Published:Updated:

டெங்குக் காய்ச்சலா... ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..!

டெங்குக் காய்ச்சலா... ஊசி,  ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..!
News
டெங்குக் காய்ச்சலா... ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..!

டெங்குக் காய்ச்சலா... ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..!

ன்றைக்குத் தினசரி செய்திகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது `டெங்குக் காய்ச்சல்.’ தமிழக அரசு, `ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு கொசு ஒழிப்பு தினமா’க அனுசரிக்கும் அளவுக்கு இதற்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது. சென்னை எழும்பூர் அரசுக் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர், பேராசிரியர் இரா.சோமசேகர் ``டெங்குக் காய்ச்சல் தடுப்பு... நம் அனைவருக்குமான பொறுப்பு (Dengue fever Control - Every one's Responsibility)’’ என்கிறார். மேலும் டெங்குக் காய்ச்சல், எப்படிப் பரவுகிறது, அதற்கான சிகிச்சைகள், அதைத் தடுக்கும் வழிமுறைகள்... அனைத்தையும் விரிவாகப் பேசுகிறார் இங்கே... 

டெங்கு 
டெங்குக் காய்ச்சல் ஒரு வைரஸ் கிருமியால் வரும் நோய். ஏடிஸ் (Aedes) எனும் கொசுக் கடிப்பதால், இது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. இந்தக் கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். 

அறிகுறிகள்...
* கடுமையான காய்ச்சல் 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


* வயிற்றுவலி
* தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி 
* உடல்வலி
* மூட்டுவலி 
* கண்ணுக்குப் பின்புறம் வலி
* தொடர்ச்சியான வாந்தி
* களைப்பு 
* எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது (இது இந்த நோயின் முக்கிய அறிகுறி).
 * உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றினால், ஆபத்து அதிகம் என்று அர்த்தம்.

டெங்குவின் வகைகள்...
1 .சாதாரண டெங்கு ஜுரம் (Dengue fever)

2.  உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம் (Dengue hemorrhagic fever):
இந்த வகைக் காய்ச்சலில், டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் (Dengue Shock Syndrome): 
பெரும்பாலானோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். அப்படி ஒரு நிலை வந்தால் ஆபத்து அதிகம் என்று அர்த்தம்.. இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

இதில் முதல் வகை டெங்கு ஜுரம் வந்தால் மற்ற காய்ச்சல்களைப்போல வந்த வழி தெரியாமல் சென்றுவிடும். மற்ற வைரஸ் காய்ச்சல்களைப்போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்), இருமல், சளி, தலைவலி, உடல்வலி  எல்லாம் இருக்கும்.
இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை டெங்குக் காய்ச்சல்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மைகொண்டவை. இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்கள் (Platelets ) குறைத்து பல் ஈறுகளிலிருந்து ரத்தம் கசிதல் , மலத்தில் சிறுநீரில் ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதைச் சரியாகக் கவனிக்காமல்விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்தப் போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். 

டெங்குவுக்கான ரத்தப் பரிசோதனை:
ரத்தத்தில் எலிசா (ELISA)  எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதைக் கண்டறியலாம். 
 

தட்டணுக்கள் (Platelet) பரிசோதனை:
(நம் உடலில் தட்டணுக்களின் சரியான அளவு: 1.5 முதல் 4 லட்சம்/டெ.லி வரை)
டெங்குக் காய்ச்சல் ஆரம்பித்த முதல் இரண்டு நாள்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாள்களில் இதன் அளவு குறையத் தொடங்கி, ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.டெங்குக் காய்ச்சல் வந்த நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இந்தப் பரிசோதனை உதவும். 

உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலைகள்... 
* சிறுநீர்க் கழிப்பது குறைவானால்... 
* குழந்தை அழும்போது கண்ணீர் குறைவாகவோ அல்லது வராமலோ இருந்தால்... 
* உதடு, நாக்கு, வாய் உலர்ந்து போயிருந்தால்... 
* கண்கள் குழிவிழுந்ததுபோலானால்... 
* வேகமான இதயத் துடிப்பு (>100/நிமிடத்துக்கு) இருந்தால்... 
* கை, கால் விரல்கள் ஜில்லிட்டு இருந்தால்.

சிகிச்சைகள்...
இந்த ஜுரத்துக்கான தலையாய சிகிச்சை நீரிழப்பைப் சரிசெய்வது.  

* ஓ. ஆர். எஸ் (ORS) உப்பு-சர்க்கரைக் கரைசல், இளநீர், கஞ்சி, பழரசங்கள், நீர்மோர் போன்றவற்றை அதிகமாகப் பருக வேண்டும். 
* வாய்வழியே பருக இயலாதவர்களுக்கு, ரத்த நாளங்கள் (IV fluid) வழியாக திரவங்கள் ஏற்றப்படும்.
* காய்ச்சலைக் குறைக்க பாராசிடமால் (Paracetamol) மாத்திரை போதுமானது. டெங்கு பாதிப்பு உள்ளவருக்கு ஆசிட்டாமினோபென் (Acetaminophen) மாத்திரையை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். (அதாவது ஒரு நாளைக்கு நான்கு டோஸ்கள் மட்டும்). வேறு வலி குறைக்கும் மாத்திரைகளோ, ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் உள்ள மாத்திரைகளையோ கொடுக்கக் கூடாது. 
* குளிர்ந்த நீரைக் கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகவும் நன்மை தரும். 
* டெங்கு ஒரு வைரஸ் நோய் என்பதால், இதற்கு ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகள் அவசியம் இல்லை.
* மேலும், ரத்த தட்டணுக்களைப் பாதித்து ரத்தப் போக்கை உருவாக்கும் வியாதி என்பதால், தேவையற்ற ஊசிகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
* காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதைவிட்டுவிட்டு மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து, மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளைப் போட்டுக்கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். 
* காய்ச்சல் இருந்தால், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கிப் பருக வேண்டும். 

* சுத்தமான பப்பாளி இலைச் சாறும் தட்டணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டக் கூடியது.  
* மருத்துவர்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறச் சொன்னால், அதை உதாசீனப்படுத்தாமல் மருத்துவமனையிலேயே உள்நோயாளியாகத் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு பரவுவதைத் தடுப்பது எப்படி?

மிக மிக எளிது! 
* டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசு, நல்ல நீரில் முட்டையிட்டு பொரிக்கக்கூடியது. எனவே, நம் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் நல்ல தண்ணீரைச் சேமித்துவைக்கும் குடங்கள், பாத்திரங்களை மூடியிட்டு வைக்க வேண்டும். 
* வீட்டைச் சுற்றி பழைய டயர், காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள், தேங்காய் சிரட்டைகள், இளநீர்க் கூடுகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
* டெங்கு கொசு முட்டையிட, பத்து மி.லி நன்னீர் போதும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.  
* வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்தக் கொசு முட்டையிட்டு வளரும். அதையும் கவனிக்கவேண்டியது அவசியம்.  
* தண்ணீரைச் சேமித்துவைக்கும் கலன்களை, பாத்திரங்களை பிளீச்சிங் பவுடரால் வாரம் ஒருமுறையாவது தேய்த்துக் கழுவ வேண்டும்.
* ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் என்பதால், நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது. நம் பிள்ளைகள் பகலில் நேரத்தைச் செலவிடும் பள்ளிகள், நாம் பணிபுரியும் இடங்கள், அலுவலகங்கள் அனைத்தையுமே ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாகப் பராமரிக்க வேண்டும். 
* தண்ணீரைக் கட்டாயம் காய்ச்சித்தான் பருக வேண்டும். 
* கொசுக்களைத் தடுக்க கொசுவலை பயன்படுத்துவது நல்லது. கொசுக்கள் வராமல் தடுக்க ஜன்னல்களில்கூட கொசுவலை அடித்து வைக்கலாம். 
* மலம் கழித்த பின், உணவு உண்பதற்கு முன், சமையல் செய்வதற்கு முன் ஆகிய நேரங்களில் கட்டாயம் கைகளை சோப்பால் (Soap) கழுவ வேண்டும். 

இது தவிர, டெங்குக் காய்ச்சல் இருக்கும் நேரத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளைச் சாப்பிடக் கூடாது. தேவையில்லாமல் ஊசி போட்டுக்கொள்ளக் கூடாது. உடம்பு பலவீனமாக இருக்கிறது என்று குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ளக் கூடாது. இந்த விழிப்புஉணர்வு எல்லோருக்குமே வேண்டும். நாமாகவே ஏதாவது மருந்து வாங்கி சாப்பிடுவது கூடாது. `டெங்குவைக் குணப்படுத்துவோம்’ என்று விளம்பரப்படுத்தும் போலி, மோசடி மருத்துவர்களிடம் போய் மருந்து வாங்கிச் சாப்பிடுவது கூடவே கூடாது. அது, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். 

இன்னொரு முக்கியமான விஷயம், காய்ச்சல் விட்ட பிறகும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஜுரம் விட்ட 48 மணி நேரத்துக்கு நோயாளியை வெகுவாகக் கவனிக்க வேண்டும். இதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சொல்லப்படும் நேரம். இன்றுகூட நான் என்னிடம் சிகிச்சை பெற்றுவரும் ஒரு குழந்தையின் பெற்றோரிடம் இப்படிச் சொன்னேன்... `குழந்தை ஸ்கூலுக்குப் போகும்போது உங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுப் போகும்; டெங்கு வந்த இந்தக் குழந்தையின் காலில் நீங்கள் விழ வேண்டாம். ஆனால், அதன் கால்களைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். கை, கால் ஜில்லிட்டுப் போயிருக்கிறதா என்று தினமும் தொட்டுத் தொட்டுப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.’ 

வந்தபின் சிகிச்சை செய்வதைவிடவும் டெங்குவை வருமுன் தடுப்பது மிக நல்லது. கொசுக்களை ஒழிப்போம்... டெங்குவைத் தடுப்போம்... நோயில்லாமல் வாழ்வோம்!