கன்சல்டிங் ரூம்
Published:Updated:

கத்தியின்றி ரத்தமின்றி... எண்டோஸ்கோப்பி அற்புதம் !

கத்தியின்றி ரத்தமின்றி... எண்டோஸ்கோப்பி அற்புதம் !

சமீபத்தில் சென்னையில் நடந்த மகளிர் மற்றும் மகப்பேறு மாநாட்டில், ‘கைனக் எண்டோஸ்கோப்பி’ குறித்த அமர்வுகள் மற்றும் விரிவுரைகளுக்கு தலைவராக இருந்து, எண்டோஸ்கோப்பி அறுவைசிகிச்சை குறித்து உரை நிகழ்த்தியவர், ‘சென்னை தாய் சேய் நல மருத்துவமனை’யின் முன்னாள் இயக்குநரும் மூத்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவருமான சிந்தியா அலெக்ஸாண்டர்.

“எண்டோ’ என்றால் உள்புறம் என்று பொருள். ‘ஸ்கோப்பி’ என்றால் பார்க்கக் கூடிய கருவி. மருத்துவர், அறுவைசிகிச்சை செய்து உடலைத் திறக்காமலேயே, மருத்துவம் செய்ய உதவும் கருவி இது. மனிதர்களின் உடலுக்குள்  மிகச் சிறிய ஒயர் போன்ற கருவியைவிட்டு, அதன் மூலமாக உள்ளே இருப்பவற்றைப் பார்க்க உதவுவதுதான் எண்டோஸ்கோப்பி.  நவீன மருத்துவத்தில், இதன் மூலம் அறுவைசிகிச்சை செய்வது மிகவும் பிரபலமாகவும் இயல்பானதாகவும் ஆகிவருகிறது. உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும் குழாய்களுக்கும் ஏற்ப, வளைந்து நெளிந்து செல்லும் நெகிழ்வுத் தன்மையுடைய (Flexible) நீண்ட, குழாயின் நுனியில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் குழாயை எந்த உறுப்புக்குள்ளும் நுழைத்து, நேரடியாக மருத்துவர் கேமரா மூலம் பார்க்க முடியும். 

கத்தியின்றி ரத்தமின்றி... எண்டோஸ்கோப்பி அற்புதம் !

“உடலின் எல்லா உறுப்புகளுக்குள்ளும் இந்தக் கருவி மூலம் பார்க்க முடியுமா?”

“வயிறு, இரைப்பை, குடல், எலும்பு மூட்டு, நுரையீரல், பித்தப்பை, கர்ப்பப்பை, சினைப்பை போன்ற பல உறுப்புகளுக்கு எண்டோஸ்கோப்பி செய்ய முடியும். கேஸ்ட்ரோ இன்டஸ்டினல் எண்டோஸ்கோப்பி (வயிறு, இரைப்பை), கொலொனோஸ்கோப்பி (குடல்), ஆர்தோஸ்கோப்பி (எலும்பு மற்றும் மூட்டு), பிராங்கோஸ்கோப்பி (நுரையீரல்), சிஸ்டோஸ்கோப்பி (சிறுநீர்ப்பை) என ஒவ்வோர் உறுப்புக்கும் வெவ்வேறு வகையான கருவிகள் உண்டு. மகளிர் மருத்துவத்தில், கர்ப்பப்பை, சினைப்பை போன்ற உறுப்புகளின் அளவு, நிறம், உதிரப்போக்கு, கட்டிகள் போன்ற எல்லாவற்றையும் இதன் மூலம் பார்த்துவிட முடியும். கைனக் எண்டோஸ்கோப்பியில் இரண்டு வகை உள்ளன. கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள உறுப்புகளைப் பார்க்க உதவும் எண்டோஸ்கோப்பியை, லேப்ரோ ஸ்கோப்பி என்கிறோம். கர்ப்பப்பைக்கு உள்ளே பார்க்கக் கூடிய எண்டோஸ்கோப்பிக்கு, ஹிஸ்டரோகோப்பி என்று பெயர்.”

“இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“எண்டோஸ்கோப்பி செய்யும்போது, அந்தக் குழாயை உறுப்புகளுக்குள் நேரடியாகவே விட முடியும். அப்படி முடியாத இடங்களுக்கு, உடலில் மிகச் சிறிய துளை போட்டு அதன் வழியே கருவியை
விட்டுப் பார்க்கலாம். லேப்ரோஸ்கோப்பி செய்யும்போது, தொப்புளுக்குக் கீழே, மிகச் சிறிய துளைகள் போட்டு, கருவியை உள்ளே அனுப்புகிறோம். சினைமுட்டை வளர்ச்சி, சினைப்பையின் அளவு, ஃபெல்லோப்பியன் குழாயில் பிரச்னை உள்ளதா என்பவற்றை இதன் மூலம் பார்க்க முடியும். ஹிஸ்டரோகோப்பியில், பெண்களின் பிறப்புறுப்பு வழியாக எண்டோஸ்கோப்பி குழாய் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அறுவைசிகிச்சையே செய்ய முடியும்.

லேப்ரோஸ்கோப்பி செய்யும்போது, எத்திலீன் ப்ளூ என்னும் ‘டை’யை குழாயினுள் செலுத்தி, அது உள்ளே போய் வருவதை வைத்து, கருக்குழாய்களின் பிரச்னையைக் கண்டறிய முடியும். பெண்களின் உடலுக்குள் குழாயைச் செலுத்தி, உள்ளே என்ன பிரச்னை என்று கண்டறிய 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும். அப்படிப் பார்க்கும்போது, கருப்பையில் சின்னதாகக் கட்டி ஏதேனும் இருந்தால், அதன் மூலமே அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிடவும் முடியும்.”

“சாதாரண அறுவைசிகிச்சைக்கும் எண்டோஸ்கோப்பி முறையில் செய்யப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?”

“சிறிய துளை மட்டுமே போடப்படுவதால், ஒரு நோயாளி விரைவாக எழுந்து நடமாடவும், அன்றைய தினமே வீடு திரும்பவும் முடியும். வலி, ரத்த இழப்பு, நோய்த் தொற்று எல்லாமே சாதாரண அறுவைசிகிச்சையைவிட இந்த முறையில் மிகக் குறைவு. குறிப்பாக, தையல் போடும் வேலை இல்லை. சில நேரங்களில், ஒரே ஒரு தையல் போடப்படுகிறது. பெரும்பாலும், ஒரு சின்ன பிளாஸ்டர் மட்டுமே ஒட்டப்படும். உடலில் கீறல் போட்டுத் திறப்பதற்கும், தையல் போட்டு மூடுவதற்கும் ஆகும் நேரம் மிச்சமாகிறது.”

“இதன் மூலம், எந்த மாதிரியான அறுவைசிகிச்சைகள் செய்யமுடியும்?”

“கர்ப்பப்பை மற்றும் சினைப்பைக்குள் உருவாகும் சிறிய கட்டிகள் (Cysts), விழுதுகள் (Polyps), நீர்க்கட்டிகள் (Fibroids) போன்றவற்றை நீக்க முடியும். ‘ஹார்மோனிக் நைஃப்’ எனப்படும் கத்தியின் மூலமாக இது செய்யப்படுகிறது. `டை’ முறையில், ஃபெல்லோப்பியன் குழாய்களில் அடைப்பு இருந்தால் நீக்க முடியும். மேலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கும் இது பயன்படுகிறது. தற்போது, கர்ப்பப்பையை அகற்றுவதுகூட லேப்ரோஸ்கோபிக் சிகிச்சையிலேயே செய்யப்படுகிறது. கர்ப்பப்பையில் இருக்கும் பெரிய கட்டியைக்கூட, சிறு துகள்களாக வெட்டி வெளியே கொண்டுவந்துவிடலாம். 

இனிவரும் காலங்களில், மக்கள் அறுவைசிகிச்சைக்காக ஒரு வாரம், 10 நாட்கள் ஒதுக்கி, மருத்துவமனையில் இருப்பதெல்லாம் மிக அபூர்வமாகிவிடும். ஒரே நாளில் முடித்துக்கொண்டு, அன்று மாலையே வீடு திரும்ப வசதியாக, எல்லோருமே ஸ்கோப்பி முறையையே தேர்வு செய்கிறார்கள். வருங்காலத்தில், இதற்கான தேவை அதிகமாகும்போது, ‘எண்டோஸ்கோப்பி’ தெரிந்த மருத்துவர்களும் அதிகமானால், அரசு மருத்துவமனைகளிலேயே செய்யத் தொடங்கிவிடுவார்கள். கட்டணமும் குறையும்.”

- பிரேமா நாராயணன்

கத்தியின்றி ரத்தமின்றி... எண்டோஸ்கோப்பி அற்புதம் !