Published:Updated:

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 20

ஆனந்தம் நடமாடும் வீடு...டாக்டர்.கு.சிவராமன்

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 20

ஆனந்தம் நடமாடும் வீடு...டாக்டர்.கு.சிவராமன்

Published:Updated:

இந்தத் தொடர் பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல் மட்டுமல்ல. ஒரு தலைமுறையிலிருந்து, இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மரபு வழிக்கான மருத்துவப் பாதை. ஒளவைப் பாட்டி சாப்பிட்ட வரகரிசியும், வழுதுணங்காயும் நேற்றைய தலைமுறை வரை இப்படித்தான் வந்தது. குழந்தைக்குச் சேய்நெய் கொடுத்தது, வசம்பு வளவி மாட்டியது, உரைமருந்து உரைத்துக் கொடுத்தது என இப்படியான பரிமாறலில் தொடர்ந்தவைதான் இத்தனையும். அனைத்தும் அனுபவக் கோர்வைகள்; அறம்சார் தொழில் நுட்பங்கள். ஆனால், சமீபத்தய துரித வாழ்வின் நெருக்கடியில், மொத்தமாய் இத்தனையும் தொலைந்துவிட்டன. வணிகம், உணவரசியல் செய்து, அடுப்பங்கரையை சிறிது சிறிதாய் கைப்பற்றி வருகின்றது. பீட்சா, பர்கர் மட்டுமல்லாமல், சோயா பன்னீர்கட்டி போட்ட புளிக்குழம்பு, ஆலிவ் ஆயிலில் பொரித்த வடை, மயோனைஸ் தடவிய மோதகம் என அத்தனையும் ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டன. பழமையைப் பார்த்து, ஏன், எப்படி  எனக் கேள்வி கேட்கத் தெரிந்த நமக்கு, நவீனத்தைப் பார்த்து அப்படிக் கேட்டு நுண்ணறிவாய் யோசிப்பது மறந்தே போய்விட்டது.

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 20

நம் தொடரின் பாட்டியும் பேத்தியும் இன்றைய நவீன உலகில் எல்லா வீடுகளிலும் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப் போய்விட்டார்கள். இனி  மிச்சமிருக்கும் விஷயத்தையாவது, நம் அடுத்த தலைமுறைக்கு கடத்தியே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம். மண்ணும் நீரும் சேர்ந்து இனிப்பு சுவை வந்தது. மண்ணும் தீயும் சேர்ந்து புளிப்பு சுவை தோன்றியது. நீரும் தீயும் சேர்ந்து உப்பு வந்தது. காற்றும் ஆகாயமும் சேர்ந்து கசப்பு வந்தது. தீயும் காற்றும் சேர்ந்து காரம் பிறந்தது. மண்ணும் காற்றும் சேர்ந்து துவர்ப்பு உருவானது. இப்படி பஞ்ச பூதங்களின் கலவையால்தான் நாம் இன்று பார்க்கும் ஆறு சுவைகளும் தோன்றின. அது அந்தக் காலக் கத்தரிக்காயோ, இந்தக் கால மெக்சிகன் மிளகாயோ, அதன் ஐம்பூதக் கலப்பில்தான், அதனைச் சாப்பிட்டால் அரிப்பு வருமா, அரை அங்குல உயரம் வருமா என்பது நிர்ணயிக்கப்படும்.

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 20

'பாலும் மீனும் சேர்த்துச் சாப்பிடாதே; இரவில் தயிரும் கீரையும் சேர்த்து, சாப்பிடாதே; எண்ணெய் தேய்த்துக் குளிக்கையில், மதியம் தூங்காதே; தாம்பூலம் தரிக்கையில், முதலில் ஊறும் உமிழ்நீரை உமிழ்ந்துவிடு' என்றெல்லாம் அத்தனை பாட்டிகளும் அட்வைஸ் மழை பொழிவது, இந்த பஞ்சப்பூதப் புரிதலும் ஆறு சுவையின் அடங்கலும் தெரிந்ததால்தான். 'அம்மாவுக்கு மூட்டு வலி. அவளுக்குப் புளி அதிகம் வேண்டாம். பாப்பாவுக்குச் சளி ரொம்ப இருக்குது; இனிப்புப் பாயசம் இன்னைக்கு அதுக்கு வேண்டாம். மாமியாருக்குக் கால் சதை ஏற்றம் வந்து ராத்திரி அவதிப்படுறாங்க, அப்ப... கொஞ்சம் உப்புக் கலந்த மோர் குடு. அண்ணன் ஏன் சோர்வா இருக்கான், கொஞ்சம் காரமான மிளகு ரசம் குடு' என்ற சம்பாஷனைகள் நிறைந்த வீடுதான் சுவையான ஆரோக்கியமான வீடு!

முன்பும் நிறைய புதியன நம்முள் புகுந்த வரலாறு உண்டு. அவை கலாசாரப் பண்பாட்டுப் பரிமாற்றங்கள். இப்போது புகுந்துள்ளவை அத்தனையும் வணிகக் கிடுக்குப்பிடி கொண்டவை. நேரடிப் புற்றுநோய் காரணியான அமிலத்தைக் கொண்டுள்ள மிளகாய்வற்றலை உணவில் அலங்கரிக்கத் தூவும் பழக்கம் நம்மிடையே எப்போதாவது உண்டா?

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 20

நாம் உண்ணும் ஒவ்வோர் உணவின் கூறுகளும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். குடிக்கும் தண்ணீரின் டி.டி.எஸ் அளவு தெரியாது. இட்லிப் பொடியில் ஊற்றும் எண்ணெயில், நல்லெண்ணெய் மட்டும் உள்ளதா, கொஞ்சூண்டு ஹெக்சேனும் கொஞ்சம் பருத்தி விதை எண்ணெயும் கலந்திருக்குமா, தெரியாது.  

பழங்களின் தொலி மற்றும் காய்கறியின் தொலியில் படிந்து இருக்கும் ரசாயனம், பாஸ்சரைஸ்டு பாலில் கலந்துள்ள உப்பு, நாட்டுக்கோழி குருமா வரை வந்துவிட்ட கோழித் தீவனத்து ஆன்ட்டிபயாடிக், தேநீரில் அந்தக் கசப்புடன் கலந்துள்ள உரத்துணுக்குகள் என, நம் கண்ணுக்குத் தெரியாமல் உட்புகும் உயிர் உறிஞ்சிகளை உணராமல் ஒவ்வொரு பந்தியும் பரிமாறப்படுகிறது.

ஆரோக்கியமான வீடே ஆனந்தம் நடமாடும் வீடு. எனவே அஞ்சறைப்பெட்டியும் ஆறு சுவைகளும்் பழகுவோம்!

முற்றும்

தொகுப்பு : ரேவதி