Published:Updated:

“ராதா மட்டுமில்லை... அல்சைமரால பாதிக்கப்பட்ட எல்லாருமே குழந்தைங்கதான்!” - #WorldAlzheimersDay

“ராதா மட்டுமில்லை... அல்சைமரால பாதிக்கப்பட்ட எல்லாருமே குழந்தைங்கதான்!” - #WorldAlzheimersDay
“ராதா மட்டுமில்லை... அல்சைமரால பாதிக்கப்பட்ட எல்லாருமே குழந்தைங்கதான்!” - #WorldAlzheimersDay

“ராதா மட்டுமில்லை... அல்சைமரால பாதிக்கப்பட்ட எல்லாருமே குழந்தைங்கதான்!” - #WorldAlzheimersDay

“நான் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு கவனமா பாத்துக்குவேன். ஆனாலும் என்னை மீறி ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியே போயிட்டா. பதறிப்போய்  மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம்ன்னு எல்லாப்பக்கமும் தேடினோம். கிடைக்கல. சாயங்காலம் 3.30 க்கு வெளியே போனவ 9.30 வரை கிடைக்கவே இல்ல. அவ கிடைக்கிற வரைக்கும் என் உயிர் என்கிட்ட இல்லை..." -  தழுதழுத்த குரலில் பேசுகிறார் கண்ணன். கண்ணனுக்கு வயது 72. அவரது மனைவிக்கு அல்சைமர் நோய். 

அல்சைமர் என்பது, எளிதாகக் கடந்து செல்லக்கூடிய வியாதி அல்ல. உலகளவில் அதிக மரணங்களுக்குக் காரணமாக இருக்கும் நோய்களில் அல்சைமருக்கு ஆறாவது இடம். உலகில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050 -ல் 100 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையே இந்த நோய் பாதிக்கிறது. இந்தியாவில் தற்போது 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2030-ல் இது மூன்று மடங்காகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அல்சைமர் என்றால் என்ன ?

இந்த நோயை 1906-ம் ஆண்டு ஜெர்மானிய நரம்பியல் மருத்துவர் அலோயிஸ் அல்சைமர் கண்டுபிடித்தார். தன்னிடம் சிகிச்சை எடுத்துவரும் நோயாளி ஒருவரின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தபோது நோயாளியின் மூளை நரம்புகளில் ஏராளமான முடிச்சுகள் இருப்பதைக் கண்டறிந்தார். இந்த நோய்க்கு அவர் 'பாராலிஸிஸ் அஜிடன்ஸ்'  என்று பெயர் வைத்தார்.  நாளடைவில் அவரின் பெயரே நோய்க்கு சூட்டப்பட்டது. 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களால்,  புதிய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளவும், பழைய விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளவும் முடியாது. அர்த்தமில்லாமல் அதிகநேரம் பேசுவார்கள். எதையும் சுருக்கமாகச் சொல்லாமல் நீண்ட நேரம் விவரிப்பார்கள். சாப்பிட்டோமா, தூங்கினோமா, அருகில் இருப்பவர்கள் யார், மகன், மகளின் பெயர்கள் என்ன... இப்படி அனைத்தையும் மறந்திருப்பார்கள். 

ஏன், கண்ணாடி முன்னின்று பார்த்தால் தன்னையே அடையாளம் காண முடியாத அளவுக்கு மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இந்த நோய்  எதனால் ஏற்படுகிறது?

ப்ரிசெனிலிஸ்- 1, ப்ரிசெனிலின்ஸ் -2, அமிலாய்டு ப்ரிகர்சர் புரோட்டீன் போன்ற ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றம்தான் இந்தநோய் உண்டாவதற்கான காரணம். அதுமட்டுமல்லாமல் மன அழுத்தம், அதிகமாக கோபம், பதற்றப்படுவது, தலையில் ஏற்படும் காயம் ஆகியவற்றாலும் அல்சைமர் நோய் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதன் அறிகுறிகள்! 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று விதமான அறிகுறிகளை வைத்து நாம் எளிதில் கண்டறியலாம். அவை அறிதிறன் சார்ந்த  குறியீடுகள்( cognitive symptoms). அதாவதுதான் வசிக்கும் இடம், தன்னுடன் வசிக்கும் நபர்கள் என அனைத்தையும் மறந்திருப்பார்கள், மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாது. 

அடுத்ததாக, நடத்தைப் பிறழ்வுகள் (Behavioural changes). தினமும் க்ளீன் சேவ் செய்துகொண்டிருந்த ஒருவர் திடீரென்று அதைச் செய்யாமல் தாடியுடன் பல நாள்கள் இருப்பது, பல வருடங்களாக மிகவும் அன்பாகப் பேசிக்கொண்டிந்த ஒருவர் திடீரென்று மிகவும் கோபமாகப் பேசுவது, இப்படி பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுவது இந்த நோயின் அறிகுறி. 

மூன்றாவது, வாழ்க்கை முறை மாற்றம் ( Change in everyday activities)  காலையில் பல் துலக்க, குளிக்க, பாத்ரூம் போக இப்படி அனைத்தையும் மறந்துவிடுவது.

அல்சைமர் நோயின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள கண்ணனின் அனுபவங்கள் நமக்குப் பெரிதும் உதவும். கண்ணன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூடிவ்வாக 30 வருடம் பணிபுரிந்து ரிட்டையர்டு ஆனவர். 

"ஒரு உறவுக்காரரோட திருமணத்துலதான் இவளுக்கு இந்த பாதிப்பு இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். எங்க உறவுக்கார பெண் ஒருத்தர்கிட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னால இறந்துபோன அவங்க கணவரைப் பத்தி என் மனைவி நலம் விசாரிச்சிருக்காங்க. வேணுன்னே கேட்கிறாள்ன்னு அந்தப் பொண்ணு கோபப்பட்டிருச்சு.. கொஞ்சநேரம் கழிச்சு என் மனைவி திரும்பவும் போய் விசாரிச்சிருக்கா. அந்தப் பொண்ணு ரொம்ப டென்ஷனாகி உறவுக்காரங்ககிட்ட புகார் பண்ணிடுச்சு. 

அதற்குப் பின்னர்தான்,  நான் மருத்துவர்கிட்ட  அழைச்சுக்கிட்டுப் போனேன். அப்போதான் என் மனைவிக்கு மறதிநோய் வந்திருக்குன்னு தெரிஞ்சிச்சு. அன்றிலிருந்து, அவளை ஒருவேலையும் செய்ய விடுறதில்லை. எல்லாத்தையும் நானே இழுத்துப் போட்டுச் செய்வேன்.

ஒருநாள் நான் என்னை மறந்து லேசாகக் கண் அசந்தேன். அந்த நேரம் பார்த்து வீட்டைவிட்டுக் கிளம்பிட்டா. போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். மலேசியாவுல வேலை செஞ்சுக்கிட்டிருந்த என் பையனையும் வரச் சொல்லிட்டேன். 'காணவில்லை' ன்னு போஸ்டர் அடிச்சு வீதி வீதியாக் குடுத்தோம். 6 மணி நேரத்துக்குப் பிறகு ஒரு போன் வந்துச்சு. ஒரு வயதான அம்மா கிண்டில ஆளுநர் மாளிகை பக்கம் நடந்து போயிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. உடனே  ஓடிப்போய் பாத்தேன். ரோட்டுல தனியா நடந்து வந்துட்டு இருந்தாங்க. அந்த நிமிஷங்கள இப்ப நினைச்சாலும் வேதனையா இருக்கு. அவங்களுக்கு சேலை கட்டி விடுறதுல இருந்து, சோறு ஊட்டி விடுறது வரை எல்லாமே நான்தான் பாத்துக்குவேன். சோறை வாயில வச்சு, 'விழுங்கு'ன்னு சொன்னாத்தான்  விழுங்குவா. ஒரு குழந்தை மாதிரி நடந்துக்குவா..." கண்கலங்க கூறிமுடித்தார் கண்ணன்.

முதியோர் நல மருத்துவர் நடராஜன் அல்சைமர் குறித்து விரிவாகப் பேசுகிறார். 

“மூன்று வகையான மறதி நோய் இருக்கிறது. முதுமையின் காரணமாக ஏற்படும் இயல்பான மறதி,  டிமென்ஷியா என்னும் மறதி, அல்சைமர். மறதிநோயிலேயே மிகக்கொடுமையான நோய் அல்சைமர். 

அல்சைமருக்கான காரணத்தை எளிதாகக் கண்டறிய முடியாது. அதனால் அதற்கு சிகிச்சையளிப்பது கடினம். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் 'மனதளவில் இறந்து உடலளவில் வாழ்வார்கள்', ஆரம்ப நிலையிலேயே இந்த நோய் இருப்பதைக் கண்டறிந்துவிட்டால் ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும். நம் வீட்டில் இருக்கும் முதியவர்களின் நடை, உடை, பாவனைகளில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும்  உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்சமைரால் பாதிக்கப்பட்டால் அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக .காலையில் டீ குடித்திருப்பார்கள். ஆனால், தனக்கு யாரும் டீ குடுக்கவில்லை என்று சொல்வார்கள். வீட்டில் உள்ளவர்கள் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். 

அல்சைமர் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்த பல முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். முதியவர்களைப் பராமரிப்பது குறித்து ஏராளமான கருத்தரங்குகள் நடத்துகிறோம். வயதானவர்களுக்கு ஸ்ட்ராபெரி, முளைகட்டிய தானியங்கள், வாழைப்பழம், வல்லாரைக் கீரை, கிரீன் டீ ஆகிய உணவுகளை அடிக்கடி கொடுக்கவேண்டும். அவர்களைத் தனிமையில் விடாமல் யாராவது ஒருவர் அவருடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். தியானம், யோகா ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக திருக்குறளைப் படித்து எழுதச் சொல்லலாம். அதேபோல் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கலாம். இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து மெமரி டெஸ்ட் செய்துகொள்வது மிகவும் நல்லது" என்கிறார் நடராஜன்.

அல்சைமருக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை நடத்திவரும் சுந்தரா கோபாலனிடம் பயிற்சி முறைகள் பற்றிக் கேட்டோம்

.  

“காலையில் 10 மணிக்கு எங்கள் அலுவலக வண்டியில் அவர்களை அழைத்து வந்துவிடுவோம். முதலில் யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் வழங்குவோம். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு எந்த மாதிரியான செயல்களில் விருப்பம் இருக்கிறது என்பதை  எங்களின் ஆக்குபேசனல் தெரபிஸ்ட் (occupational therapist) கண்டறிவார்கள். தினமும் தியான வகுப்பு முடிந்ததும் அவர்களை அந்த செயல்களை செய்யச் சொல்வோம். சிலருக்கு மணி கோர்ப்பது பிடிக்கும், சிலருக்கு வரையப் பிடிக்கும். சிலருக்கு கணக்குப் போடுவது புடிக்கும். இப்படி அவர்களுக்குப் புடித்த வேலையைச் செய்யச் செய்வோம். பின்னர் க்ரூப் ஆக்டிவிட்டீஸ் அனைவரையும் சுற்றி உட்கார வைத்து ஒவ்வொருவரையும் உரையாடச் சொல்லுவோம். அவர்களின் பெயர், எங்கிருந்து வருகிறார்கள் என்பதை சொல்லச் சொல்லுவோம். 

மதியத்துக்கு மேல் வாக்கிங், ஸ்போர்ட்ஸ் இதெல்லாம் செய்யச் சொல்லுவோம். அவர்கள் செய்யும் சின்னச் சின்ன வேலையைக் கூட கைத்தட்டி உற்சாகப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்." என்கிறார் சுந்தரா கோபாலன்.

பல நாடுகளில்  மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்திவிடுகிறார்கள். அவர்கள் செல்லும் இடங்களைக் கண்காணிக்கிறார்கள். அதேபோன்று தொழில்நுட்பங்கள் நம் நாட்டிலும் பயன்படுத்தி, முதியோர்களைப் பாதுகாக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு