கன்சல்டிங் ரூம்
Published:Updated:

நாட்டு மருந்துக் கடை - 4

நாட்டு மருந்துக் கடை - 4

திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர். சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. “கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்” என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்புநோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான். 

‘‘மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக காமனெனுந் திப்பிலிக்குக் கை” என தேரன்சித்தன் பாடியதை விரித்தால், விளங்கும் விஷயம் அலாதி. பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ண மாமான் தீர்த்துவைத்ததுபோல்,  ஆஸ்துமா நோய் மாமன் போல் மரபாய் வந்திருந்தாலும், மற்றவனாய் சொல்லப்பட்ட கோழையை விரட்டி, ஆஸ்துமாவை விரட்டும் என்பதுதான் அப்பாடலின் பொருள். திப்பிலிக்கு சித்த மருத்துவத்தில் காமன் என்று இன்னொரு பெயர் உண்டு. பித்தம் தாழ்ந்து இருக்கும் ஆஸ்துமாவில், பித்தத்தை உயர்த்திச் சீராக்கும் தன்மையும் இருக்கிறது என்பதுதான் பொருள். கூடவே திப்பிலி பித்தத்தினை உயர்த்தி, விந்தணுக்களையும் உயர்த்தும் தன்மை கொண்டது.

நாட்டு மருந்துக் கடை - 4

ஆஸ்துமா நீக்கும் திப்பிலி

ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைக்க இன்று நவீன மருத்துவம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் சில மாதங்கள் இரவில் மட்டும் ஆன்டி லியூகோட்ரைன்ஸ் (Anti Leucotrines) கொடுப்பது வழக்கம். இந்த மருந்து செய்வதைத் திப்பிலியும் செய்யும். ஆஸ்துமாவுக்கு மூச்சுஇறுக்கத்தை (Tightness of chest) குறைக்க வேண்டும். மூச்சுக் குழலை விரிவடையச் (Broncho dilation) செய்ய வேண்டும். வெளியே வர மறுக்கும் வெந்த சவ்வரிசி போன்ற சளியை, மூச்சுக்குழல் நுரையீரல் பாதையில் இருந்து பிரித்தெடுத்து வெளியேற்ற (Mucolytic) வேண்டும். இத்தனையையும் திப்பிலி செய்யும். காற்று மாசுக்களால் ஹிஸ்டமினும், லியூகோட்ரைனும் தூண்டப்பட்டு, மூச்சுக்குழலை இறுகவைப்பதைத் திப்பிலி தடுப்பதுடன், திடீர் கோழைப்பெருக்கம் நடப்பதையும் நிறுத்தும் என்பதைப் பல சர்வதேச மருத்துவ ஆய்வேடுகள் உறுதிபடுத்தியுள்ளன.

சித்த மருத்துவ மருந்தான திப்பிலி ரசாயனம், ஆஸ்துமா நோய்க்கென கொடுக்கப்படும் மிகச் சிறந்த தடுப்பு மருந்து. திப்பிலையைப் பிரதானமாகவும், இன்னும் பல சளி நீக்கும் உலர் மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த மருந்து, சித்த மருந்துகளில் ஆஸ்துமாவுக்கான மருந்துப் பட்டியலில் தலையானது.

பல நோய் போக்கும் திப்பிலிமிளகைவிட அதிகக் காரமும் வெப்பத்தன்மையும்கொண்ட இந்தத் திப்பிலியை கைப்பக்குவ மருந்தாக வீட்டில் பல வகையில் பயன்படுத்த இயலும். இளவறுப்பாய் வறுத்துப் பொடித்த திப்பிலிப் பொடியை, 3 சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, வெற்றிலைச்சாறும் தேனும் சேர்த்துக்கொடுக்க,  நுரையீரலிலிலிருந்து வெளியேற மறுக்கும் கோழையை வெளியேற்றி இருமலைப் போக்கும்.

கபம் நெஞ்சில் கட்டிக்கொண்ட, மலச்சிக்கலும் உள்ள குழந்தைகள் அல்லது முதியோருக்கு, மலத்தை இளக்கி வெளியேற்றி கபத்தைக் குறைப்பதுதான் ஆஸ்துமா நோய்கான தீர்வைத்தரும். இதற்கு, திப்பிலி பொடியையும், கடுக்காய் பொடியையும் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து உருட்டி இரவில் கொடுக்கலாம்.

உடலெங்கும் பரவி, போக மறுக்கும் சாதாரணப் பூஞ்சையை நிரந்தரமாகப் போக்க, மேலுக்கு சீமையகத்திச் சாறு போடுவது, நலுங்கு மாவு போட்டுக் குளிப்பதைத் தாண்டி, தினம் ஒரு வேளை திப்பிலி பொடியை 2 சிட்டிகை அளவு சாப்பிடுவது நல்லது என்கிறது சித்த மருத்துவம்.

திப்பிலி செடியின் வேரும்கூட பெரும் மருத்துவப் பயன்கொண்டது. இதற்குத் திப்பிலி மூலம் என்று பெயர். திப்பிலி போலவே சளி நீக்கும் குணம் கொண்ட இந்த மூலிகை வேரை, பாலில் விட்டு அரைத்து, காய்ச்சிய் பாலில் கலந்துகொடுக்க இடுப்பு, முதுகுப் பகுதியில் வரும் வலிகளான ஸ்பான்டிலோசிஸ், லும்பாகோ   (Spondylosis, lumbago)  போன்றவை குணமாகும்.
பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கும் வெள்ளைப்படுதலும் இருந்தால், திப்பிலி 30 கிராம், தேற்றான் கொட்டை 30 கிராம் அரைத்துப் பொடித்து, காலை வேளையில் மூன்று சிட்டிகை சாப்பிட்டுவர நீங்கும் என்கிறது, சித்த மருத்துவ குணபாட நூல்.

நாட்டுமருந்துக் கடையில் அரிசித்திப்பிலி, யானைத்திப்பிலி என இரண்டு வகை கிடைக்கும். அரிசித்திப்பிலி, எனும் சன்னமாக சிறிதாக இருக்கும் திப்பிலிதான் மருத்துவத்துக்கு மிகவும் சிறப்பானது. உதிராது, உலர்ந்து முழுமையாய் இருக்கும் இதனை வாங்கி, இளவறுப்பாக வறுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது, இது விளையும் சீசனில் வாங்கிப் பத்திரப்படுத்தி ஃப்ரெஷாகப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.

- தொடரும்

திப்பிலி ரசாயனம் எப்படி செய்வது?

நாட்டு மருந்துக் கடை - 4

திப்பிலி 100 கிராம், மிளகு, சுக்கு ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய்விடங்கம், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒவ்வொன்றும் 25 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் இள வறுப்பாய் வறுத்து, நன்கு மையாகப் பொடித்துகொள்ள வேண்டும். பனை வெல்லத்தைப் பாகு காய்ச்சி, அந்தப் பாகின் மேல் சொன்ன பொடியை அளவாகப் போட்டு, லேகியமாய் வேகவைத்து, ஆறிய பின்னர், சிறிது தேன் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல், கோழை ஆஸ்துமா உள்ள வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய கைமருந்து இது. இந்த லேகியத்தைச் சிறு சுண்டைக்காய் அளவு குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாலைப்பொழுதில் சாப்பிட, இரைப்பு நோய் எனும் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க முடியும். ஆஸ்துமா இழுப்புக்குப் பக்கவாத்தியம் செய்யும், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் ஆகியவற்றையும் இந்த மருந்து போக்கும் என்பது கூடுதல் செய்தி.

நாட்டு மருந்துக் கடை - 4