கன்சல்டிங் ரூம்
Published:Updated:

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

ரா.நித்யா, மதுரை.

“எனது மகன் 10ம் வகுப்பு படிக்கிறான், தேர்வு எழுதும்போது அவனுக்குக் கை வியர்க்கிறது. வியர்வை, பேப்பரை நனைத்து விடுவதால், கைக்குட்டையின் துணையுடன்தான் அவன் தேர்வு எழுத வேண்டியதாக உள்ளது. தேர்வு எழுதும்போது ஏன் இப்படி கை வியர்க்கிறது?”

கலையரசி, தோல் மருத்துவர், திருநெல்வேலி.

கன்சல்டிங் ரூம்

“இந்த மாதிரியான பிரச்னை உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருக்கிறதா? தேர்வு எழுதும்போது மட்டும் கை வியர்க்கிறதா? என்பதைப் பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. எனவே, தேர்வு பற்றிய பயம், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவைகூட கை வியர்ப்பதற்குக் காரணமாக இருக்கலாம். மனிதர்களுக்கு உள்ளங்கையில் அதிக அளவு வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ஏதேனும் படபடப்பு, பயம் ஏற்படும் சமயங்களில், கையில் வியர்க்கும்.

உங்களது மகனுக்குத் தேர்வின்போது மட்டுமே இந்த மாதிரியான பிரச்னை உள்ளது எனில்,  தேர்வைப் பற்றிய பயமும், மன அழுத்தமும்தான் காரணமாக இருக்கும். உங்கள் மகனை தினமும் போதுமான அளவு தூங்கவிடுங்கள். தினசரி உடற்பயிற்சிw செய்யச் சொல்லுங்கள், படிப்பு தவிர, வேறு ஏதேனும் பொழுதுபோக்கில், தினமும் அரை மணி நேரம் ஈடுபடவையுங்கள். இவை உங்கள் மகனின் மன அழுத்தத்தைக் குறைக்கும். தொடர்ந்து, உங்கள் மகனுக்கு வியர்த்துக் கொட்டினால், அருகில் உள்ள நாளமில்லா சுரப்பி நிபுணர் அல்லது தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.”

கண்ணன், மதுரை.

“என்னுடைய வயது 20. சற்று பருமனாக உள்ளேன். ஸ்லிம் பெல்ட் பற்றி விளம்பரங்கள் நிறைய டி.வி-யில் வருகின்றன. அதை உபயோகித்தால் எடை குறையுமா? உணவுப் பழக்கத்தில் எதுவும் மாற்றங்கள் வேண்டுமா?”

ஏ.ராஜேஷ் பொது மருத்துவர் திண்டுக்கல்

கன்சல்டிங் ரூம்

“செயற்கையான முறையில் உடல்  எடையைக் குறைக்க முயற்சிப்பது உங்களுக்குப்  பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலமாக ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதுதான் நல்லது. ஸ்லிம் பெல்ட் (Slim Belt) உபயோகித்தால் எடை குறையும் என்பதை இன்னும் மருத்துவ உலகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஸ்லிம் பெல்ட் பயன்படுத்துவதால் சராசரி உடல் வெப்பநிலை உயர்வதற்கும், தோல் பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

வயிற்றுப் பகுதியில் சில சமயம்  தழும்புகள் ஏற்படவும்கூடும். எடையைக் குறைப்பதற்கு காலையில் வாக்கிங் செல்வது மிகச் சிறந்த வழி. நடை நமக்கு வரும் நோய்களுக்கு தடை. ஜங் ஃபுட்ஸ், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிருங்கள். குளிர் பானங்கள் குடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு,  மூன்று வேளையும் கட்டாயமாகச் சாப்பிட வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். விளம்பரங்களை நம்புவதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் உடை எடையைக் குறைத்து, உற்சாகமாக வாழுங்கள்.”

என்.முரளிதரன், தஞ்சாவூர்

“எனக்கு 23 வயது ஆகிறது. நான்கு வருடமாக ஜிம்முக்குச் சென்றுவருகிறேன். வேலைப் பளு காரணமாக, என்னால் மூன்று மாதங்கள் ஜிம்முக்குச் செல்ல முடியவில்லை. இந்த மூன்று மாதத்துக்குள் என் உடல் பெருத்துவிட்டது. 7 கிலோ எடை கூடிவிட்டேன். என் நண்பர்களோ ஜிம்முக்குச் செல்லாததால்தான் இந்த நிலை என்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு?”

சிவராம சுதன் உடற்பயிற்சியாளர், திருச்சி

கன்சல்டிங் ரூம்

“நான்கு வருடங்களாக வொர்க்அவுட் செய்துவிட்டு, திடீர் என்று நிறுத்தினால் உடலில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். பளுத்தூக்குதல் உட்பட கடுமையான வொர்க்அவுட்ஸ் செய்வதால், உடலில் கொழுப்புகள் ஒரே இடத்தில் சேராமல், சமமாகப் பரவி இருக்கும். இந்த நிலையில் உடற்பயிற்சியை முழுமையாக நிறுத்தினால்,  கொழுப்புகள் ஒன்று சேர ஆரம்பிக்கும். இது, உடல் எடையையும் உடல் வடிவமைப்பையும் மாற்றும்.  உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால், சிலருக்குத்  தொப்பைவரும். உடல் எடை அதிகமானால், இன்சுலின் சுரப்பதில் பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரை நோய், தைராய்டு  பிரச்னைகள் போன்றவை வரலாம்.

உங்களுக்கு ஜிம்முக்குச் சென்று பயிற்சி செய்ய நேரம் இல்லை என்றால், குறைந்தது நடைப்பயிற்சி மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய சிறிய பயிற்சிகளையாவது கட்டாயம் செய்யுங்கள். மேலும் டயட்டீஷியனை அணுகி, அவர் பரிந்துரைப்படி தினமும் உணவு உட்கொள்ளுங்கள். முறையான சமச்சீரான உணவு, சீரான தூக்கம், சிறு சிறு உடற்பயிற்சிகள் மற்றும் நடைப் பயிற்சிகள் மூலம், உங்கள் எடையைக் கண்டிப்பாகக் குறைக்க முடியும். கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.”