Published:Updated:

அந்தப்புரம்- 4

அந்தப்புரம்- 4

சிலருக்கு சில தருணங்களில் தவறான வழிகாட்டுதல்களே கிடைக்கும். அதுவும் பதின்பருவங்களில் தவறான வழிகாட்டுதல்கள்தான் பலருக்கும் பிடிக்கிறது.

ராஜேஷுக்கு வழியில் தென்பட்ட சில போஸ்டர்கள்தான் அத்தகைய வழியைக் காட்டின. 

விரைவீக்கமா, ஆண்மைக் கோளாறா? விந்து முந்துகிறதா?

கரன்ட் கம்பங்கள்தோறும் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டர்கள், இப்போதெல்லாம் அவன் கவனத்தை ஈர்க்கின்றன.

குளிக்கும்போது கவனித்தான் அவனுடைய விரைப்பை வீக்கமாக இருப்பதை. ஒருபகுதி தொங்கியிருப்பதாகவும் மறுபகுதி சற்றே மேல் ஏறி இருப்பதாகவும் தெரிந்தது. விரைவீக்கம், ஆண்மைக் கோளாறு... ‘கொடுமையே! இதை யாரிடம் கேட்பது’ என்ற தயக்கம். வழக்கமாக ஜுரம், தலைவலி வந்தபோது நேராக அம்மாவிடமோ, அப்பாவிடமோ பேசியதுபோல இதைப் பகிர்ந்துகொள்வதில் ஏதோ மனத்தடை.

அந்தப்புரம்- 4

ராஜேஷ் வேலைபார்த்த அலுவலகத்தில் அப்போது புதிதாக வந்து சேர்ந்தான் சந்தோஷ். பணக்கார வீட்டுப் பையன் என்பது அவனுடைய தாராளத்தில் தெரிந்தது. வந்த சீக்கிரத்தில் நண்பனாகிவிட்டான். முதல் நாள் டீக்கு நான் காசு கொடுக்கிறேன் என்பதில் ஆரம்பித்த நட்பு, அடுத்த சில நாட்களில் ஆன்லைனில் படத்துக்கு டிக்கெட் புக் செய்யும் அளவுக்கு வளர்ந்தது.

படம் பார்க்கும்போது வரிக்கு வரி கமென்ட் அடித்தான். குறிப்பாக, அடல்ஸ் ஒன்லி கமென்ட் அதிகமாக இருந்தது. ஏதோ விவரம் தெரிந்தவன் போல இருந்தது ராஜேஷுக்கு.  அவனிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தான்.

படம் பார்த்துவிட்டு வரும்போது, எதேச்சையாக அந்தப் போஸ்டரைப் பார்த்தது போல பேச்சைத் தொடங்கினான்.

“விரை வீக்கமா, விந்து முந்துகிறதானு... என்னடா இதெல்லாம்?’’ என்றான்.

சந்தோஷ் சீரியஸானான். “ராஜேஷ் இது சாதாரண விஷயம் இல்லை. எத்தனை பொண்டாட்டிங்க புருஷனை விட்டுட்டுப் போறாங்க...எதனால? இந்தப் பிரச்னயாலதான்.’’
 
“நிஜமாவா சொல்றே?’’ என்றான் ராஜேஷ். இந்த அத்தியாயத்தின் முதல் வரியை அதற்காகத்தான் சொன்னேன். சந்தோஷுக்கு தன் அனுமானங்களை அவிழ்த்துவிட வசதியாகிவிட்டது.

அந்தப்புரம்- 4

“எங்க தெருவுல ஒரு ஆளுக்குத் தரை வரைக்கும் தொங்கும்.’’

“எதுடா?’’

‘‘அதுதான்டா. போஸ்டர்ல பார்த்தியே... சுரைக்காய் கணக்கா தொங்கும். அவன் பொண்டாட்டி ஓடியே போய்ட்டா.’’

ஏற்கெனவே குழம்பிப்போய் இருந்தவன் கதி கலங்கிப் போனான்.

ஏன்? எதற்கு? எப்படி?

கடந்த இதழ்களில் ஆணுறுப்பு பற்றி பார்த்தோம். அந்த ஆணுறுப்புக்கு கீழே அதை ஒட்டி சுருக்குப் பை போல் தொங்குவதுதான் பெயர் விதைப்பை. ஒரு உயிர் உருவாவதற்கான விதைகளைச் சுமக்கும் பை. இது உடலுக்கு வெளியே இரண்டு மாம்பிஞ்சு போல ஆணுறுப்புக்குக் கீழே தொங்குகிறது.

இரண்டும் பொதுவாக சம அளவில் தொங்கிக்கொண்டிருப்பது இல்லை. சற்றே ஏற்ற இறக்கம் இருக்கும். அதற்காகப் பயப்பட வேண்டியது இல்லை.

டெஸ்டோஸ்டிரான் (Testosterone) என்பது ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பி. இந்த ஹார்மோன்தான் உயிர் அணுக்களை உற்பத்திச் செய்யத் தூண்டுகிறது.செமினொஃபெரஸ் ட்யூபள்ஸ் (Seminiferous tubules)  எனப்படுகிற, விதைக்குள் இருக்கிற இழைகளில் உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஓர் ஆண் வயதுக்குவருவதாகச் சொல்லப்படும் பதின்மப்பருவத்திலேயே விதையானது விந்துவை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது.

டவுட் கார்னர்

விதைப்பைகள் சில நேரங்களில் லூஸாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் இறுக்கமாக இருக்கிறது? பொதுவாக விதைப்பை எப்படி இருக்க வேண்டும்?
விதைப்பைகள் உடலின் சீதோஷண நிலைக்கு ஏற்ப சுருங்கியும் தொளதொளப்பாகவும் இருக்கும். பொதுவாக உடலின் வெப்பநிலை 98.6 ஃபாரன் ஹீட் இருக்க வேண்டும். ஆனால், விதைப்பைகள் அதைவிட 4 ஃபாரன்ஹீட் குறைந்த வெப்பநிலையில் இருந்தால்தான் சிறப்பாக செயல்படும். அதாவது விந்துவை உருவாக்க இயலும். அதனால்தான் அது உடலுக்குள் இல்லாமல் வெளியே இருக்குமாறு இயற்கை அமைத்திருக்கிறது.

வெயில் காலங்களில் உடல் சூடாக இருக்கும். அப்போது விதைப்பை உடலைவிட்டு விலகி, தொளதொளப்பாக மாறிவிடும்.

குளிர் காலங்களில் விதைப்பைக்கு வெப்பநிலை போதாது. அதனால் உடலோடு ஒட்டி, இறுக்கமாக இருக்கும்.

பொதுவாக உடல்உறவுகொள்ளும் நேரங்களில் இறுக்கமாக மாறி, ஆணுறுப்புக்கு நெருங்கி வந்துவிடும்.

விதைகள்  இரண்டும் சமமாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது ஏன்?

ஒன்றுக்கு ஒன்று ஏற்ற இறக்கமாக இருப்பதும் இயல்பானதுதான். அதற்கு பயப்பட வேண்டியது இல்லை.

விதைப்பை, விந்து உற்பத்தியாகும் இடம். இனத்தை விருத்தி செய்வதற்கான முக்கியமான பகுதி. பக்கவாட்டில் அடிபடும்போது இரண்டும் ஒன்றின் மீது ஒன்று பட்டு நசுங்க வாய்ப்பு உண்டு. அதே போல் கீழே தவறி
விழும்போது விதைகளில் அடிபட நேர்ந்தால் என்ன ஆகும்?

 இரண்டும் மேலும் கீழுமாக இருப்பதால் இரண்டும் அடிபட்டு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இரண்டும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இயற்கை செய்திருக்கும் அரிய ஏற்பாடு இது.

ஒருவருக்கு விந்து சரியாக உற்பத்தி ஆகாமல் போக வாய்ப்பு உண்டா?

மூன்று காரணங்களால் விந்து உற்பத்தி ஆகாமல் போகும்.

பிறவிக் கோளாறு. உதாரணத்துக்கு... பிறக்கும்போதே ஹார்மோன் கோளாறு இருந்து, விந்து செல் உற்பத்தி ஆகாமல் போய்விடுதல் உண்டு.

விளையாட்டுகளில் அடிபடுதல், கதிர்வீச்சு தாக்குதல், உயர் வெப்பத் தாக்குதல் போன்ற காரணங்களால் விந்து உற்பத்தி ஆகாமல் போக வாய்ப்புண்டு.

புட்டாலம்மை, பால்வினை நோய் போன்றவற்றால் சிலருக்கு விந்து குறைபாடு ஏற்படும்.

- ரகசியம் பகிர்வோம்