Published:Updated:

அலைபாயுதே... - 4

அலைபாயுதே... - 4

ஒன்பதாவது படிக்கும் ராகுல், இப்போதெல்லாம் அம்மாவோடு சரியாகவே பேசுவது இல்லை. அடிக்கடி எங்காவது தனியாக உட்கார்ந்துகொள்கிறான். சாப்பாடு, தூக்கம் எதுவுமே சரியாக இல்லை. ‘இவனுக்கு என்னவாயிற்று’ என அம்மாவுக்கு ஒரே கவலை. அதட்டி, படிக்கவோ சாப்பிடவோ சொன்னால், முறைக்கிறான். அன்பாகப் பேச உட்கார்ந்தால், எரிச்சலாக எழுந்து போய்விடுகிறான். எதைக் கேட்டாலும் ஏட்டிக்குப் போட்டியாக ஒரு பதில். திடீரென்று ஒன்றுமே நடக்காதது போல நார்மலாக இருக்கிறான். கொஞ்ச நேரத்தில் மீண்டும் எரிச்சல். ‘அம்மா, அம்மாவென கட்டிக்கொண்டு திரிந்தவன், ஏன் இப்படி மாறிப் போனான், என்னைத் திடீரென்று ஏன் அவனுக்குப் பிடிக்காமல் போனது’ என அம்மாவுக்குக் குழப்பம்.

அம்மாவைக் கட்டிப்பிடித்துத் தூங்கினால் தான், தூக்கம் வரும் என்றிருந்தவன். அம்மா அருகில் வந்தாலே, ஒதுங்கிப் போக ஆரம்பித்தான். “நான் இனி தனியாகத் தூங்கிக்கிறேன்” என ஒருநாள் அவன் வேகமாகக் கதவடைக்க, அம்மாவுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. அடுத்த நாளே, “நான் மட்டும் எப்படித் தனியாகத் தூங்குறது” என அம்மாவைத் துணைக்கு அழைத்தான். ராகுலின் மாறிக்கொண்டிருக்கும் மனநிலையை, அம்மாவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ராகுல் வயதில் மகன்கள் இருக்கும் பெரும்பாலான அம்மாக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைதான் இது. அப்படி எனில், இந்தப் பையன்களுக்கு என்னதான் ஆகின்றது?

அலைபாயுதே... - 4

பெண் குழந்தைகள் 10 வயதைத் தாண்டியதுமே, அம்மாக்கள் மனதில் அலாரம் அடிக்கத் தொடங்கும். மகளின் உடல் மாறுவதை, கவனித்துக்கொண்டே இருப்பார்கள். மகளின் உடை கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாலே, பெரிய மனுஷி ஆகிவிடுவாளோ என அம்மாவுக்குப் பகீரென இருக்கும். வயதுக்கு வந்துவிட்டால், இப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் எனப் பள்ளியில் சொல்லித்தருவார்கள். ஆனால், அதே வயதில் மகன்களும் வயதுக்குவருவதை, அம்மாக்கள் உணர்வது இல்லை. குறிப்பிட்ட பருவத்தில் ஆண், பெண் இருவர் உடலிலும் செக்ஸ் ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான். ராகுலின் மூட் ஸ்விங்கிற்கு காரணம் இந்த டெஸ்டோஸ்டிரான்தான்.

ஹார்மோன் உடலுக்குள் தன் வேலையை செய்ய ஆரம்பித்ததும், பையன்களின் தோற்றம், நடவடிக்கைகளில், சட்டென மாற்றம் தென்பட ஆரம்பிக்கும். கீச்சுக்குரலில் பேசியவன், கரடுமுரடான, உடைந்த குரலில் பேசுவது இதனால்தான். மீசை முளைக்க ஆரம்பிக்கும். நேற்று வரைக்கும் உடன் விளையாடும் தோழிகளை, பெண்களைக் கவனித்துப் பார்க்காத பையன்கள், சட்டெனத் திரும்பிப் பார்க்க ஆரம்பிப்பார்கள். இதை எல்லாம் செய்யத் தூண்டும் ஹார்மோன்கள், கூடவே, மனம் முழுக்கக் குழப்பத்தையும் விளைவித்துவிடுகின்றன. பொறுமையின்மை, கோபம், அவசரம், எரிச்சல், சந்தோஷம் என நிமிடத்துக்கு ஒரு மனநிலையில் இருப்பார்கள்.
 

அலைபாயுதே... - 4

சிறுமிகளுக்கு அவர்கள் உடலில் நடக்கும் மாற்றங்களைச் சொல்லிக்கொடுக்க ஆட்கள் இருப்பார்கள். சிறுவர்களுக்கு அப்படி இல்லாததால், தனக்குள் நடப்பது சரியா, எல்லோருக்கும் இப்படித்தான் இருக்குமா, எனக் குழம்பிவிடுவார்கள்.

நமக்குத்தான் மீசை எல்லாம் முளைத்து, பெரியபையன் ஆகிவிட்டோமே, நம்மை ஏன் இன்னும் சின்னபையனாகவே ட்ரீட் செய்கிறார்கள், என எரிச்சல் வரும். அம்மாவைக் கட்டிப்பிடித்துத் தூங்கிய பையன்கள், அம்மாவைவிட்டுக் கொஞ்சம் விலகுவது இதனால்தான். சுதந்திரத்தையும் தனிமையையும் அதிகம் எதிர்பார்க்கும் பருவம் இது. கூடவே, அம்மாவை ஹர்ட் செய்கிறோமோ என்கிற குழப்பமும் வரும். அன்பு, எரிச்சல் என வீட்டில் மாறி மாறி நடந்துகொள்வது இதனால்தான்.

மகனது இந்த ஊசலாடும் மனநிலையை, அப்பாக்கள் புரிந்துகொள்ள வேண்டும். “உனக்கு நடப்பது இயல்பானதுதான், அனைத்து ஆண்களும் இதைக் கடந்துதான் வர வேண்டும்’’ எனப் புரியவைக்க வேண்டும். டீன் ஏஜில், மகன்கள் கொஞ்சம் தனிமையை, சுதந்திரத்தை விரும்பினால், கோபப்படாமல் அதை அனுமதிக்க வேண்டும். பருவமடையும் சிறுமிகளுக்குச் சத்தான உணவுகளைத் தருவது போலவே, சிறுவர்களுக்கும் சத்தான உணவு தேவை. கூடவே, போதுமான அளவு தூக்கமும்.  சரியான தூக்கமே, குழப்பத்தின் அளவைப் பாதியாகக் குறைத்துவிடும். படிப்பு, டியூஷன், வீடு என அடைத்துவைக்காமல், அதிக நேரம் விளையாட அனுமதிக்க வேண்டும். அப்பாக்கள் அதிக நேரம் மகனுடன் செலவிடுவது, இந்தப் பருவத்தை, தான் எப்படிக் கடந்தேன்  எனச் சொல்வது... பருவத்தின் டென்ஷனை ஜாலியாக கடக்க உதவி செய்யும்.

- தொடரும்

பிரியா தம்பி