Published:Updated:

அலைபாயுதே...

ப்ரியா தம்பி

அலைபாயுதே...

மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும், சொல்வதை எல்லாம் கேட்க  வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும். ஆனால், நிறைவேறாத ஆசையும் அதுதான். மனதை அடக்கத்தான் முனிவர்களும், ஞானிகளும் காடு மலை தேடி , கடும் தவம் இருந்து, முயற்சித்திருக்

கிறார்கள். 'யோகா பண்ணுங்க, தியானம் பண்ணா பிரச்னை தீரும்’ என தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் மையங்களில் கூட்டம் கும்மியடிக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்ன செய்தாலும் இந்த மனம் ஏன்  கட்டுப்பட மறுக்கிறது? நினைக்கவே கூடாது என நினைக்கிற விஷயங்களையே தேடிப்பிடித்து யோசிக்கிறது. விரும்பி நினைக்கத் தூண்டுகிற முகங்களை ஞாபகங்களின் அடியில் புதைத்து அலைக்கழிக்கிறது.

மனம், ஓர் ஆச்சர்யமான புதிர். அதைப் புரிந்துகொள்வது அத்தனை எளிது அல்ல. மனதின் வேகத்தின் முன், நாம் சமயங்களில் சாதாரணமாகிப்போகிறோம். மனதைப் பின்தொடர்வது என்பது விமானத்தை சைக்கிளில் விரட்டிப் பிடிப்பதுபோல. மனதைக் கட்டுப்படுத்த முயற்சித்தால் தோல்வியே மிஞ்சும். மாறாக மனதின் மர்மங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்

பதன் மூலமே, அதை வழிக்குக் கொண்டு வர முடியும். ஓடி விளையாடும் குழந்தையை அதட்டி  உட்காரவைப்பதைவிட, 'கொஞ்சம் சேஃபா ஓடு’ எனக் கண்காணிப்போமே அதுபோல.

அமைதிக்கும் ஆர்ப்பரிப்புக்கும் இடையே மனம் தொடர்ந்து ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கிறது. கோடம்பாக்கம் பாலம் ஏறும்போது அமைதியாக இருந்த மனம், நுங்கம்பாக்கத்தைத் தாண்டும்போது துயரமாக உணருகிறது. இடைப்பட்ட ஒரு கிலோமீட்டரில் என்னதான் ஆகிவிட்டது என குழம்பிப்போவோம். காரணமற்ற இந்த மன ஊசலாட்டம்தான் மூட் ஸ்விங் (mood swing).  இதாண்டா வாழ்க்கை என சில நேரங்களிலும், என்னடா வாழ்க்கை இது என சில நேரங்களிலும் சம்பந்தம் இல்லாமல் நம்மை அலைக்கழிப்பது இந்த மூட் ஸ்விங்தான்.

நம் மனநிலையைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு, மூளையின் ரசாயனங்களுக்குத்தான் உள்ளது. இந்த ரசாயனங்களின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டாலும்,  மனநிலை இப்படித்தான் ஊஞ்சலாடத் தொடங்கி விடும். ஆனால் எல்லா நேரங்களிலும் ஊஞ்சலை ஆட்டுவது இதுவல்ல என்பதுதான் சுவாரஸ்யமே.

அலைபாயுதே...

அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான் மூட் ஸ்விங்குக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஊஞ்சலில் வேகமாக ஆடுவது இவர்கள்தான். சாதாரணமாகப் பிறர் கடந்து போகும் ஒரு சிறிய சம்பவம்கூட, இவர்களின் மனதை அந்தரத்தில் நிறுத்திவிடும். கோடம்பாக்கத்துக்கும், நுங்கம்பாக்கத்துக்கும் இடையே ஒரு பைக் கொஞ்சம் சத்தத்தோடு வேகமாகச் சென்றிருப்பது போதும் ஊஞ்சலாட்டத்துக்கு. 'இப்படியா வண்டியை ஓட்டறது. கொஞ்சம் வேகமாப் போயிருந்தா என்னாயிருக்கும்’?’ என்கிறப் பதற்றம் மொத்த மனநிலையையும் மாற்றி விடுகிறது.

கற்பனை சக்தி அதிகம் உள்ளவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஊஞ்சலின் ஆட்டம் வேகமாக இருக்கும். 'இவன் மட்டும் பைக்ல வேகமாப் போய் ஏதாவது ஆகியிருந்தா? இவனுக்கு ஒய்ஃப் குழந்தைங்க இருக்குமா? இவனை மாதிரி நாம வேகமாப் போய் நமக்கு எதாவது ஆனா, யார் யார் எப்படி வருத்தப்படுவாங்க?'' என்கிற அதீதக் கற்பனை மனதின் சமநிலையைப் பாதிக்கிறது. சில நிமிடங்கள் அதைப் பற்றியே யோசித்துவிட்டு, நம் அன்றாட வேலைகளுக்குள் மூழ்கிவிடுவோம். ஆனால், அந்தக் கற்பனை அடிமனதில் இருந்து தொந்தரவு செய்துகொண்டேஇருக்கும். எல்லா வேலைகளிலும் அது எதிரொலிக்கும். 'ஒண்ணுமே நடக்கலியே, ஏன் இப்படி டல்லா இருக்குது?'' என காரணம் தேடிக் குழப்பமடைவோம். வேகமாக பைக்கில் போனவர் ஆபீஸ் போய் அவரது வேலையை ஜாலியாக பார்த்துக்கொண்டே இருப்பார். அவரைக் காரணம் வைத்து நாம் கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டதில்தான் பிரச்னை. உங்களால் எல்லாவற்றையும் காட்சியாகத்தான் பார்க்க முடியும் என்றால், உங்கள் மனது ஊசலாடிக்கொண்டுதான் இருக்கும்.

அப்படியெனில் கற்பனை தவறா? கற்பனை செய்வதை நிறுத்தினால் ஓயாமல் ஆடும் ஊஞ்சலை நிறுத்திவிட முடியுமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் அந்தக் கற்பனைதான் ஒரு படைப்பாளியை எழுத வைக்கிறது. ஒரு விஞ்ஞானியை, என்றோ கண்டுபிடிக்கப்போகும் பொருளைப் பற்றி சிந்திக்கவைக்கிறது. அந்தக் கற்பனைதான்  பல மகத்தான கண்டுபிடிப்புகளைப் படைத்திருக்கிறது. மூட் ஸ்விங் பல நேரங்களில் கடப்பதற்கு சிரமமானதாக இருந்தாலும், அதன் விளைவுகள் அழகானவை. பறவையைப் போல நாமும் பறக்க முடியும் என்று கற்பனை செய்த ரைட் சகோதரர்களின் மனநிலைகூட, இப்படித்தான் அந்தரத்தில் ஊசலாடியிருக்கும். ஆனால், இத்தனை பேரை அந்தரத்தில் பறக்கவைத்த,  அற்புத சாதனையைப் படைத்தது அந்த ஊசலாட்டம்தான்!

ஊசலாட்டம் தொடரும்...