Published:Updated:

“ஈசல் வாங்கலையோ ஈசல்.... கிலோ 200 ரூபாய்!” சூடுபிடிக்கும் வணிகம்

“ஈசல் வாங்கலையோ ஈசல்.... கிலோ 200 ரூபாய்!” சூடுபிடிக்கும் வணிகம்
“ஈசல் வாங்கலையோ ஈசல்.... கிலோ 200 ரூபாய்!” சூடுபிடிக்கும் வணிகம்

“ஈசல் வாங்கலையோ ஈசல்.... கிலோ 200 ரூபாய்!” சூடுபிடிக்கும் வணிகம்

ரு கிலோ ஈசலின் விலை 200 ரூபாய்! ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது ஈசல் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கிலோ 200 ரூபாய்க்கு வாங்குற அளவுக்கு ஈசலில் அப்படி என்னதான் இருக்கிறது என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். தட்டான், வண்ணத்துப்பூச்சி மாதிரி ஈசலும் ஒரு பூச்சிதானே. சின்னப் பசங்க ஈசல கையில புடிச்சு விளையாடிட்டு இருப்பாங்க. அதுவும் கொஞ்ச நேரத்துல செத்துபோயிரும். இன்னும் சொல்லப் போனா ஒரு நாள் உயிரி ஈசல்-னு பேப்பர்ல, புத்தகத்துல படிச்சுருப்போம் அவ்ளோதான். ஆனா இதெல்லாம் விட ஈசலைப் பற்றி நாம தெரிஞ்சுக்க வேண்டியது விஷயங்கள் பல இருக்கு. ஈசல் பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கு. ஈசலைப் பற்றியும் அதில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.

நம் வீட்டில், தோட்டத்தில் இப்படி பல இடங்களில் கறையான் புற்று கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். அந்தக் கரையானில் இருந்து உருவாவதே 'ஈசல்கள்'. அதுவும் குறிப்பாக ராணி கறையான்கள் இடும் முட்டையிலிருந்தே 'ஈசல்கள்' வெளிவருகின்றன. கறையான் புற்றிலிருந்து வெளியேறும் ஈசல்கள் புதிதாக புற்றுக்களை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்துதான் ஈசல் புற்றுகளில் இருந்து ஈசல்கள் புடிக்கப்படுகின்றன.

ஈசல்களின் உற்பத்தி பெரும்பாலும் பங்குனி, சித்திரை மாதங்களில்தான் அதிகமாக இருக்கும். முட்டைகளில் இருந்து வெளிவரும் ஈசல் மிகச்சிறியதாக வெண்மை நிறத்தில் காணப்படும். இவை, புற்றில் உள்ள தாவர வகைகளையே உணவாக உட்கொள்கின்றன. கிட்டதட்ட ஆடி, ஆவணி மாதங்களில் நல்ல வளர்ச்சியடைந்து பழுப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன. பின்னர் மழைக்காலங்களில் புற்றை விட்டு வெளியேறுகின்றன. குறிப்பாக ஆவணி, புரட்டாசி ஐப்பசி மாதங்களில் புற்றை விட்டு வெளியேறுகின்றன. ஈசல்கள் இரவு நேரங்களில்தான், சூரியன் உதயமாகும் நேரங்களில் வெளியே பறக்கின்றன. அதேபோல் காற்றடிக்காத நேரங்களில்தான் ஈசல்கள் வெளியே வருகின்றன. அவை தானாக வெளிவராத நேரத்தில் ஈசல் பிடிப்பவர்கள் சில டெக்னிக்குகளை பயன்படுத்தி அவைகளைப் பிடிக்கிறார்கள்.

ஈசல் எவ்வாறு பிடிக்கப்படுகிறது?

ஒவ்வோர் ஈசல் புற்றின் மீதும் இரண்டு அங்குல நீளத்தில் சற்று மேடாக வாயில் போன்ற அமைப்பு இருக்கும் இதற்கு வருவு என்று பெயர். பகல் நேரத்தில் வருவு கட்டியிருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்வர். ஈசல் கொட்டை என்ற ஒரு வகை கொட்டையையும், பெருமருந்து கொடியின் வேரையும் நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்வர். இந்தப் பொடியை இரவு நேரத்தில் புற்றின் மீது செலுத்தி, ஏதாவது ஒரு விளக்கொளியை புற்றின் மீது அடிப்பார்கள். விளக்கொளியாலும், பொடியாலும் கவரப்பட்டு ஈசல்கள் வெளியே வரும். புற்றுக்குழிக்கு அருகே வலை, பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வெளியே வரும் ஈசலைப் பிடிக்கிறார்கள்.

ஈசலில் பல வகைகள் இருக்கின்றன. நெல் ஈசல். மாலைக்கண் ஈசல், கொழுந்தீசல், நாய் ஈசல் இவற்றில் நாய் ஈசலைத் தவிர மற்ற அனைத்தும் உண்ணத்தகுந்தவை.

எவ்வாறு சமைக்க வேண்டும் :

ஈசலை சாக்குப் பையில் போட்டு இரண்டு புறமும் பிடித்துக் கொண்டு குலுக்கும் போது ஈசலின் சிறகுகள் உதிர்ந்துவிடும். பின்னர் சிறகுகளை நீக்கி விட்டு காய வைக்க வேண்டும். உண்ணுவதற்கேற்ற பகுதியை அரிசியோடு சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.நேரடியாக எண்ணெயில் பொரித்து மசாலா பூரி போன்றும் சாப்பிடலாம். தேனி, கம்பம், கோயம்புத்தூர் பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானிய மாவுடன், ஈசல் பூச்சி, வெல்லம் சேர்த்து உருண்டை செய்து சாப்பிடும் பழக்கும் உண்டு. ஈசலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன.

ஈசலில் உள்ள மருத்துவக் குணங்கள் :

அவற்றைப் பற்றி சித்த மருத்துவர் செந்தில் கருணகாரனிடம் கேட்டோம் "சித்த மருத்துவத்தில் ஈசல் ‘இந்திர கோபப் பூச்சி’ என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஸ்டார்ச் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில்தான் உயிர்வாழும். இதை நேரடியாகவோ அல்லது உணவுப் பொருள்களுடனோ சேர்த்து சாப்பிடலாம். இதில் செம்பு சத்து அதிகமாக உள்ளது. இதை உணவாக உட்கொள்ளும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணமாக, உடலுக்கு சூடு கொடுக்கும். ஆண்மைத்தன்மையை அதிகப்படுத்தும். விந்தணுக்களை கெட்டிப்படுத்தும். பிராஸ்டேட் சுரப்பிகளின் வீக்கத்தை குறைக்கும். நரம்புகளை வலுப்படுத்தும் நெர்வைன் டானிக்காக (nervine tonic ) செயல்படுகிறது, ஈசலை எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தசைப்பிடிப்பு உள்ள பகுதிகளில் தடவினால் தசைப்பிடிப்புகள் நீங்கும். மேலும் இதை எரித்து சாம்பலாக்கி தண்ணீருடன் கலந்து குடிக்கும்போது கக்குவான் இருமல் சரியாகும். இதை ஜாதிக்காயுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் தேவையற்ற வலிகள் (சூலை நோய்) நீங்கும்.

ஈசலை நன்றாக அரைத்து மாவாக்கி அதனுடன் தேன்மெழுகை உருக்கி எடுத்த எண்ணெயை கலந்து உறைய வைக்கவேண்டும். இந்த க்ரீமை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குணமாகும். இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் (hemiplegia), முகவாதம் (facial paralysis) போன்ற நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது." என்கிறார்

இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிறிய செடிகள், பூக்கள், உயிரினங்களில் கூட ஏராளமான மருத்துவக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. பல லட்சம் செலவு செய்தாலும் தீர்க்க முடியாத வியாதிகளைக் கூடிய சிறிய மூலிகைகள், உயிரினங்கள் தீர்த்து விடுகின்றன.  எனவே இயற்கையையும், நம் பாரம்பர்யத்தையும் காப்போம்! நலமோடு வாழ்வோம்!

அடுத்த கட்டுரைக்கு