலேரியாவுக்கென தனி பரிசோதனை செய்யப்படுவதுண்டு” என்கிறார் பொதுநல மருத்துவர் விஜய் சக்கரவர்த்தி. அது எந்த வகையில் வேறுபட்டது என்பதையும், மலேரியா காய்ச்சல் வருவதற்கான காரணங்கள், அந்தப் பாதிப்பிலிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விவரிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மலேரியா

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட கொசு, மனிதர்களைக் கடிப்பதன் மூலம்  மலேரியா பரவுகிறது. இந்த கொசுக்கள், கடிக்கும்போது அவற்றின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இந்தக் கிருமிகள் ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிப்பதால் மலேரியா காய்ச்சல் வரும்.

அனோபலஸ் கொசு

அனோபலஸ் (Anophales) என்ற ஒரு வகை கொசுவினால்தான் இந்தக் காய்ச்சல் பரவுகிறது. அதிலும் அந்த கொசுக்களில் பெண் கொசுக்களே இந்நோயைப் பரப்புகிறது. இந்த வகைக் கொசுக்கள் முக்கியமாக சுத்தமான நீர் நிலைகள் காணப்படும் கிணறுகள், ஏரி, குளம், நெல் வயல் வெளிகள் போன்ற இடங்களில் அதிகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்தக் கொசுக்கள் இரவு, அதிகாலை நேரங்களில்தான் மக்களைக் கடிக்கின்றன. மலேரியாவின் நோய் முதிர்வு காலம் 8 முதல் 12 நாள்களாகும். 

நோய் வகைகள் 

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) , பிளாஸ்மோடியம் ஓவேல் (Plasmodium ovale), பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae), பிளாஸ்மோடியம் பால்சி பாரம் (Plasmodium falciparum) போன்ற நான்கு வகையான  மலேரியா காய்ச்சல் உள்ளன. இதில், பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் பாதிப்பினால் ஏற்படும் காய்ச்சலே பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிளாஸ்மோடியம் வைவாஸ் நோய்க் கிருமியால் ஏற்படும் பாதிப்புதான் அதிகம். பிளாஸ்மோடியம் ஓவேல் வகை மலேரியாவின் பாதிப்பு அரிதாகவே உள்ளது. 

பிளாஸ்மோடியம் மலேரியா வகை காய்ச்சல் பீகார், ராஜஸ்தான், அசாம் போன்ற வடமாநிலங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. பிளாஸ்மோடியம் பால்சி பாரம் வகை மலேரியாக் காய்ச்சல் மற்ற வகைக் காய்ச்சலைவிட மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இவ்வகை நோயாளிகளுக்குத்தான் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழிக்கும் அபாயகரமான நிலைமை ஏற்படுகிறது. 

நோயின் அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற வழக்கமான காய்ச்சலைப்போலவே மலேரியாவும் தொடங்கும். கூடவெ உடம்பு வலி, முதுகு வலி வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். காய்ச்சல் நின்றதும் உடம்பில் வியர்வை அதிகமாக வெளியாதல், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

மலேரியா காய்ச்சலானது நடுநடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல், விட்டு விட்டு வரும் காய்ச்சல் என இருக்கும். அதாவது ஒருநாள் இடைவெளி விட்டு வருவது அல்லது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் வரை மட்டும் காய்ச்சல் இருந்து விட்டு பிறகு மீண்டும் காய்ச்சல் வருவதேயாகும். இந்த அறிகுறிகள்  மற்ற காய்ச்சல்களில் இருந்து  எளிதில் வேறுபாட்டை அறிய உதவும். 

கொசு கடித்த ஒரு சில வாரங்களுக்குப் பிறகே இத்தகைய அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு ஒட்டுண்ணி போல சில மாதங்களும், சில வருடங்களும்கூட உடலில் அமைதியாக இருந்துவிட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்போது வெளிப்படும்.

என்ன பரிசோதனை?

இந்த வகைக் காய்ச்சலை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். அதாவது, ரத்த அணுக்களில் கிருமிப் பரிசோதனை (Peripheral smear study) செய்யப்படும். காய்ச்சல் இருக்கும்போது நோயாளியின் ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்தால், அதன் முடிவு மிகச் சரியாக இருக்கும். சிவப்பு அணுக்களுக்குள் மலேரியா கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டால், மலேரியா என்று உறுதி செய்யப்படும். பரிசோதனையின் முடிவிலும் உடனே தெரிந்துவிடும்.

ஆபத்துகள் என்ன?

மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாவிட்டால் பல ஆபத்துகள் வரும். அடிக்கடி மலேரியா வந்தால் ரத்தசோகை, மஞ்சள் காமாலை (Jaundice) ஏற்படும். இதனால் உடல் தளர்ச்சி உண்டாகும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். சிலருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘பிளாக் வாட்டர் காய்ச்சல்' (Black Water Fever) வரும். இந்த நோயின்போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு. 

மற்றக் காய்ச்சலை விட எப்படி வேறுபட்டது?

பொதுவாக, காய்ச்சலுக்காக எடுத்துக் கொள்ளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள், மருந்துகள் மற்ற காய்ச்சல்களுக்கும் பலனளிக்கும். ஆனால், மலேரியாக் காய்ச்சலுக்கு பலன் தராது. அதேபோல மலேரியாவுக்கான ஆன்டி மலேரியல் மருந்துகள் மற்ற காய்ச்சலுக்கும் பலன் தருவதில்லை.  மலேரியாக் காய்ச்சலுக்கான பரிசோதனையை முதல் வாரத்திலேயே கண்டறிய வேண்டும். இல்லையென்றால், மிகவும் மோசமான பாதிப்பை அது உண்டாக்கி விடும். இதுவே, மற்ற காய்ச்சலைப் பொறுத்தவரை இரண்டாவது வாரத்தில் பரிசோதித்தால்தான் சரியான முடிவு கிடைக்கும். ஆகவேதான், வேறு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால்கூட மலேரியாவுக்கான பரிசோதனையையும் செய்து விடுகிறார்கள். 

தற்காத்துக் கொள்வது எப்படி?

மலேரியாவுக்கென தடுப்பூசிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.  குளோரோகுயின் (Chloroquine), பிரைமாகுயின்( primaquine) போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலேரியா பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம்.  டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை, பரிந்துரைத்த காலம் வரை தவறாமல் எடுத்துக் கொள்வதன் மூலம் மலேரியாக் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம். இரவில் கொசுவலை பயன்படுத்துவது, கொசு உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் மலேரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

 வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றிலும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ (Deltamethrin) மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும்.  சுத்தமான தண்ணீரில் மலேரியாக் கொசுக்கள் உற்பத்தியாவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும்  கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்வது, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலம் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.

மலேரியா பாதிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவினால், அந்த ஒரு பகுதியில் குறிப்பிட்ட பகுதிவரை அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தால் குளோரோகுயின் (Chloroquine) மாத்திரையைச் சாப்பிட்டுச் செல்வது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிகள் இதைப் பின்பற்ற வேண்டும். பிளாஸ்மேடியம் வைவாக்ஸ் வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், காய்ச்சல் விட்ட பிறகும் தவறாமல்  15 நாள்கள் வரை மருத்துவர் பரிந்துரைக்கும்  பிரைமாகுயின்( primaquine) போன்ற மாத்திரை  உட்கொள்ள வேண்டும். 

காய்ச்சல் வந்தால் கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. உடனே, டாக்டர்கக்ச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. எந்தக் காய்ச்சல் வந்தாலும் மலேரியாவுக்கான பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது.