Published:Updated:

அலைபாயுதே...

அலைபாயுதே...

அலைபாயுதே...

அலைபாயுதே...

Published:Updated:
அலைபாயுதே...

அன்றைக்கு வழக்கமான எந்த அலுவலக மீட்டிங்கும் இல்லை. நீங்கள் முடிக்க வேண்டிய எந்த வேலையும் கழுத்தை நெரித்துக்கொண்டு இல்லை.  உற்சாகமாக வீட்டில் இருந்து கிளம்பு கிறீர்கள்.  போகும் வழியிலேயே, சட்டென்று உங்கள் மனநிலை மாறிப் போகிறது. என்னவென்று தெரியாத ஒரு பதற்றமும் சோர்வும்.  டெட்லைன் மீட்டிங்குகளில் மேலதிகாரி கடித்துக் குதறக் காத்திருக்கிற பொழுதுகளில்கூட இந்தப் பதற்றம் இருந்தது இல்லை. ரிலாக்ஸாக இருக்க வேண்டிய நேரத்தில் எதற்குப் பதற்றம் எனக் குழம்பிப்போகிறீர்கள்.

என்றைக்கும் சேட்டை செய்கிற குழந்தை இன்றைக்குப் பார்த்து அமைதியாக விளையாடிக்கொண்டிருக்கிறது. விளையாட்டின் இடையே அதன் பொம்மையைக் கீழே தவறவிடுகிறது. மிகச் சிறிய அந்த ஒலி உங்களை எரிச்சல்படுத்துகிறது. ஓடிப்போய் வேகமாக குழந்தையை அடிக்கிறீர்கள். அதே குழந்தை உச்சகட்டமாய் வீட்டை ரகளை செய்தபோதெல்லாம் அமைதியாய் கையாண்டது நீங்கள்தான். அடித்த வலி தாங்காமல் குழந்தை அலறி அழுகிறது. 'ஏன் அடித்தோம், எனக்கு என்னவாயிற்று'' எனக் குழம்புகிறீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உற்சாகமாக ஒரு சுற்றுலா கிளம்புகிறீர்கள். அங்கே போய் எப்படிஎல்லாம் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பது என முன்னரே திட்டமிடுகிறீர்கள். அந்தப் பயண நொடிகளுக்காக உற்சாகமாகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கனவு பூமிக்குப் போய் இறங்கியதும், மனம் எவ்வளவு குதூகலித்திருக்க வேண்டும். ஆனால் சட்டென வெறுமையாக உணர்கிறீர்கள். உங்களை சந்தோஷப்படுத்தும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த எதுவும் உங்களை மகிழ்ச்சிப்படுத்தவே இல்லை. ஏரியில் போட்டிங் போகலாம் என அழைக்கும் உங்கள் மனைவி, குழந்தைகளைப் பார்த்துக் கோபம் வருகிறது. அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று தோன்றுகிறது. திடீரென அந்த மலை நகரின் வானிலையைப் போலவே உங்கள் மனநிலை சட்டென மாறிப்போகிறது. பயணம் திட்டமிட்டபடியே இனிமையாகிறது. அப்படியெனில் இடைப்பட்ட நேரத்தில் என்னவாகியிருந்தது?

காதலனை சந்திக்க வெகுநேரமாய் கடற்கரையில் காத்திருக்கிறீர்கள். வெகுநாட்கள் கழித்து அவனைச் சந்திக்கப்போகும் மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிகிறது. என்னவெல்லாம் பேச வேண்டும் என்று மனதுக்குள் ஒரு படம் ஓட்டிப் பார்க்கிறீர்கள்.  உங்கள் காதலன் உங்களை நோக்கி வருகிறான். சட்டென ஒரு தனிமையை உணர்கிறீர்கள். அவனிடம் பேச உங்களுக்கு எதுவும் இல்லை. அன்போடு வந்தவனிடம் சிடுசிடுக்கிறீர்கள். '’என்னாச்சு, நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?' என்று வாஞ்சையோடு கேட்கும் காதலனிடம் எரிந்து விழுகிறீர்கள். '’கிளம்பலாம் வா'' என அவசரப்படுத்துகிறீர்கள். அவனது பைக் பில்லியனில் அமர்ந்து உங்கள் வீட்டை நெருங்கும் தருணத்தில் அவன் மீது உங்களுக்கு அன்பு பெருகுகிறது. கடற்கரையில் என்னவாயிற்று என உங்களையே நொந்துகொள்கிறீர்கள்.

அலைபாயுதே...

படுக்கையறையில் அத்தனை சுவாரஸ்யம் காட்டாத உங்கள் மனைவி அன்று தன்னை பிரமாதமாகத் தயார்படுத்திக்கொள்கிறார். '’ஆஹா'' என்று ஆசையோடு படுக்கை அறைக்குள் நுழைகிறீர்கள். சட்டென ஒரு வெறுப்பு உங்கள் மனதில் தோன்றுகிறது. எதுவும் செய்ய முடியாமல் விட்டத்தை வெறிக்கிறீர்கள். சலிப்பில் உங்கள் மனைவி புரண்டு படுத்துத் தூங்கி விடுகிறார். சில நிமிடங்களில் உங்கள் மனநிலை அப்படியே மாறுகிறது. ரொமான்ஸ் கரைபுரண்டு ஓட, மனைவியை திரும்பிப் பார்த்தால் மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். அவரது ரொமான்ஸை நிராகரித்த குற்றவுணர்வு உங்களுக்கு வருகிறது. என்னவாயிற்று திடீரென என குழம்பிப் போகிறீர்கள்.  

மனம் ஏன் இப்படி விடாமல் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கிறது? திடீர் வெறுமைக்கும், திடீர் குதூகலத்துக்கும் என்ன காரணம்? மாலை சூரியன் மறைவதைப் பார்த்தால், சிலருக்கு மனம் வெறுமையாகிவிடுகிறது. ஒற்றைப் பனைமரத்தைப் பார்த்தால், தன்னந்தனியாக நிற்கும் யூகலிப்டஸ் மரத்தைப் பார்த்தால் சிலர் சோகமாகி விடுகிறார்கள். எங்கோ தூரமாக கேட்கும் ஒரு பாடல், அன்றைய நாளை மிகத்  துயரமாக உணரச்செய்கிறது.  நம் வாழ்வின் பல நிகழ்வுகள், நம் ஆழ்மனதில் ஆணியடித்தது போல அழியாமல் பதிந்து போயுள்ளது. மூட் ஸ்விங்கில் ஆழ்மனதின் பங்கு மிக அதிகம்.  மூளையில் ஏற்படும் திடீர் ரசாயன மாற்றங்களும் நம் மனநிலையை அந்தரத்தில் ஊசலாடவிடுகிறது.

ஒரு சில நிமிடங்களில் மனநிலை ஊஞ்சலாட்டம் நின்று போனால், பிரச்னை இல்லை. அதுவே தீவிரமானால்,  அது மனநோய். டீன் ஏஜ் பருவத்தில், பீரியட்ஸ் நேரத்தில், குழந்தை பேற்றின் சில நாட்களில், மெனோபாஸ் நேரத்தில் என அதிகம் மூட் ஸிவிங்குக்கு ஆளாவது பெண்களே என்றாலும், ஆண்களும் இந்த ஊசலாட்டத்திலிருந்து தப்புவதில்லை. இதற்கு என்ன காரணம், எப்படித் தவிர்ப்பது, எது நார்மல், எது சீரியஸ்?  மன ஊசலின் சுவாரஸ்யங்களைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் பார்ப்போம்.

(ஊசலாட்டம் தொடரும்...)

ப்ரியா தம்பி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism