ஸ்பெஷல்
Published:Updated:

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

ஆர்.மகேஸ்வரி, சேலம்

'என் ஒரே மகன் வினய் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறான். சிறு வயது முதல் என் சொல்படி கேட்டு வளர்ந்தவன், சில மாதங்களாக என்னையும், என் கணவரையும் மதிப்பதே இல்லை. நாங்கள் எதைச் சொன்னாலும், 'உங்களுக்கு என்ன தெரியும் வாயை மூடுங்க’ என்கிறான். எனது மகனுக்கு எந்தவித தவறான பழக்கங்களும் இல்லை, நன்றாகவே படிக்கிறான். இருப்பினும் என் மகனின் சமீபத்திய நடவடிக்கைகள் எனக்குக் கவலை உண்டாக்குகிறது. நான் என்ன செய்வது?'

கன்சல்டிங் ரூம்

'உங்களுக்கு மட்டுமல்ல. அனைத்துப் பெற்றோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைதான் இது. சிறுவயதில் குழந்தைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தாலும் கல்லூரிப் பருவ காலங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்லும்_போது, அவர்கள் நிறைய அனுபவங்களை சந்திப்பார்கள். 'எந்தவிதத் தவறான பழக்கமும் இல்லை, நன்றாகப் படிக்கிறார்’ என்று சொல்கிறீர்கள், கவலை வேண்டாம். உங்கள் மகன் சொல்வதைக்  காதுகொடுத்துக் கேளுங்கள். 'நீ அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது’  எனக் கட்டளையிடாமல், அவர் போக்கிலேயே விடுங்கள். உங்கள் மகனின் முடிவுகள் தவறு எனத் தெரிந்தால், அதைப் பக்குவமாக அவருக்குப் புரியவையுங்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், உங்களது குடும்பத்தின் நிலைமை, எதிர்காலத் திட்டம் போன்றவற்றைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் மகன் உங்களது முடிவுகளில் குறுக்கிட்டால், அவரை நிராகரிக்க வேண்டாம். அவர் சொல்வதில் நியாயம் இருந்தால், உங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்வதில் தவறு இல்லை. நமது கருத்துக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்ற உணர்வு உங்கள் மகனுக்கு வரும்பட்சத்தில், அவரது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காமல் சரியாகச் செயல்படுவார். தேவைப்பட்டால், மகனை அழைத்துக்கொண்டு, மனநல நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.'

ம.அகிலன், மானாமதுரை

நான் ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியன். எனக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறது.இதனால் எனக்கு மாரடைப்பு வரலாம் என நினைக்கிறேன். மாரடைப்பு வந்தால்  என்ன முதல் உதவி செய்வது, மாரடைப்பு வருவதை எப்படி உணர்வது?

கன்சல்டிங் ரூம்

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு  மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.  இதைத் தடுக்க ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதே முதல்கட்டமான நடவடிக்கை. சர்க்கரை நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் போன்றவர்களுக்கும் மாரடைப்பு வர கூடுதல் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க தினமும் நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, ரத்த அழுத்தத்தை தடுக்கும் மாத்திரைகள் மேற்கொள்வது அவசியம். இடது பக்க நெஞ்சுவலி, இடது தோள்பட்டை, இடது கை வலிப்பது, மூச்சு திணறல், படபடப்புடன் கூடிய வியர்வை போன்றவை  தொடர்ந்து இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறி எனவே உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை நாடுங்கள். மாரடைப்பு வருமோ என பயம் கொண்டிருந்தால், மருத்துவரை கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுங்கள்.

ர.சந்திரன், காஞ்சிபுரம்.

எனக்கு வயது 22. உயரம் 153 செ.மீ, உடல் எடை 47 கிலோ இருக்கிறேன். நான் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடுவது இல்லை. உடல் எடை கூட என்னென்ன சாப்பிட வேண்டும்?

கன்சல்டிங் ரூம்

பி.எம்.ஐ என்பது உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதை அறியப் பயன்படும் ஒரு குறியீடு. பி.எம்.ஐயைப்  பொறுத்தவரையில் உங்கள் உடல் எடை  ஆரோக்கிய மானதுதான். எடை கூட வேண்டும் என ஆசைப்படுபவர்கள்,  30 கிராம் பாதாம் அல்லது வால்நட், 5 பேரீச்சை,  வாழைப்பழம்,  கொழுப்பு நிறைந்த  இரண்டு கிளாஸ்  பால் தினமும் அருந்தவேண்டும். முட்டையில் புரதச்சத்து அதிகம் என்பதால், தினமும் முட்டை சாப்பிடலாம். ஆப்பிள் அல்லது வாழைப்பழத்தை மில்க் ஷேக் செய்து, பாதம் பருப்பு சேர்ந்து அருந்தலாம். முட்டை அல்லது சீஸ் சாண்ட்விச் சாப்பிடலாம்.

2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடுங்கள். எண்ணெயில் வறுத்த  உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், நீங்கள் சாப்பிடும் அளவை அதிகரித்து, சிறு சிறு உடற்பயிற்சிகளை முறையாகச் செய்வதன் மூலம், உடல் எடையை நிச்சயம் அதிகரிக்க முடியும்.

- ஷிவ்நாராயணன், கோரிப்பளையம்

“என் தலைமுடியை எவ்வளவு முறை சீவினாலும் படிவதே இல்லை. வறண்டு காணப்படுகிறது,  இதனால், எனது தோற்றத்தைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்கிறார்கள். தலைமுடியை அழகாக்குவது எப்படி?”

“தலைமுடியை சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், என்னதான் தலைமுடியை சீவினாலும் படியவே படியாது. உங்களுக்கும் இதுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தலை குளிக்க, சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள். உப்புத் தண்ணீரில் குளித்தால், தலைமுடி பிசுபிசுப்புடனும் வறண்டும் காணப்படும். மேலும், தலை முடி கொட்டுவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு. முடியைப் படியவைக்க தினமும் தலையில் எண்ணெய் தேய்த்துச் சீவுங்கள். அப்படியும் படியவில்லை எனில், அழகுக்கலை நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

கன்சல்டிங் ரூம்

பொதுவாக, முடியைப் பராமரிக்க முதலில் ஹேர் ஸ்பா சிகிச்சை செய்துகொள்ளலாம். ஹேர் ஸ்பா சிகிச்சையின் மூலம் தலைமுடியின் தன்மை, பொடுகுப் பிரச்னை பற்றி அறியலாம். அதன் பிறகுதான் உங்களுக்கு எந்த வகையில் முடியை அழகுபடுத்தலாம் என்பது முடிவுசெய்யப்படும். ஹேர் ஸ்பாவுக்குப் பிறகு நிரந்தரமாக முடியை சீராக வைத்திருக்க வேண்டும் எனில், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் (Hair Straitaning) செய்யலாம். இதன் மூலம் ஆறு மாதங்கள் வரை முடியை ஒரே சீராக வைத்திருக்க முடியும்.

தலைமுடியை உடனே அழகாக்க வேண்டும் எனில், அயனிங், ப்ளோ ட்ரை (Blow Dry) போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம், இரண்டு முதல் மூன்று நாட்களுக்குத் தலைமுடி அழகாக இருக்கும். இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு, உங்கள் தலைமுடியின் தன்மைக்கு ஏற்ப ஷாம்பூ மற்றும் கண்டிஷனரைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், தலைமுடியை உடையாமல் பாதுகாக்கும் தரமான சீரம் (Serum) பயன்படுத்த வேண்டும். ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங், ஹேர் கலரிங் செய்துகொள்பவர்கள், முதலில் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.”