Published:Updated:

அந்தப்புரம் - 1

டி.நாராயண ரெட்டி, பாலியல் மருத்துவர்

அந்தப்புரம் - 1

டி.நாராயண ரெட்டி, பாலியல் மருத்துவர்

Published:Updated:
அந்தப்புரம் - 1

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெரும்பாலான விவாகரத்துகள் படுக்கை அறையில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. அதாவது, சொர்க்கமாக இருக்க வேண்டிய படுக்கை அறை,  நரகமாகிவிடுகிறது.

எத்தனையோ திருமணங்கள் கோர்ட்டுக்கு வருவதற்கு அந்தப்புர விவகாரம் காரணமாகிவிடுகிறது. மேல் தட்டுக் கூட்டம் நேரடியாகக் கோர்ட்டுக்குப் போகிறது. கீழ் தட்டு மக்களுக்கு கோர்ட் தெரியாது; சட்டம் தெரியாது. அத்தகையவர்களின் விவகாரம் வாய்ச் சண்டைகளில் ஆரம்பித்து கொலை,   தற்கொலை என போலீஸ் கேஸில் வந்து முடியும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இரண்டில் முடியாத இன்னொரு ரகம் உண்டு. அவர்கள் மிடில் கிளாஸ் சம்சாரிகள். குடும்ப மானத்துக்காக எந்த பூகம்பத்தையும் ஜீரணித்துக்கொள்வார்கள். சொல்லவும் முடியாத, மெல்லவும் முடியாத, கொல்லவும் முடியாத மௌனக் குற்றவாளிகள் அவர்கள். மொத்தத்தில் சர்வ குற்றங்களின் பின்னணியிலும் ஏதோ ஒரு புள்ளியில் காமம் ஒளிந்திருக்கிறது.

தங்கள் இனம் தழைப்பதற்காக ஒவ்வொரு ஜீவராசியின் மூளையிலும் எழுதப்பட்ட இந்த 'இயற்கை ஆர்வம்’ எப்படி பலான விவகாரம் என்றும் அஜால் குஜால் என்றும் வர்ணிக்கப்பட ஆரம்பித்தது? வக்கிரமாக, கிளுகிளுப்பாக, சரோஜா தேவி புத்தகமாக, ட்ரிபிள் எக்ஸ்      டி.வி.டியாக... படுபாதகச் செயலாக... குற்றமாக எப்படி மாறியது?

அந்தப்புரத்தைக் கொஞ்சம் இந்தப் புறமாகத் திருப்புவதே இந்தத் தொடரின் நோக்கம். ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது தொடங்கி, முதுமை எல்லை வரை குறுக்குவெட்டாக அலசும் தொடர்... இயல்பாய் முகிழ்க்கும் ஒரு பாசம், எப்படி ஆபாசம் ஆனது என்பதை அறிய வைக்கும் தொடர்.

குளிர் காலத்திலும் சம்மர் கட் முடிவெட்டி, விபூதி வைத்து, ஒழுங்காக ஹோம் வொர்க் எழுதும் சுத்தமான பையன் அஸ்வின். புறநகர் பள்ளியில் படித்து ப்ளஸ் டூ பரீட்சையில் 91 பெர்சென்ட் வாங்கியதில் இருந்து அவன் சுத்தம் அளக்கலாம். இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தபோது, விபூதி வைப்பதும் தலையில் எண்ணெய்வைத்துப் படிய வாருவதும் படிப்படியாக மறைந்துவிட்டன. இப்போதெல்லாம் கண்ணாடி முன் அதிக நேரம் செலவாகிறது அவனுக்கு. சினிமா போஸ்டர்களில், இதுவரை கவனிக்காத வேறு ஏதோ விஷயம் புரிகிறது. இதுவரை பார்த்த சினிமா ஆடலும் பாடலும் இப்போது வேறு எதையோ சொல்லியது.

அந்தப்புரம் - 1

ஃப்ரெண்ட் வீட்டில் இன்டெர்நெட் கனெக்க்ஷன் இருக்கிறது. கூடவே சுதந்திரமும். இரவில் மாணவர்களின் கம்பைண்டு ஸ்டடி. இன்டெர்நெட்டில் எலெக்ட்ரோ மேக்னெடிஸத்துக்கான தியரிகளைத் திரட்டியபோது, வேறு சில வலைதளங்களும் 'பார் பார்’ என்றன. அன்று இரவோடு இரவாக புராஜெக்ட் முடிக்க வேண்டியிருந்தது ரமேஷ் வீட்டில் ஆறு பேர் குழுமியிருந்தனர். 11 மணி இருக்கும். ''பாக்கலாமா?'' என்று ஆரம்பித்தான் பத்ரி. ஆறு பேருமே அதற்காகத்தான் படிக்கவே வந்தது மாதிரி அமைதியாக இருந்தனர்.

எலக்ட்ரானிக்ஸ் தளங்களை மினிமைஸ் செய்துவிட்டு, படுக்கை சைட்கள் அணிவகுத்தன. பரஸ்பர மௌனங்களுடன் எதற்காகவோ எல்லோரும் எச்சில் விழுங்கினார்கள். சட்டென அந்த இடம் அமைதியாகிவிட்டது. படம் ஓட ஓட, பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உடம்பில் உஷ்ணம் பரவியது. ஆண் உறுப்பில் அனிச்சையாக ஏதோ விபரீதம் நடப்பது தெரிந்தது. ஏதோ திரவம் வடிவதை உணர முடிந்தது. கால் மேல் காலைப் போட்டு அதைக் கட்டுப்படுத்த நினைத்த நினைத்தான் அஸ்வின். சில பசங்கள் கவிழ்ந்து படுத்து உருண்டனர்.

பார்த்ததையே பார்த்துக்கொண்டிருந்தாலும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. ஒவ்வொரு சைட்டும் ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கட்டினால்தான் மேற்கொண்டு பார்க்க முடியும் என்று கிரெடிட் கார்டு டீடெய்ல் கேட்டது. இதற்கு மேல் பார்ப்பது நல்லதல்ல என்று உள்ளுக்குள் அலாரம் அடித்தது. இன்டெர்நெட்டை அணைத்துவிட்டு, ஒவ்வொருவராக பாத்ரூம் போய் வந்தனர். பிசுபிசுப்பாக வடிந்த திரவம், எல்லோர் மனதிலும் அச்சமாகவும் ஆர்வமாகவும் ஒட்டியிருந்தது.

கதையும் காரணமும்பருவம் வந்த ஆணின் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

ஆணுறுப்பு என்பது ரப்பர் குழாயைப் போல உருளை வடிவமானது. அதனுள் மூன்று உருளை வடிவக் குழாய்கள் உண்டு. ஒவ்வொன்றும் விரிவடையும் தன்மையுள்ள திசுக்களால் ஆனவை. இந்த மூன்று உருளைகளும் இணைந்துதான் ஒரு உருளையாக வெளிப்புறத்தில் நமக்குத் தெரிகிறது. இதன் கூம்பு போன்ற முனைப் பகுதியை ஆண்குறியின் தலை என்கிறோம். இந்த முனைப் பகுதியில் ஆணுறுப்பின் தோல் ஒட்டாமல் இருக்கிறது. முனைப் பகுதித் தோலின் உட்புற சுரப்பிகளில் டீன் ஏஜ் பருவத்தில் சில கசிவுகள் ஏற்படத் தொடங்கும். அவை முனைப் பகுதியின் தோலுக்கு உட்புறத்தில் சீஸ் போன்ற பிசுபிசுப்புடன் திரண்டு நிற்கும். அதை ஸ்மெக்மா என்பர். அதை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் கிருமி பாதிப்பு ஏற்படும்.

போர்னோ படம் பார்த்த அந்த இளைஞர்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றம் என்ன?

அந்தப்புரம் - 1

அத்தகைய படங்களைப் பார்க்கும்போது ஆணுறுப்பின் உள்ளே உள்ள உருளைகளில் ரத்தம் நிரம்புகிறது. அதனால் ஆணுறுப்பில் விரைப்பு ஏற்படுகிறது. விரைப்பின் போது ஆணுறுப்பு சுமார் மூன்று முதல் ஐந்து அங்குலம் நீளமாகிறது. உடலில் ஓடும் ரத்த ஓட்ட அமைப்பு அந்த நேரத்தில் ரத்தத்தை ஆணுறுப்பை நோக்கித் திருப்புவதால், அந்த மாற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பாலுறவுக்கான லூப்ரிகன்ட் திரவங்கள் சுரக்கின்றன. அந்தப் பையன்களின் ஆணுறுப்பின் வழியாக வெளியேறியது விந்து அல்ல. லூப்ரிகன்ட் மட்டுமே. அது நிறமற்றதாகவும் எண்ணெய் போன்று கொழகொழப்பாகவும் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டியது இல்லை. மீண்டும் நாம் வேறு வேலைகளில் மூழ்கும்போது, அது தானாகவே நின்றுவிடும்.

விடலைப் பருவத்தில் இச்சையைத் தூண்டும் புத்தகங்களை, படங்களை, சினிமாக்களை இளைஞர்கள் ஆர்வமாகப் பார்ப்பது ஏன்?

ஓர் இனம் தழைத்து வளர்வதற்கு ஜீன்களில் எழுதப்பட்ட ஆதாரமான விதிதான் காரணம். அந்த வயதில் அப்படியான ஆர்வம் ஏற்படவில்லை என்றால்தான் தவறு. மனிதன் சமூக விலங்காக இருப்பதால், தன் இணையை அடைவதற்கு சில கட்டுப்பாடுகளை, கோட்பாடுகளை, நெறிமுறைகளை வைத்திருக்கிறான். பருவம் எய்திய ஆணோ, பெண்ணோ செக்ஸ் உணர்வுகளால் இயற்கையாகவே தூண்டப்படுகிறார்கள். அவர்களுக்குத் திரைப்படமோ, புத்தகமோ உளவியல்ரீதியான இன்பத்தை அளிக்கின்றன. அதனால்தான் அவர்கள் அதை ஆர்வமாகப் பார்க்கிறார்கள்.

ரகசியம் பகிர்வோம்

குறிப்பு: பாலியல் தொடர்பான உங்கள் சந்தேகங்களை டாக்டர் விகடன் முகவரிக்கு எழுதி அனுப்பபலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism