Published:Updated:

உடல்நலமில்லா குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா..? கவனம்!

உடல்நலமில்லா குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா..? கவனம்!
News
உடல்நலமில்லா குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா..? கவனம்!

உடல்நலமில்லா குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா..? கவனம்!

திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் குழந்தை பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்’ என்று மனதளவில் நிர்பந்திக்கும் சமூகத்துக்கு ஒரு கேள்வி? உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதுக்கு தன்னம்பிக்கையையும் கொடுத்து குறை நிறைகளைக் கையாளும் பக்குவத்தோடு உங்கள் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்களா? குழந்தைக்கு தன் ஐந்தாவது வயதில்தான் நோய்களை எதிர்கொள்ளும் ஆற்றல் ஓரளவு இருக்கும். அதற்காகத்தான் நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட தாய்ப்பாலை பிறந்த குழந்தைகளுக்கு வலியுறுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், வேலைக்குச் செல்லும் பெற்றோர் பிள்ளையை வளர்க்க ஆள் இல்லாத பட்சத்தில் அவர்கள் நடக்கத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே பள்ளிக்கூடத்தில் திணித்து விடுகிறார்கள். 

அசுத்தமான இடம், சுத்தமில்லாத உணவு, மாசுநிறைந்த தண்ணீர், பிற குழந்தைகளிடம் இருந்து பரவும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் தொற்று நோய்கள் (Communicable Diseases) பரவுகின்றன. அதன் கடுமையை எதிர்கொள்ள முடியாமல் பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதைவிட,  ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகனின் உயர் படிப்புக்கான தொலைநோக்குச் சிந்தனையிலேயே பெரும்பாலான பெற்றோர் அக்கறை காட்டுகிறார்கள். 
எத்தனைப் போராட்டங்கள் நடந்தாலும் சரி, இப்போதிருந்தே நீட் கோச்சிங் கொடுக்கலாமா? மத்திய அரசுப் பாடத்திட்டத்தில் சேர்த்தால் எதிர்காலம் பிரகாசிக்குமா? அதற்கான சிறந்த பள்ளிக்கூடம் எங்கெல்லாம் உள்ளதென்று கூகுளில் தேடிப் பிடிக்கிறார்கள். இனிவரும் பன்னிரண்டு ஆண்டுகள் அவன் சுயமாக எதுவும் சிந்திக்கப் போவதில்லை. அவன் மூளையின் இயக்கத்துக்கான ரிமோட் கன்ட்ரோல் பெற்றோரிடம்தான் இருக்கும். ஆரோக்கியமற்ற உடலாலும் அன்புக்கு ஏங்கும் மனதாலும் நொந்துபோன மகனின் உச்சகட்ட விரக்தி மன உளைச்சல்.

அன்பு, அரவணைப்பு, பெற்றோரைப் பாதுகாத்தல், விட்டுக்கொடுத்தல், இயற்கை உணவு, விவசாயம்,  சமூக அக்கறை என எதுவும் இல்லாமலே போய்விடுகின்றன. இல்லாமல் என்பதைவிட அறியாமல் போவதுதான் நிதர்சனம். பெற்றோர்களும், ஒட்டுமொத்த கார்ப்பரேட் அரசியல் சமூகமும் உண்டாக்குகிற அடிப்படைச் சிக்கலே இதற்குக் காரணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிராமம் மற்றும் நகர்ப்புற பள்ளிக் குழந்தைகளின் ஒவ்வொரு படிநிலைகளிலும் அரசு நிச்சயமாகக் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தின் அடுத்தடுத்த மேம்பாடுகளை அமல்படுத்தும் துரிதம், குழந்தைகளின் சுகாதாரத்துக்கும் உளவியல் வளத்துக்கும் அதிகம் தேவைப்படுகிறது. கடந்த 38 ஆண்டுகளாக பள்ளிக் குழந்தைகளுக்கு சிகிச்சை செய்துவரும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர். ஆர்.எம்.எஸ். மோகன்தாஸ் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள், மனநிலை சிக்கல்கள் குறித்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“மாணவப் பருவம் இந்தியாவில் மூன்று வருடங்களுக்குள் துவங்கிவிடுகிறது. கல்வியில் முதலிடம் வகிக்கும் டென்மார்க்கில் ஆறு வயதில்தான் குழந்தைகள் பள்ளியில் அனுமதிக்கப்படுகிறார்கள். நம் தேசத்தில் கணவன், மனைவி இருவரும் அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால், குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்த்துவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் சீக்கிரமாக என் குழந்தை ஆங்கிலம் பேசவேண்டும் என்ற ஆசையில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சேர்த்து விடுகின்றனர். ஆனால், அங்கேதான் ஆரம்பிக்கிறது மன அழுத்தம். பெற்றோரின் அரவணைப்பைப் பெறவேண்டிய நேரத்தில் மழலைகள் அதை இழந்து நிற்கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் தொந்தரவு செய்யாமல் இருக்க கைபேசியை கையில் கொடுத்துவிட்டு அவர்கள் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார்கள்.

அந்தக் குழந்தைக்கு சித்தப்பா யார்? பெரியப்பா யார்? என்று கூடத் தெரியாது. வெகு சிலரே குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள். இணையச் சலுகை 300 ரூபாய்க்கு மூன்று மாதம் என்று வந்தபின் சிறுவர்கள் அதிகமாக அதில் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. நீலத் திமிங்கலம் விளையாட்டு இதனால் வந்த வினையே.

தொற்று நோய்கள் என்று பார்த்தால் சிறுவர்களுக்கு முதலில் ஏற்படுவது சளித் தொந்தரவுதான். விடுமுறையே எடுக்காமல் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற பேராசையில் உடம்பு சரியில்லாத குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பும்போது பக்கத்தில் உள்ள அப்பாவிக் குழந்தையும் இதனால் பாதிப்புக்குள்ளாகும். இதற்கு பள்ளிகளும் ஒரு காரணம். ஆம்... கண்டிப்பாக விடுப்பு மறுக்கப்படுகிறது. அம்மை நோய் (Chicken pox), தட்டம்மை, ஒவ்வாமை, வாந்தி, பேதி இதெல்லாம் சாதாரணமாக வரக்கூடிய நோய்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வைரஸ் காய்ச்சல் தவிர்க்க முடியாதது. தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதன் காரணமாக சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். மாறிவரும் இன்றைய கலாசாரத்தின் காரணமாக உணவுப் பழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டன. இதிலும் பெற்றோரின் பங்கு நிச்சயம் உண்டு. பெரும்பாலான நகர்ப்புற மாணவர்கள் obesity எனப்படும் அதிக எடையால் பாதிக்கப்படுகிறார்கள். நல்லவைகளும் நிறைய உண்டு. இளம்வயது மேதைகள் உருவாகிறார்கள்.  முன்பிருந்ததைவிட வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால் குடும்பம், அன்பு, மரியாதை இவைதான் காணாமல் போய்விட்டன. இவ்விடத்தில் ஆசிரியர்களைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. வேலையினால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதிகம் என்பதை மருத்துவர் என்றமுறையில் நான் சொல்லியாக வேண்டும். பிள்ளைகளுக்காக தங்கள் நிகழ்காலத்தை தியாகம் செய்யும் பெற்றோர்கள் வயதான காலத்தில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். காரணம் அன்பை ஊட்டி வளர்க்க மறந்ததுதான்.

இவையெல்லாம் உண்மைதான். அமெரிக்காவில் SNAP ( School Network For Absenteesm Prevention) என்ற அமைப்பு உண்டு. அதாவது பள்ளிக் குழந்தைகளின் விடுப்புக்கான காரணம் அறிந்து, வருமுன் காக்கும் அமைப்பு அது. இதற்கு The Healthy Schools, Healthy People, It’s a snap  என ஆங்கிலத்தில் அழகான விளக்கம் கொடுக்கிறார்கள். ஒரு குழந்தை விடுப்பு எடுக்கிறது என்றால் அதற்கான காரணத்தைத் தெரிவித்து தொற்றுநோய் பாதிப்பு என்றால் சரியாகும் வரை விடுப்பு அளிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து முழுமையான வருகைப் பதிவேட்டுக்கான பரிசுச் சான்றிதழுக்கு ஆசைப்பட்டு, வகுப்பில் கவனிக்காமல் போனாலும் பரவாயில்லை. உட்கார்ந்தால் போதும் என வற்புறுத்தி அழைப்பதும், வலிந்து அனுப்புவதும் தவறானதாகும்.

கை, கால், வாய் போன்றவற்றில் ஏற்படும் தொற்று நோய்கள் (HFMD), அம்மை (Chicken pox) சளி (Common cold), மலேரியா (Malaria) இன்ஃபுளூயென்ஸா (Influenza) ஃப்ளூ (Flu), டெங்கு (Dengue), டைபாய்டு (Typhoid) போன்ற காய்ச்சல் வகைகள், கண் தொற்று (Conjuctivities), விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இருந்து தொற்றும் உருளைப் புழுக்கள் (Ascaris), சொறி, சிரங்கு (Scabies), தலை மற்றும் உடலில் வரக்கூடிய பேன்கள் (Head and Body lice), உணவு, ரசாயனம், பருவகால மாறுபாடுகளால் உண்டாகும் அழற்சி (Food, Climatic and Chemical Allergies), அதிகப்படியான தூக்கம் அல்லது குழப்பநிலை (Excessive Sleepiness or Confusion), தவறுதலாக உண்ணக் கூடிய நச்சுகள் ( Ingesion of Poison), அதிக ஜூரத்தால் வரக்கூடிய வலிப்பு (Febrile convulsion), வாந்தி (vomiting), பேதி (Diarrhoea), காதில் வரக்கூடிய பூஞ்சை நோய்கள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் (Parasite) போன்றவற்றால் உண்டாகும் வயிறு, குடல் நோய்த் தொற்றுகள் (Gastero Enteritis), சிறுநீரகத் தொற்று (Urinary Tract Infection) போன்றவற்றை குழந்தைகளின் சுத்தக் குறைபாட்டினால் வரக்கூடிய பொதுவான தொற்று நோய்களாக எடுத்துரைக்கின்றனர்.

பெற்றோரின் நேரமின்மை, அயற்சியினால் மனசாட்சி இல்லாமல் குழந்தைகளின் கைகளில் பணம் கொடுத்து சிற்றுண்டிக் கடைகளில் சாப்பிடச் சொல்கின்றனர். துரித உணவுப் பழக்கத்தால் அவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன. குப்பைக் கூளங்களை அகற்றுதல், கொசு உற்பத்தியைத் தடுத்தல், உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுதல், அந்தந்த வயதில் தடுப்பூசிகள் (Immunization) போடுதல், குடற்புழு நீக்கம் (deworming) போன்றவற்றை புகைப்படங்கள், காணொளிகள் மூலமாக சுகாதார நலக் கல்வியாக (Health Education) அரசு வழங்கி வருகிறது. பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகங்களும், மாவட்டப் பள்ளிக் கல்வி குழந்தைகள் நல மருத்துவமனைகளும் கைகோத்து சரி செய்ய வேண்டிய விஷயம் இது.

ஆப்பிரிக்க நாட்டின் கம்பாலாவில் (Kampala) எட்டு முதல் பதினைந்து வயதுக்குள்ளான பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட நோய்கள் அதன் நெருக்கடிகள் அதற்காக மேற்கொண்ட சிகிச்சைகள் போன்றவற்றை தனித்தனியாகவும் குழுவாகவும் கேட்டறிந்ததுடன் குட்டிக் கதைகளாகவும் எழுதச் சொன்னார்கள். முடிவில் எந்த மாதிரியான தொற்றுகள், மன அழுத்தங்கள் பொதுவாக இருந்ததோ அதை சதவிகிதத்தின் அடிப்படையில் வகைப்படுத்தினர். அந்தக் குழந்தைகளின் பாதிப்பும் அதற்கான காரணமும் அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்படியான ஒரு இணக்கம் மாவட்ட மருத்துவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் காப்பாளர்களுக்கும் குறிப்பாக தாய் தந்தையருக்கும் இருக்க வேண்டும்.

உலகளாவிய அறிவியலையும், ஜப்பானிஷ், ஸ்பானிஷ் மொழிகளைக் கற்பிப்பதிலும் ஆர்வம் காட்டுவது இருக்கட்டும். அகம் மற்றும் புறச் சுகாதாரத்தையும் சமூக அக்கறையும் மனிதநேயமுமாகக் கொண்டாடி வாழும் வாழ்க்கைக்கு, குழந்தைகளைத் தயார்படுத்த முடிகிறதா என்று பார்ப்போம். பெண் குழந்தைகள் தரமற்ற கழிப்பறைகளுக்கு பயந்து, பாதுகாப்பின்றி மாதவிடாய் நேரங்களில் நாப்கின்களை மாற்றாமல் சிறுநீரகத் தொற்று, பிறப்புறுப்புத் தொற்று ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். சின்னஞ்சிறு குழந்தைகளை சிதைக்கும் வன்மக் கொலைகளுக்கு மிரண்டும் பதறியும் பள்ளிக்குச் செல்லத் தயங்குகின்றனர். போதாக்குறைக்கு தங்களது உடல் எடையைவிட இரண்டு மடங்கு அதிகமான புத்தகங்களைச் சுமந்து தோள்பட்டைகள் இறங்கிவிட்டன.

பள்ளிக் கூடங்கள் எண்ணிக்கைக்காகவா? வருங்காலத் தலைமுறைகளின் வாழ்க்கைக் கூடாரம் அது. எல்லாவற்றையும் அங்கிருந்துதான் துவங்குகிறார்கள். அன்பான ஆசிரியப் பெருந்தகைகளிடம் இருந்து கிடைக்கும் நன்னெறிகள், சாதியற்ற சகோதரத்துவம், புரிதலுக்கான பாட முறைகள், சுகாதாரமாக வழங்கப்படும் சத்துணவு, விளையாட்டுகள், காற்றோட்ட வசதி, தரமான பள்ளி அறைகள், தண்ணீர் வசதிகளோடு கூடிய கழிப்பறைகள் போன்றவை இருந்தால் ஆரோக்கியத்தின் விளிம்பில் நின்று ஒருவேளை புதிய பாடத்திட்டங்களை சுமக்க தமிழகக் குழந்தைகள் தயாராகலாம்” என்றார்.