Published:Updated:

மனமே நலமா?-39

டாக்டர் கணேசன், மனநல மருத்துவர், மதுரை

மனமே நலமா?-39

டாக்டர் கணேசன், மனநல மருத்துவர், மதுரை

Published:Updated:

'என் மகன் சரவணனுக்கு 21 வயசு. அவன் எங்களை அப்பா அம்மாவாகவே ஏத்துக்க மாட்டேங்கிறான், குளிக்கவும், சரியா சாப்பிடவும்  மறுக்கிறான். கோயில், பூசாரிங்க, பேய் ஓட்டுறவங்ககிட்ட எல்லாம் போயிட்டு வந்துட்டோம். எந்த பிரயோஜனமும் இல்லை. நண்பர்கள் உங்ககிட்ட கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. அதான் வந்தோம்.  ஆனா, அவன் வீட்டைவிட்டு வெளிய வர மாட்டேங்கிறான். நீங்கதான் எப்படியாவது என் மகனைக் காப்பாத்தணும்' என்று கண்ணீர் வடித்தனர் நாகராஜ், சரளா தம்பதியினர்.

மனமே நலமா?-39

குளித்துப் பல நாட்கள் ஆகி, மிகவும்  அழுக்காக இருந்த சரவணன், மூர்க்கமாக நடந்து கொண்டான். வீட்டைவிட்டு வெளியே வந்தால் கொலை செய்துவிடுவார்கள் என்று முரண்டுபிடித்த அவனை அமைதிப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம்.

சரவணன் பற்றி அவனது அப்பா நாகராஜ் சொன்னார். 'நானும் என் மனைவியும் அரசு ஊழியர்கள்.  எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். சரவணன்தான் மூத்த பையன். சுமாராதான் படிப்பான். எட்டாவது வரைக்கும் பிரச்னை இல்லாம போயிட்டு இருந்துச்சு. ஒன்பதா

வதுக்கு வேற ஸ்கூல் மாத்தினோம்.  இரண்டு மாசம் எந்தப் பிரச்னையும் இல்லை. திடீர்னு ஒருநாள், 'ஸ்கூல்ல எல்லாரும் என்னைத் திட்றாங்க. என்னைப் பத்தியே பேசுறாங்க’ன்னு சொல்ல ஆரம்பிச்சான். கடைசியில் 'நான் இனிமேல் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்’னு சொல்லிட்டான். ஸ்கூலுக்குப் போய் விசாரிச்சா, அங்க 'அவன் யார்கூடயும் சரியா பேசுறது இல்லை. எப்பவும் ஒருவிதப் பயத்தோடயே இருக்கான்’னு சொன்னாங்க. நாங்க எவ்வளவோ சொல்லியும்,கேட்கலை. ஒன்பதாவதோட ஸ்கூல் போறதையே நிறுத்திட்டான்.

மனமே நலமா?-39

சரி, அவன் விருப்பப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டோம். நாங்க வேலைக்குப் போனதும் இவன் போர் அடிக்குதுனு கிளி, எலி, புறா வளர்க்க ஆரம்பிச்சான். முதல்ல ஒண்ணு இரண்டுதான் வளர்த்தான். நாளாக நாளாக அதிகமாயிடுச்சு.பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைபோடவும், 'புறா, எலி எல்லாம் வளர்க்கக் கூடாது’ன்னு சொன்னோம்.  உடனே, சண்டைக்குவர ஆரம்பிச்சுட்டான். அவன் நடந்துகிட்ட விதத்தைப் பார்த்துப் பயந்துட்டோம். என் மகனுக்கு என்ன பிரச்னைனு புரியலை. 'ஏன் வீட்டைவிட்டு வர மாட்டேங்கிறான்னு கேட்டா, 'பக்கத்துல இருக்குறவங்க, ரோட்டுல போறவங்க எல்லாருமே என்னைத் தப்புத்தப்பாப் பேசுறாங்க.  எப்பவும் என்னைப் பத்தியே பேசிட்டு இருக்காங்க.  ஆண்மை இல்லாதவன்னு கிண்டல் பண்றாங்க’னு சொன்னான்.  

ஒரு கட்டத்துல, நாங்க அவனோட அப்பா, அம்மா இல்லைன்னும், எங்கே இருந்தோ அவனைக் கடத்திட்டு வந்துட்டதாகவும், அவன் அப்பா அம்மா வேற ஊர்ல இருக்கிறதாகவும் சொல்ல ஆரம்பிச்சான். பல கோடி ரூபாய் சொத்தை நாங்க ஏமாத்தி வாங்கிட்டதாகவும் சொல்றான். கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட, நாங்க அவனைக் கொலை செய்ய முயற்சிக்கிறதா சொல்லி எங்ககிட்ட ரொம்பவே ரஃப்பா நடந்துக்கிட்டான்.  எங்களை அடிக்கவும் திட்டவும் செஞ்சான்.  தனக்குத்தானே பேசறது, சிரிக்கிறதுனு, தனி உலகத்துல  இருக்கிறான். எங்கயாவது கூப்பிட்டா 'என்னைக் கொலை செய்யக் கூப்பிட்டுப் போறீங்களா?’னு தாக்க ஆரம்பிச்சிடறான்.  ஒருதடவை, அவன் தங்கச்சியை அடிச்சிட்டான்.  அவனை வீட்டுல வைச்சுப் பார்த்துக்க முடியலை... அதனாலதான் உங்ககிட்ட வந்தோம்' என்றார்.

சரவணனுக்கு  'ஸ்கீசோப்ரெனியா’ பாதிப்பின் ஒருவகையான 'கேப்கிரஸ் சிண்ட்ரோம்’  (Capgras syndrome) இருப்பது தெரிந்தது. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் அப்பா, அம்மா, கணவன், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் என நெருக்கமானவர்களைப் பற்றிய ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். இதனால் அவர்களை யார் என்றே தெரியாமல், தான் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்போல நினைத்துக்கொள்வார்கள். இது மூளையில் 'டோபோமைன்’ என்ற ரசாயனத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இது மரபியல் ரீதியானது. சரவணனின் அம்மா வழியில் இதுபோன்ற பிரச்னை இருந்தது தெரியவந்தது.

மனமே நலமா?-39

சரவணனுக்குப் படிப்பில் விருப்பம் இல்லை. சரியாகப் படிக்காததால் வீட்டில் திட்டிக்கொண்டே இருந்திருக்கின்றனர். அதேபோல பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் அவனைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. அவனால் கஷ்டப்பட்டுப் படிக்க முடியவில்லை. இந்த நிலையில் திட்டும் சேரும்போது அவனது புத்திசாலித்தனம் (Intelligence) குறைகிறது. இதனால் பயம், மன அழுத்தம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து கேப்கிரஸ் நோயாக வெளிப்பட்டிருக்கிறது.

சரவணனை உள்நோயாளியாக அனுமதித்து 'டோபோமைன்’ அளவைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் அளிக்கப்பட்டது. இதனுடன் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ஒரு வாரத்தில் சரவணன் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 'சரவணனுக்கு தேவை அன்பும், ஆதரவும், அரவணைப்பும்தான். அது கிடைக்காததால்தான் பெற்றோரிடமிருந்து விலகியிருக்கிறான்’ என்று அவனது பெறறோருக்கும் கவுன்சலிங் அளித்தோம். ஒரு மாதம் தொடர் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு, மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட காலத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தி, டிஸ்சார்ஜ் செய்தோம்.

சரவணன் இப்போது யாரும் தன்னைப் பற்றி பேசுவதாகவோ, தன்னைப் பற்றி குறை சொல்வதாகவோ நினைப்பது இல்லை. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வருகிறார்.

தொகுப்பு: பா.பிரவீன் குமார்