கன்சல்டிங் ரூம்
Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

தேவை...ஒரு சுயபரிசோதனை!

``இந்த உலகத்தில் பிறக்கும்போது, எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தான். அவர்களுக்கு ‘எக்ஸ்போஷர்’ கிடைப்பது மூன்று, நான்கு வழிகளில்தான். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் ஊடகங்கள்.  இவைதான்  அவர்கள் எந்த வழியில் செல்லப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பவை’’ என்கிறார், சென்னை ‘அகம்’ மருத்துவமனையின் மனநல மருத்துவர் அருண்குமார்.

``இப்போதெல்லாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார்கள். இரண்டரை வயதிலேயே ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பி விடுகிறார்கள். எனவே, ஆரம்பநிலைத் தூண்டுதல் (Early stimulation) என்பது, குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. அவர்களாகவே கண்டுபிடித்து, அறிந்துகொள்ளும் நிலைமை மாறி, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மூலமாகத்தான் உலகைத் தெரிந்துகொள்கிறார்கள்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

இதற்காக நாம் பெற்றோரை மட்டுமே குறை சொல்லவும் முடியாது. இந்தக் காலச்சூழல் அப்படி இருக்கிறது.  எல்லாப் பெற்றோர்களுமே நல்ல எண்ணத்தோடுதான் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய தாய், தந்தை எப்படி வளர்த்தார்களோ அந்தப் பாதிப்பு மற்றும் அவர்களின் அனுபவம்தான் குழந்தை வளர்ப்பில் பிரதிபலிக்கின்றன.

ஆனால், எல்லா விஷயங்களையும் தாங்கள் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொள்ளும் பெற்றோர்கள், ஒரு சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். மற்ற குழந்தைகளைப் பார்த்து, தன் குழந்தையும் அதைப்போல வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இப்போது பல பெற்றோர்களிடம் காணப்படுகிறது. அது இயல்புதான்.

ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை  வாய்ந்தது. மேலே விழும் மழைத் தண்ணீரை உறிஞ்சும் மண் போல, கிரகிக்கும் தன்மைகொண்டது. அவர்களை வடித்தெடுக்கும் பொறுப்புடைய பெற்றோர்கள், தங்களின் அன்பையும் நேரத்தையும் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.  குழந்தைகளோடு சேர்ந்து சின்னச் சின்ன விஷயங்களைச் செய்வதன் மூலமாகவே வாழ்க்கைக்குத் தேவையான நிறைய பாடங்களை சொல்லித்தரலாம். அடித்து, உதைத்து குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்றுத் தர முடியாது. மாறாக, பெற்றோர் ஒழுக்கமாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதைக் கற்றுக்கொடுக்காமலேயே கடைப்பிடிப்பார்கள். குழந்தைகளின் முன் யாரையாவது இகழ்ந்து பேசினால், குழந்தைகள் மனதிலும் அந்த நபருக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என்ற எண்ணம் பதிந்துவிடும்.

பிரிந்த பெற்றோருடன் வாழும் குழந்தைகள், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாக உணரக்கூடும். மற்ற குழந்தைகளைவிட அந்த குழந்தைகள் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்’’ என்கிறார் டாக்டர் அருண் குமார்.

- குரு அஸ்வின்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்