Published:Updated:

துரிதமாக ஆரோக்யம் கலைக்கும் துரித உணவு கலாசாரம்..! உடல்நலம் கவனம் மக்களே #FastFoodAlert

கோடை காலம் தொடங்கியவுடன், அந்நிய மோகத்தால் நமது பாரம்பர்ய பானங்களை உதாசீனப்படுத்திவிட்டு, கவர்ச்சியான நிறங்களில் காட்சியளிக்கும் செயற்கைக் குளிர்பானங்களிடம் நமது மனம் காதல்கொள்ளத் தொடங்கிவிடுகிறது. இந்த விபரீதக் காதல், பல்வேறு நோய்களை நமக்குக் காதல் பரிசாகக் கொடுத்துவிடுகிறது. ஆனால், குளிர்காலத்தில் செயற்கைக் குளிர்பானங்களை மனம் அவ்வளவாக நாடுவதில்லை. என்றாலும், நம்மை அந்நிய மோகம் விட்டபாடில்லை என்பதே யதார்த்தம். குளிருக்கும் மழைக்கும் இதமாக, சூடாக பீட்சா, பர்கர், ஃபிரைடு ரைஸ், சாட் வகைகள் போன்ற துரித உணவுகளுக்காக மனம் ஏங்கத் தொடங்கிவிடுகிறது. கோடை காலமானாலும் சரி... குளிர் காலமானாலும் சரி... காலமுறையின்றி உணவு சார்ந்த விஷயங்களில் எவ்வளவு தவறுகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம் தெரியுமா?

பீட்சா, பர்கர்களின் வரவு

தொடக்கத்தில் நமது மக்களிடம் பீட்சா, பர்கர்களைக் கொண்டு சேர்க்க எண்ணிலடங்கா விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என அனைத்துப் பொது இடங்களிலும் பொதுமக்களையும் மாணவ சமுதாயத்தையும் மயக்கும் வண்ணமயமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டன. அந்த விளம்பரங்கள் மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கின்றன என்பதை நிரூபிக்கும்விதமாக, ஏரியாவுக்கு ஒரு மளிகைக் கடை இருப்பதைப்போல, ஏரியாவுக்கு ஒரு துரித உணவுக் கடையை இப்போது தாராளமாகப் பார்க்க முடிகிறது. ஃப்ரைடு ரைஸ், சாட் வகைகள் விற்கிற கடைகளுக்கு இணையக இப்போது பீட்சா, பர்கர் கடைகளும் நகரங்களில் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கூடவே மருந்தகங்களும் நம் வாழ்விடங்களைச் சுற்றி அதிகரித்திருப்பதையும் கவனித்திருக்கலாம். துரித உணவுக் கடைகள் அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகள் பெருகி, மருந்துகளின் வியாபாரமும் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது என்பது மறைமுகமான உண்மை.

நமது உணவியலில் புகுந்துவிட்ட துரித உணவு கலாசாரம்!

‘பெருநகரங்களில் வாழ்பவர்களின் உணவியலில் வாரம் மூன்று அல்லது நான்கு வேளையாவது பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு கலாசார உணவுகள் இடம்பிடித்துவிடுகின்றன என்கிறது உணவியல் கருத்துக் கணிப்பு. ஹோட்டல் மெனு கார்டில் தவறாமல் இடம்பிடித்து வந்த துரித உணவுகள், இப்போது வீட்டிலிருக்கும் மெனு கார்டிலும் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. காலை உணவாக, மாலை சிற்றுண்டியாக, இரவு பார்ட்டியில்... என பீட்சா, பர்கர்கள் அனைத்து வடிவங்களுக்கும் நெகிழியைப்போல தங்களைத் தகவமைத்துக்கொண்டு, உணவியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. நெகிழியைப்போலவே இவையும் உடலுக்கு தீங்கானவை என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

பார்சலில் வரும் நோய் வித்துக்கள்...

வாய்க்குள் நுழையாத பெயர்களைக் கொண்ட பீட்சாக்களை வாய்க்குள் பலவந்தமாகப் பிடித்து தள்ளிவிடுகிறோம். சவைக்க முடியாமல் சவைத்து, அரைகுறையாக இரைப்பைக்குள் செல்லும் அவை, செரிமானத்தில் குளறுபடிகளை உ

ண்டாக்கி, பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு காரணமாகிவிடுகின்றன. ஆர்டர் செய்தால் வெகு விரைவில் வீடு வந்து சேரும் பார்சல் பீட்சாக்களில், ஆரோக்கியத்துக்குப் பதிலாக நோய்களின் வித்துக்கள்தான் அதிகமாக இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

துரித உணவு எனும் போதை!

‘என்றாவது ஒரு நாள் இவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை’ என்று தொடங்கும் பழக்கம், விரைவில் அடிமையாக்கும் அளவுக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும். காரணம் என்ன தெரியுமா?  இதில் கலக்கப்பட்டிருக்கும் சில வகையான ரசாயனங்கள், நமது மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் செயல்பட்டு, மீண்டும் மீண்டும் அவற்றையே தேடவைக்கும் அளவுக்குப் போதையை, ஒருவித ஈர்ப்பை உண்டாக்கிவிடுகின்றன. மது, புகை வரிசையில் துரித உணவு வகைகளையும் போதைப் பட்டியலில் சேர்த்துவிடலாமா என்று யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

திரையரங்குகளில் அந்நிய உணவுகள்...

திரையரங்குகளில் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் எனப் பாரம்பர்யத் தின்பண்டங்களின் விற்பனை கொடிகட்டிப் பறந்த நிலை மாறி, இப்போது அந்நிய தேசத்துக் கொடிகள் பறக்கும்விதமாக, பீட்சாக்கள், பர்கர்களின் விற்பனை அமோகமாக இருக்கிறது. திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டு வாங்கும்போதே, கூடுதல் கட்டணத்துடன் துரித உணவுக்கான டோக்கனையும் சேர்த்து கல்லா கட்டுவது திரையரங்க உரிமையாளர்களின் வியாபாரத் தந்திரம். திரைப்படம் பார்க்கும்போது, ஏதாவது ஒரு துரித உணவு நம்மை அறியாமல் நமது இரைப்பைக்குள் சென்றுகொண்டிருக்கும் நிலைமைதான் இன்று. இடைவேளையில் சாப்பிடவில்லை என்றால், அருகிலிருப்பவர் நம்மை மேலும் கீழும் பார்க்கும் அளவுக்கு நாகரிகக் குறைச்சலாக மாறிவிட்டது. இதற்கு அதிகமாகச் செலவுசெய்து, அதற்கு இலவச இணைப்பாக வழங்கப்படும் நோய்களையும் வாங்கப் பழகிவிட்டோம்.

கிராமங்களை நோக்கிப் படையெடுக்கும் துரித உணவுகள்...

கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு துரித உணவுகளைப் பற்றி அவ்வளவாகத் தெரிவதில்லை. அனைத்துமே எளிதில் கிடைக்கும் நகரத்து மாணவர்களுக்குத்தான் பாதிப்புகள் அதிகம். ஆனால், இவை கிராமத்து மாணவர்களையும் சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை எனச் சொல்லலாம். ’சாட்’ வகை  உணவுகள், நிறைய கிராமங்களில் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டன. துரித உணவுகளின் வீச்சு முழுமையாக கிராமத்தை அடைவதற்கு முன்னர் இவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது முக்கியம்.

ஸ்டைலிஷ் நோய்கள்

இத்தாலியன் பீட்சா, கிரீக் பீட்சா, சிகாகோ பீட்சா என வெளிநாட்டுப் பெயர்களில் மயங்கி, தினம் ஒரு பெயருடைய பீட்சாவைச் சாப்பிடுபவர்கள் உண்டு. நமது இயல்புக்குச் சிறிதும் பொருந்தாத இவை, நாளடைவில் ஸ்டைலிஷ்ஷான பெயர்கள் கொண்ட புதுமையான நோய்களை ஏற்படுத்தலாம்.

புதிது புதிதாகத் தேடுவது மனித மனதின் இயல்பு. உணவு விஷயத்துக்கும் இந்தத் தத்துவம் பொருந்தும். புதியது ஆரோக்கியமானதாக இருந்தால், நல்லது. இல்லையெனில் விலகிவிடுவது சாலச் சிறந்தது. பீட்சாவைச் சுவைத்துவிட்டு, `காக்கா முட்டை’ திரைப்படத்தில் வரும் சிறுவர்களைப்போல, ’இந்த பீட்சாவுக்கு நம்ம ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டால் தப்பித்தோம். அதற்கு அடிமையாகி சிக்கிக்கொண்டால், விபரீதமே!