Published:Updated:

மனைவியை நேசிக்கிறவங்க...

‘இதை’ வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.. டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம், டீன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

மனைவியை நேசிக்கிறவங்க...

‘இதை’ வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.. டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம், டீன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

Published:Updated:

குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை என்பது ஆண், பெண் இருவரில் யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றாலும், இன்னமும் பெண்கள் மட்டுமே அதிகமாக அறுவைசிகிச்சை செய்துகொள்கின்றனர். குழந்தைப்பேறுகளினால் உடல் நலிவுற்று இருக்கும் பெண்கள், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையை செய்துகொள்ளும்போது, சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்கள், அதிகக் காலத்துக்கு எடை தூக்கக் கூடாது. மேலும், சில பெண்கள் இந்த அறுவைசிகிச்சையால் உடல் எடை அதிகரிக்கும் எனப் பயப்படுகின்றனர். எனவே, ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சையே பாதுகாப்பானதும் எளிதானதும் ஆகும்.

மனைவியை நேசிக்கிறவங்க...

நம் நாட்டில் ஆண்கள் 'வாசெக்டமி’ சிகிச்சை செய்துகொள்வதை குற்றம் போலவும், தனக்கு ஆண்மை உணர்வு இல்லாது போய்விடுமோ எனவும் பயப்படுகின்றனர். இந்த பயம் தேவையற்றது. பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் போல் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியில் கீறத் தேவை இல்லை. பெண்களைப் போல் ஆண்களுக்கு மயக்க மருந்தும் கொடுக்கப்படுவது இல்லை.

என்.எஸ்.வி (Non scalpel vasectomy) என்ற முறையில் விதைப்பையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பின்னர், விதைப்பையின் உச்சியில் சிறு கீறல் ஏற்படுத்தி, விந்தணுக்கள் ஆணுறுப்புக்குள் நுழையும் மிக நுண்ணிய ஊசி போன்ற குழாய், ஒரு செ.மீ, அளவுக்கு வெட்டப்படுகிறது. இந்த சிகிச்சையில் ரத்தம் வெளிவராது. வலியும் மிகக் குறைவாக இருக்கும் என்பதால் பயப்படத் தேவை இல்லை. காலை வாசெக்டமி செய்தால், மாலை வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.

மனைவியை நேசிக்கிறவங்க...

வாசெக்டமி செய்துகொண்டால் உடலுறவு கொள்ள முடியாது என்பது தவறான புரிதல். எந்தவிதப் பிரச்னையும் இன்றி தாராளமாக உடலுறவு கொள்ள முடியும். ஆண்களின் உறுப்பு எழுச்சியிலும், உடலுறவின் உச்சக்கட்டத்திலும் எந்தப் பாதிப்பும் இருக்காது. வாசெக்டமி செய்து

கொள்வதால் விந்தணுக்கள் பெண்கள் உடலுக்குள் செல்லத் தடை ஏற்படுவதால் குழந்தைப் பிறப்பு சாத்தியமற்றதாகிறது.

மனைவியை நேசிக்கிறவங்க...

ஆண்கள் வாசெக்டமி சிகிச்சை செய்துகொண்ட பின்பு,  மூன்று மாதங்கள் ஆணுறை அணிந்துதான் உடலுறவு கொள்ள வேண்டும். சைக்கிள் ஓட்டக் கூடாது. வாசெக்டமி சிகிச்சை செய்துகொண்ட 24 மணி நேரங்களுக்குப் பின்னர்தான் குளிக்க வேண்டும் என்கிற எளிமையான கட்டுப்பாடுகளே உள்ளன.

வாசெக்டமி சிகிச்சை செய்துகொள்ளும் முன்னர் ஆஸ்பிரின் முதலான ரத்தம் உறைதலைத் தடுக்கக்கூடிய மருந்துகளை உட்கொண்டிருந்தால், கட்டாயம் மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆண்கள் வாசெக்டமி சிகிச்சை செய்துகொள்வதை மனைவியுடன் கலந்தாலோசித்து இனி குழந்தைகள் வேண்டாம் என உறுதியாக முடிவெடுத்த பின்னர்தான் செய்துகொள்ள வேண்டும். தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை சில சிக்கல்களை விளைவிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளும் ஆண்கள் தாங்களாகவே வாசெக்டமி செய்ய முன்வர வேண்டும்.

சில ஆண்கள் தாங்களாகவே வாசெக்டமி சிகிச்சை செய்துகொள்ள முன்வந்தாலும், சரியான புரிதல் இன்மை காரணமாக, பெண்கள் ஆண்களைத் தடுத்துவிட்டு, தங்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையை செய்துகொள்கிறார்கள். ஆண்கள் வாசெக்டமி செய்துகொள்வது தவறு, உடலுக்குத் தீங்கானது, ஆண்மைக்கு அவமானம் போன்ற தவறான எண்ணங்களைக் கைவிட வேண்டும். மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க, 'இதை’ வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

பு.விவேக் ஆனந்த்