Published:Updated:

வயோதிகம் வரம்...! முதியோர் நலம் பேணுவோம்! #InternationalDayofOlderPersons

வயோதிகம் வரம்...! முதியோர் நலம் பேணுவோம்! #InternationalDayofOlderPersons

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


‘நீ இருக்க...
ஒரு கருவறை இருந்தது
என் வயிற்றில்..!
நான் இருக்க...
ஓர் இருட்டறை 
கூடவா இல்லை 
உன் வீட்டில்..?'
- இந்தக் கவிதையைப்போலவேதான் இருக்கிறது இன்றைய முதியோரின் வாழ்க்கை. `மூத்த குடிமக்கள்’ என்று அழைக்கப்படும் முதியோரை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை சர்வதேச முதியோர் தினமாக வரையறை செய்துள்ளது.  அதன்படி உலகம் முழுவதும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

`60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர்’ எனலாம் என்று வரையறுத்து வைத்திருந்தாலும், முதுமை என்பது ஒருவரின் பிறப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. குழந்தை வளர்ச்சியடையயும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு தொடங்கிவிடுகிறது. முதுமையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை அறிவியல்ரீதியாகப் பார்த்தால், மூளை மற்றும் நரம்பு மண்டல அமைப்பு முதுமையடையும்போது மூளையின் நரம்பு மண்டல அணுக்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கிவிடுகின்றன. மேலும், முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத நிலைகளாகும்.

முதியோருக்கு சுதந்திரம் கொடுப்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பங்களிப்பை எல்லா விஷயங்களிலும் பெறுவது, மதிப்பது போன்றவை சர்வதேச முதியோர் தினத்தின் முக்கிய அம்சங்கள். மனிதர்களுக்கு வயது கூடக்கூட அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தல், முழுமையடைதல், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல், சமூகம், கலாசாரம், அரசியல் போன்றவற்றிலும் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்தல் ஆகியவை அவசியம்.

மனிதகுலம் நாகரிகம் அடையாத காலகட்டத்தில் முதியோர் நலம் பேணுதல் என்பது நமது கடமைகளுக்கான செயல் திட்டத்தில் இல்லவே இல்லை. பழங்காலத்தில் சீனா போன்ற நாடுகளில் முதுமை எய்தியதும், அவர்களைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதும், சங்க காலத்தில் தமிழகம் உள்ளிட்ட நமது பகுதிகளிலேயே முதுமக்களுக்காக தாழிகள் உருவாக்கி வைத்திருந்ததை வரலாறு சொல்கிறது. விலங்குக்கும் மனிதனுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை மனிதன் பிரித்துணர ஆரம்பித்த பின்னர், பெற்றோரைப் பராமரிப்பது என்பது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதன் படிநிலைகளே அன்பு, பாசம், காதல் போன்றவை. 

இத்தகைய மாற்றங்கள் மனிதனைப் போராட்டங்களில் வெற்றியடையச் செய்ததுடன், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்கின. ஆனால், இன்றைக்கு எல்லாமே வியாபாரமயமாக்கப்பட்டு, அது வாழ்க்கையில் ஊடுருவியதன் விளைவு... எதையும் நியாயப்படுத்தும் சுயநலக்காரர்கள் முதலில் பலி கொடுத்தது இத்தகைய பொறுப்புகளையே. இதன் இறுதி என்பது மனிதாபிமானம் மரித்துப்போவதாகத்தான் இருக்கும். நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும், அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் நமக்கு எவ்விதத் தயக்கமும் தேவையில்லை. எதிர்காலம் நமக்காகவும் காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

யதார்த்தம் இப்படியிருக்க, இன்றைக்கு, ‘முதியோர் நலம்’ என்பதும் கேள்விக்குறியாகியிருக்கிறது. மருத்துவர்களின் ஆய்வின்படி பெரும்பாலான முதியோரின் உடல்நலக்குறைவுக்குக் காரணம் மனஅழுத்தம், கவலைகள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பதற்றம் என்று சொல்லப்படுகிறது. இவை ஜீரண மண்டலத்தைப் பாதிப்புக்குள்ளாக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கல்லீரல் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்துக் குறைவு, மூச்சுக்கோளாறு மற்றும் தொடர்ச்சியான இருமல் போன்றவை ஏற்படும். இவை 40 வயதிலேயே தொடங்கிவிடும் என்பது அதிர்ச்சித் தகவல்.

முதுமை தவிர்க்க முடியாதது என்றாலும், முதுமையில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கை அவசியம். அதுபற்றி முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.ஶ்ரீனிவாஸ் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்...

“முதியோர் என்றில்லை. எல்லா வயதினருக்குமே நோய்கள் வரும், போகும். ஆனால், முதியோர் நோய் வருவதற்கு முன்னரே தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். தினமும் 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.  எலும்புகள் பலவீனமடையாமலிருக்க `ஜாகிங்' போவது நல்லது. நல்ல உடல்நிலை இருப்பவர்கள் இவற்றைச் செய்துவந்தால், பிற்காலத்தில் எலும்புகளில் பிரச்னை வராமல் காத்துக்கொள்ளலாம். 

நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் மேற்கொள்பவர்கள் எப்போதும் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பயிற்சிகளின்போது கால் வழுக்கி கீழே விழுதல் அல்லது திடீர் நலக்குறைவு ஏற்படுதல்  ஆகியவை உண்டாகி, மிகுந்த தொல்லைகளைத் தரும். ஆகவே, கூடியவரை குழுவாகச் சென்றால், ஒருவர் மற்றவருக்கு உதவ முடியும். 

வயதாக ஆக தங்கள் உணவுமுறைகளை நிறையவே மாற்றியிருப்பார்கள். மலச்சிக்கல் பிரச்னை பலரையும் பாடாகப்படுத்திவிடும் என்பதால், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ப உணவுமுறையைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

மழைக்காலங்களில் நிமோனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பாதிக்கும் என்பதால், அதற்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது நல்லது. முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பதால், முன்னெச்சரிக்கை தேவை. மேலும், சதை மற்றும் எலும்புகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க ரத்தப் பரிசோதனைகள் செய்து, தேவைக்கேற்ப உணவுமுறைகளை அமைத்துக்கொண்டு, வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்வது நல்லது. மழைக்காலங்களில் நீர்நிலைகள் மற்றும் தண்ணீர் தேங்கிய சாலைகளில் நடக்கும்போதும், கழிவறைகளிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதுபோன்ற இடங்களில், தடுமாறி கீழே விழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். 
முதியவர்களை மற்றவர்களைப்போலப் பார்க்காமல் அவர்களது உடல் மற்றும் மன நலனில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம். மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக தன்னம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். வயதானவர்கள் தனிமையைத் தவிர்த்து, குழுவாகச் செயல்பட அறிவுறுத்துவோம். குழுவாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம், நகர்ப்புறங்களில் உள்ளவர்களிடம் நல்லதொரு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இது இப்போது கிராமப்புறங்களில் உள்ளவர்களிடமும் பரவிவருகிறது. இது நல்லதொரு தொடக்கம் என்றே நான் கருதுகிறேன்'' என்றார்.

‘வயதாகிவிட்டது’ என்று ஓய்ந்து, சோர்ந்துபோய் மூலையில் முடங்கிக் கிடக்காமல் இந்த உலகில் இருக்கும் காலம் வரை நல்ல உடல்நலத்துடன் வாழ இந்த முதியோர் தினத்தில் அவர்களை வணங்கி வாழ்த்துவதும், பாதுகாப்பதும் நம் கடமையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு