Published:Updated:

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

பெற்றோருக்கு இருக்கும் பெரிய சவால்களில் ஒன்று... குழந்தைகளை சாப்பிடவைப்பது! சத்தான உணவுகளைப் பார்த்தாலே, ஏனோ குழந்தைகளுக்குப் பிடிப்பதே இல்லை. ஆனால் குழந்தைகளின் சுவையைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். சத்தான உணவுகளை அப்படியே திணிக்காமல், கொஞ்சம் கலர்ஃபுல்லாக, விதவிதமான வடிவங்களில் செய்துகொடுத்தால், நிச்சயம் விரும்பி உண்பார்கள்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வழக்கமான வட்ட தோசைக்குப் பதிலாக நிலா, நட்சத்திரம் என குட்டிக் குட்டி வடிவங்களில் தோசை ஊற்றிக்கொடுத்தால், ஆர்வத்தோடு சாப்பிடுவார்கள். கேரட், பீட்ரூட், பாலக் என பலவகை நிறங்கள்கொண்ட காய்கறி, கீரைகளை அரைத்து, லேசான உப்பு, காரம் சேர்த்து, கோதுமை மாவில் கலந்து பிசைந்து, பூரி, சப்பாத்தி, பராத்தாக்களாவும் செய்துகொடுக்கலாம். ஆரஞ்சு பராத்தா, க்ரீன் பூரி, பர்ப்பிள் சப்பாத்தி எனச் சொல்லி ஆசை ஆசையாய் சாப்பிடுவார்கள்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

குழந்தைகளுக்குப் பிடித்த சில ஹெல்த்தி உணவு வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி கண்ணப்பன். குழந்தைகளுக்கான உணவுக் குறிப்புகளை, உணவு ஆலோசகர்கள் சந்தியா மணியன் மற்றும் யசோதரை கருணாகரன் வழங்குகின்றனர்.

தேவையானவை: கேழ்வரகு மாவு  200 கிராம், வறுத்த வேர்க்கடலை  75 கிராம், வெல்லம்  50 கிராம், உப்பு  தேவையான அளவு.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

செய்முறை: கேழ்வரகு மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு அடைகளாகத் தட்டி, தோசைக் கல்லில் சுட்டுஎடுக்கவும். மிக்ஸியில் ஆறிய கேழ்வரகு அடைகளைப்போட்டு, இரண்டு சுற்று சுற்றவும். அதிலேயே வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். ராகி உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்குக் கொடுக்கவும். காரம் பிடிக்கும் என்றால் வெல்லத்துக்குப் பதிலாக கேரட், கொத்தமல்லி சேர்த்துச் செய்யலாம்.

பலன்கள்: சத்துள்ள மாலைச் சிற்றுண்டி. கேழ்வரகில் புரதம், இரும்புச்சத்து, வேர்க்கடலையில் புரதம், வெல்லத்தில் இரும்புச்சத்து  உள்ளதால், குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

தேவையானவை: கடலைப்பருப்பு, முளைக்கட்டிய பாசிப்பயறு  தலா ஒரு கப், பொடித்த வெல்லம்  ஒன்றரை கப், ஏலக்காய்  சிறிதளவு, நெய்  3 டீஸ்பூன், முந்திரி  56, பாதாம் அலங்கரிக்க.

செய்முறை: கடலைப்பருப்பை ஊறவைத்து, முளைக்கட்டியப் பாசிபயறுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துக் கிளறவும். உதிரி உதிரியாக வந்தவுடன் தட்டில் கொட்டவும். ஒரு கப் தண்ணீரில் வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்து அடங்கியதும், பருப்புக் கலவையைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும். புட்டு போல் உதிரியானதும் ஏலக்காய் தூள், சிறு துண்டுகளாக்கிய முந்திரி சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.

பலன்கள்: புரதம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது. புரதம், வளரும் பிள்ளைகளின் திசுக்களுக்கும் மற்ற உறுப்புகளின் வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து ரத்த விருத்திக்கும் அவசியமானது.  

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

வயிற்றுப் பூச்சியை நீக்க, வெற்றிலைச் சாறு, ஓமத் திரவம் (ஓம வாட்டர்), வேம்பும் மஞ்சளும் கலந்த விழுது போன்ற நம்முடைய எளிய, பாரம்பரிய வைத்தியமுறைகளைப் பயன்படுத்தலாம். இதனால், வயிற்றின் நலம் பாதுகாக்கப்படுவதுடன், நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போரிடும் திறனை உடல் பெறும்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

தேவையானவை: கேரட்  1, பால்  150 மி.லி, சர்க்கரை  2 டீஸ்பூன், பாதாம்  3, ஏலக்காய்  1.

செய்முறை: கேரட்டை தோல் நீக்கி, துண்டுகளாக்கி, ஏலக்காயுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை, பாதாம் இரண்டையும் லேசாக அரைக்கவும். இதனுடன் கேரட் சேர்த்து அரைத்து, பால் சேர்த்து, நன்கு கலக்கிப் பரிமாறவும்.

பலன்கள்: துல்லியமான கண் பார்வைக்குத் தேவைப்படும் வைட்டமின் ஏ, கேரட் மற்றும் பாலில் உள்ளது. மேலும் பாலில் உள்ள புரதம், வளரும் குழந்தைக்கு ஏற்றது.  சுவையும் சத்தும் நிறைந்த இந்த பானம், மாலையில் பருக ஏற்றது.

தேவையானவை: கைக்குத்தல் அவல்  150 கிராம், தேங்காய்த்துருவல், வெல்லப்பாகு  தலா அரை கப், பேரீச்சம்பழம்  4, முந்திரி, பாதாம், உலர் திராட்சை (மூன்றும் சேர்த்து)  50 கிராம், ஏலக்காய்த் தூள்  1 சிட்டிகை.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

செய்முறை: கைக்குத்தல் அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிடவும். இதனுடன், மற்றப் பொருட்களை சேர்த்துக், கிளறி, பரிமாறவும். இது செய்வதற்கு எளிது.

பலன்கள்: உடலுக்கு ஊட்டத்தைத் தரும். கைக்குத்தல் அவலில் பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படும், வைட்டமின்  பி உள்ளது. பேரீச்சம்பழம் மற்றும் வெல்லத்தில், அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளது.   வாழைப்பழத்துடன் சேர்த்துச் சாப்பிட, சத்துமிகுந்த மாலைச் சிற்றுண்டி இது.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

சாப்பிடும்போது ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடப் பழக்குவது நல்லது. இது, நம்முடைய செரிமான மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் உடலுக்கு உணர்த்தவும் செய்யும். மேலும், உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை நன்றாக இருக்கும். டைனிங் டேபிள் என்பது, பழங்கள், சாலட் போன்ற, விரைவாகச் சாப்பிட்டு முடிக்கக்கூடிய, உணவுகளுக்கு மட்டுமே.

வேலைக்குப் போகும் பெற்றோர், ஏதேனும் ஒரு வேளை மட்டுமாவது, குடும்பத்தில் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிடுவது போல நேரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

தேவையானவை: கேழ்வரகு மாவு, கொள்ளு மாவு  தலா 200 கிராம், பீட்ரூட்  150 கிராம், உப்பு  தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டைத் துருவி, தண்ணீர் சேர்த்து சாறு எடுக்கவும். கேழ்வரகு மற்றும் கொள்ளு மாவுடன் உப்பு சேர்த்து, பீட்ரூட் சாறை ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும். இதற்கு தக்காளி சட்னி அல்லது குருமா சுவை கூட்டும்.

பலன்கள்: கேழ்வரகில் புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. கேழ்வரகு மற்றும் கொள்ளு மாவில் கால்சியம் நிறைந்திருப்பதால், குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் பல் உறுதியாகும்.  நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்ரூட்டில் இருக்கிறது.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

தேவையானவை: கடலை மாவு  ஒரு கப், கம்பு மாவு  அரை கப், உளுந்து மாவு  ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை  ஒரு கைப்பிடி, வெங்காயம்  1, மோர்  150 மி.லி, உப்பு  தேவையான அளவு, வேர்க்கடலை  ஒரு கப், வரமிளகாய்  1, பூண்டு  2 பல், வெண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வறுத்து, பூண்டு மற்றும் வரமிளகாயைச் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். மூன்று மாவுகளையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழைபோட்டு, மோர் ஊற்றி, தோசை மாவு பதத்துக்குத் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மெல்லிய தோசைகளாக வார்த்துஎடுத்து, அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி, வேர்க்கடலைப் பொடி தூவிப் பரிமாறவும்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

பலன்கள்: குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றல், புரதச்சத்துகள் கிடைக்கின்றன. வெண்ணெயின் மூலம் வைட்டமின் ஏ மற்றும் தேவையான கொழுப்புச் சத்தும் கிடைக்கின்றன.

சாப்பிடும் முன், இந்த உணவு தயாராவதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என பிரார்த்திக்கும் பழக்கத்தை சொல்லித்தர வேண்டும்.

தேவையானவை: கேரட், வெங்காயம்  தலா 1, பூண்டு விழுது  அரை டீஸ்பூன், பழுத்த தக்காளி  300 கிராம், சர்க்கரை, மிளகுத்தூள்  தலா அரை டீஸ்பூன், துளசி  ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

செய்முறை: இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும். நறுக்கிய தக்காளி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, நன்றாகக் குழைய வதக்கவும். ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஒன்று சேர்ந்து வெந்ததும் இறக்கி, துளசி சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: காய்கறிகள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியவை. துளசி, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தொண்டைக் கபத்தை நீக்கும்.குளிர்காலத்துக்கு ஏற்ற சூப்பர் சூப் இது.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

தேவையானவை: கோதுமை மாவு  2 கப், குடமிளகாய், வெங்காயம்  தலா 1, இஞ்சி பூண்டு விழுது  ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள்  தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள்  கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சற்றே வதக்கவும். சுட்டு எடுத்த சூடான சப்பாத்தியில், நீளவாக்கில், வதக்கிய கலவையைவைத்து, இறுக்கமாகச் சுருட்டி, குழந்தைகளுக்குப் பரிமாறவும்.

பலன்கள்: மிகவும் ருசியான சப்பாத்தி. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. பள்ளிக்குக் கொடுத்தனுப்பும் மதிய உணவுக்கும், பிக்னிக் போகும்போது எடுத்துச்செல்லவும் உகந்தது.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

சிறு வயதில் இருந்தே சத்தான உணவுகளின் நன்மையைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். பாக்கெட் உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் போன்றவை எப்படித்தயாராகின்றன. அதன் தீங்குகள் என்னென்ன என்பதையும் சொல்லித்தரலாம்.  

நேரத்துக்குச் சாப்பிடுவது, ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவது, அளவாக சாப்பிடுவது என சாப்பிடும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவாருங்கள்.

தேவையானவை: நறுக்கிய கேரட், கோஸ், குடமிளகாய், பீன்ஸ்  2 கப், பாசிப்பயிறு  50 கிராம், சீரகச் சம்பா அரிசி  அரை  கப், வெங்காயம்  2, பட்டை, லவங்கம்  தலா 2, சோம்பு  அரை டீஸ்பூன், ஏலக்காய்  1, பச்சை மிளகாய்  1, மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது  ஒரு டீஸ்பூன், புதினா  ஒரு பிடி, உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மூன்று டீஸ்பூன் எண்ணெயை குக்கரில்விட்டு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, புதினா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு காய்களையும் சேர்த்துச் சற்று வதக்கவும். பாசிப் பயறை நன்றாக வறுத்து, கலவையுடன் சேர்க்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கிளறிவிட்டு, வேகவிடவும். ஒரு விசில்விட்டு, 5 நிமிடங்கள் வைத்திருந்த பின் இறக்கவும்.  

பலன்கள்: குழந்தைகளுக்குக் காய்களின் மூலம் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும், சீரகச்சம்பா அரிசியின் மூலம் வைட்டமின் பி சத்தும், பாசிப்பயறின் மூலம் புரதம் மற்றும் வைட்டமின் சியும் கிடைக்கும்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

தேவையானவை: முளைக்கட்டிய பயறு  ஒரு கப், சீரகம்  கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல்  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்  1, மஞ்சள்  2 சிட்டிகை, கொத்தமல்லித் தழை  ஒரு பிடி, புதினா  அரை பிடி, உப்பு, எண்ணெய்  தேவையான அளவு, கோதுமை பிரெட்  4 துண்டுகள்.

செய்முறை: பிரெட்டைத் தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து, சற்று தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைக்கவும். தோசை மாவு பதத்துக்குத் தண்ணீர் கலந்துவைக்கவும். காய்ந்த தோசைக் கல்லில், அரைத்த மாவில் தோய்த்துஎடுத்த பிரெட்டைப்போட்டு, லேசாக எண்ணெய் விட்டு இரு பக்கமும் டோஸ்ட் செய்யவும்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

பலன்கள்: ஆரோக்கியமான புரதம், சக்தி மற்றும் வைட்டமின் சி நிரம்பிய ருசிகரமான பிரெட் டோஸ்ட் ரெடி. முளைக்கட்டிய பயறில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். வைட்டமின் சி பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கவல்லது. மேலும், தோல் பராமரிப்புக்கும் உதவும்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

குழந்தைகளுடன் சாப்பிடும்போது, உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டக் கூடாது. உதாரணமாக, அய்யய்யே... இந்தப் பாலோட ஸ்மெல்லே எனக்குக் குமட்டுது!'' என்றோ, வாழைப்பழத்தைப் பார்த்தாலே கொழகொழன்னு ஏதோ மாதிரி அருவருப்பா இருக்கு!'' என்றோ சொல்லாதீர்கள். உங்கள் குழந்தைகளை எல்லா விதமான சுவைகளையும் மணங்களையும் அனுபவித்து ருசிக்கவிடுங்கள்.

தேவையானவை: நன்றாகப் பழுத்த அவகேடோ, வாழைப்பழம்  தலா 1, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள்  ஒரு பிடி, வெள்ளரி விதை மற்றும் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு (தேவைப்பட்டால்)  ஒரு கைப்பிடி, தேன்  2 டீஸ்பூன்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

செய்முறை: அவகேடோவை நறுக்கி, நடுவில் இருக்கும் விதையை நீக்கிவிட்டு, கரண்டியால் சுரண்டி எடுக்கவும். வாழைப்பழத்தைப் பொடியாக நறுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மத்தினால் நன்றாகக் கடையவும். அதில் தேன் சேர்த்து, பருப்பு வகைகளைத் தூவி,  குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

குறிப்பு: மாலையில் பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்காகத் தரலாம். சத்துக்கள் நிரம்பியது. அதோடு வயிறு நிறைந்து, 2 மணி நேரத்துக்கு பசிக்காது.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

பலன்கள்: அவகேடோவில், இன்றியமையாத கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. சருமத்துக்கும் உடலுக்கும் இது மிகவும் நல்லது.

தேவையானவை: இளநீர் வழுக்கை மற்றும் இளநீர்  1 (ஒரு இளநீரில் உள்ள அளவு), மாதுளம் பழ முத்துக்கள்  ஒரு கைப்பிடி, தேன்  2 டீஸ்பூன், அல்லது இனிப்புக்கு பனைவெல்லம்.

செய்முறை: இளநீர் வழுக்கை, தேன், மாதுளம் முத்துக்கள் மூன்றையும் மிக்ஸியில் போட்டு, ஸ்மூத்தாக அடித்துக்கொள்ளவும். விழுதானதும், இளநீர், தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்துப் பருகலாம்.  

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

குறிப்பு:  காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், பசிக்கும்போது குழந்தைகளுக்கு இந்த ஸ்மூத்தியைச் செய்துதரலாம். காலை உணவு சாப்பிட நேரம் இல்லாமல் ஓடும் குழந்தைகளுக்கு, இந்த ஸ்மூத்தியைக் கொடுத்து அனுப்புவது நல்லது.

பலன்கள்: இளநீர் உடலுக்குக் குளுமை தரும்.  தாது உப்புக்கள் நிறைந்தது. இதில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ் உடலுக்கு எனர்ஜியைத் தரும்.  தேன், மாதுளம்பழத்திலும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், இந்த ஸ்மூத்தி, ஒரு 'ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்’ பூஸ்ட்டாகவே இருக்கும்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

குழந்தையின் வளர்ச்சியை இன்னொரு குழந்தையுடன் (உடன் பிறந்தவர்களாக இருந்தாலுமேகூட) ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு மனிதரின் உடலும் வித்தியாசமானது. எல்லோர் உடலும் ஒரே மாதிரி இருக்காது.

தேவையானவை: பேரீச்சம்பழம்  கால் கிலோ, நொறுக்கிய வேர்க்கடலை  100 கிராம், வெள்ளரி விதை  25 கிராம், காய்ந்த திராட்சை  50 கிராம், ஏலக்காய்த்தூள் அல்லது கோகோ பவுடர்  தேவையான அளவு. (தேவைப்பட்டால் வேர்க்கடலையுடன் பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உடைச்ச கடலை போன்ற நட்ஸ் சேர்த்து நொறுக்கிக்கொள்ளலாம்).

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

செய்முறை: பேரீச்சம்பழத்தை, கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டும் அரைத்து எடுக்கலாம். அரைத்த அல்லது துருவிய பேரீச்சம்பழத்துடன், காய்ந்த திராட்சை சேர்த்து, மிக்ஸியில் போட்டு, ஒரு முறை சுற்றிஎடுக்கவும். இதில் நட்ஸ் வகைகளைச் சேர்த்து, நன்றாகக் கலந்து, எந்த 'ஃப்ளேவர்’ தேவையோ அதற்கேற்ப ஏலக்காய் பொடியோ, கோகோ பவுடரோ சேர்த்து, உருட்டி வைக்கலாம். அல்லது அவரவர் விருப்பத்துக்கேற்ப ரோல்ஸ் அல்லது வில்லைகளாகச் செய்யலாம்.

பலன்கள்:  சத்துக்கள் நிறைந்த சாக்லேட் இது. அடுப்பில் வைத்துச் சமைக்காத உணவு என்பதால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.  குழந்தைகள் விளையாடப் போகும் சமயங்களில், ஹெல்த்தி ஸ்நாக்காக இதைச் சாப்பிடவைத்து அனுப்பலாம்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

முடிந்த வரை, நம்முடைய பாரம்பரிய சிறு தானிய உணவுகளையும் இயற்கை உணவுகளையும் சிறு வயதிலிருந்தே சாப்பிடப் பழக்குவது, குழந்தைகளின் உடல் உறுதிக்கும் முழுமையான ஆரோக்கியத்துக்கும் துணைபுரியும்.

தேவையானவை: துருவிய கேரட்  ஒரு கப், தேங்காய்த் துருவல்  அரை கப், தேன்  3 டீஸ்பூன்.

செய்முறை: கொடுத்துள்ள மூன்று பொருட்களையும் கலந்துவைத்தால், 'ஸ்வீட்’ ஆன சாலட் ரெடி. செய்வது சிம்பிள்.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

பலன்கள்: ஆன்ட்டிஆக்ஸிடன்ட், பீட்டாகரோட்டீன் நிறைந்த சாலட். தேனில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட், கேரட்டில் இருக்கும் பீட்டாகரோட்டீன் ஆரோக்கியத்துக்கு நல்லது. இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்ட கேரட், சாலட்டின் சுவையை இன்னும் அதிகப்படுத்தும். கண் பார்வைத்திறன் அதிகரிப்பதுடன், கண்ணாடிபோடுவதையும் தவிர்க்கலாம்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, அவன் வளர்கிறானே!’ என்ற கவலையில், தேவை இல்லாத ஊட்டச்சத்து பானங்களையும் உணவு சப்ளிமென்ட்களையும் குழந்தைகளுக்குக் கொடுக்க நேர்கிறது. ஆனால், அவற்றின் பக்க விளைவுகள் பற்றி நமக்குப் புரிவது இல்லை. உதாரணமாக இளம் வயதில் பூப்படைதல், உடல் பருமன் கூடுதல் போன்றவை.

குழந்தைகளின் உணவில் கவனம் செலுத்துவது போலவே, அவர்கள் குடிக்கும் தண்ணீரின் அளவையும் கவனிப்பது மிக முக்கியம். அதேபோல், அவர்கள் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது எல்லாமே ஒழுங்காக இருக்கின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.

தேவையானவை: காய்ந்த மஞ்சள் மக்காச் சோளம்  ஒரு குழிக்கரண்டி, உப்பு  தேவையான அளவு, வெண்ணெய் அல்லது எண்ணெய்  2 டீஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை அல்லது நிறத்துக்கேற்ப.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

செய்முறை: ஒரு பாத்திரத்தில், சோளத்தைப் போட்டு, உப்பு, மஞ்சள்தூள், லேசான எண்ணெய் சேர்த்து, நன்றாகக் குலுக்கவும். அடுப்பில், குக்கரைவைத்து, மீதம் உள்ள எண்ணெய் அல்லது வெண்ணெயை விட்டு நன்கு காய்ந்ததும், அதில் சோளத்தைப்போட்டு, அதிகம் அழுத்தாமல் மூடிவைக்கவும். குக்கர் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும். கேஸ்கட், வெயிட் போட வேண்டாம். இரண்டு நிமிடங்கள் போதும். பாப்கார்ன் படபடவென வெடித்துப் பொரியும். விசில் போடுவதற்கான சத்தம் வந்ததும், குக்கரை லேசாக ஒருமுறை குலுக்கவும். பொரியும் சத்தம் குறையும்போது அடுப்பை அணைக்கவும்.

கவனிக்கவும்: காய்ந்த குக்கரில் சோளத்தைப் போட்டதும் மூடிவிடவும். ஏனெனில், சோளம் பொரிந்து வெளியே தெறிக்கலாம். மிதமான தீயில் சரியாக, முறையாகச் செய்ய வேண்டும். இல்லையெனில் அடிப்பிடிக்கும்.

குறிப்பு: ஸ்வீட்கார்னில் இதைச் செய்ய முடியாது. கடைகளில் 'சத்துமாவுக்குச் சேர்க்கும் மக்காச் சோளம்’ என்று கேட்டு வாங்க வேண்டும். ஒரு குழிக்கரண்டி சோளத்தில், ஒரு பவுல் நிறைய அல்லது ஒரு குழந்தைக்குத் தேவையான அளவு பாப்கார்ன் செய்யலாம்.

பலன்கள்: ஆன்டிஆக்ஸிடண்ட், நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை நிறைந்த மக்காச் சோளம் உடல் வலுவுக்கு நல்லது.

குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி!

தேவையானவை: ராகி மாவு  ஒரு கப், பொடித்த வெல்லம்  அரை கப், மசித்த பலாப்பழம்  3 சுளை அல்லது வாழைப்பழம்  1, நெய் அல்லது எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: இவை மூன்றையும் சேர்த்துக் கரைத்து,  தோசை மாவு பதத்தில் எடுத்துக்கொள்ளவும். சின்னச் சின்ன தோசைகளாக வார்த்து, நெய் அல்லது லேசான எண்ணெய் தடவி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

பலன்கள்: மிகச் சுவையான, சத்தான மாலை நேர ஸ்நாக். மதிய உணவுக்கும் கொடுத்து அனுப்பலாம். ராகி, கால்சியம் சத்து நிறைந்த தானியம். மேலும் இதில் நார்ச்சத்தும், தாதுச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ராகி மாவில் கஞ்சி, கூழ் செய்வதற்குப் பதிலாக, இது போன்ற பலகாரங்கள் செய்துகொடுத்தால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். வாழை அல்லது பலா சேர்ப்பதால், நல்ல மணமும் சத்தும் கூடுதல் ப்ளஸ். சர்க்கரையின் அளவைக் குறைத்துவிட்டு, பழத்தின் அளவை விருப்பம் போல அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

தொகுப்பு: பிரேமா நாராயணன்,

படங்கள்: கார்முகில் வண்ணன்,

பா. அருண், சி.தினேஷ்குமார், த.ஸ்ரீநிவாசன்