Published:Updated:

நோபல் வென்ற உயிர்க் கடிகாரக் கண்டுபிடிப்பு... நம் முன்னோரின் ‘நாள் ஒழுக்க’ தியரிதான்! #NobelforMedical2017

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நோபல் வென்ற உயிர்க் கடிகாரக் கண்டுபிடிப்பு... நம் முன்னோரின் ‘நாள் ஒழுக்க’ தியரிதான்! #NobelforMedical2017
நோபல் வென்ற உயிர்க் கடிகாரக் கண்டுபிடிப்பு... நம் முன்னோரின் ‘நாள் ஒழுக்க’ தியரிதான்! #NobelforMedical2017

நோபல் வென்ற உயிர்க் கடிகாரக் கண்டுபிடிப்பு... நம் முன்னோரின் ‘நாள் ஒழுக்க’ தியரிதான்! #NobelforMedical2017

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லுவலகத்தில் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருப்போம், திடீரென்று பசிக்கத் தொடங்கும். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தால் வழக்கமாக நாம் தினமும் சாப்பிடும் நேரமாக இருக்கும். "சாப்பிடுற நேரம் எனக்குத் தெரியுதோ இல்லையோ, என் வயிறுக்கு கரெக்ட்டா தெரியுது... சரியா ஒரு மணி ஆனதும் வயித்துல மணி அடிக்க ஆரம்பிச்சுடுது" என்று சிலர் விளையாட்டாகச் சொல்வார்கள். ஆனால், அதில் உண்மை இருக்கிறது. வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ, அதைப்போல நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதுதான் 'உயிரியல் கடிகாரம்'. 

18-ம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த உயிரியல் கடிகாரம் கண்டறியப்பட்டது. வானியல் அறிஞரான ஜேக்குஸ் டி மாய்ரான்,  'மிமோசா'  (Mimosa Plants)  என்னும் தாவரங்கள்குறித்து ஆய்வுகள் மேற்கொண்டபோது இதைக் கண்டறிந்தார். இந்தத் தாவரங்கள் பகலில் சூரியனை நோக்கி இலைகளை விரித்தும், இரவில் கீழ்நோக்கி கவிழ்ந்தும் கொண்டிருப்பதையும் பார்த்து, உயிரியல் கடிகாரம் பற்றிய தியரியை உருவாக்கினார். 

அதன்பிறகு, ஆய்வுகள் சூடுபிடித்தன. மனிதர்களுக்குள்ளும், பிற உயிரினங்களுக்குள்ளும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளை அறிந்துகொள்ளும் விதமாக  உயிரியல் கடிகாரங்கள் இருப்பது அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன. தினசரி நிகழும் இந்த மாற்றங்களுக்கு 'சிர்காடியன் ரிதம்' (Circadian Rhythm) என்று பெயர் சூட்டப்பட்டது. 

இந்த உயிரியல் கடிகாரம் எப்படி செயல்படுகிறது? அதற்குக் காரணமாக இருப்பது என்ன? என்பது பற்றி ஆய்வுசெய்து பல முடிவுகளை உருவாக்கியதற்காகத்தான், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

"உயிரியல் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது? நோபல் பரிசு தரும் அளவுக்கு அதில் அப்படியென்ன முக்கியத்துவம் இருக்கிறது?"  

மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி தா.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்

“நமக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பசியெடுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் தூக்கம் வரும், குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பு வரும். இது எல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற இயக்கங்கள். ஆனால், வெளியில் தெரியாக பல செயல்பாடுகள் உடலுக்குள் நடைபெறும். உதாரணமாக, ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீரகம் இயங்கவேண்டும், ரத்தம் எவ்வளவு ஊறவேண்டும், குடலின் உள்சுவரில் உள்ள பொருள்கள் எத்தனை நாளைக்கு ஒருமுறை உதிர்ந்து புதிதாக உருவாக வேண்டும்  என்பதை எல்லாம் அந்த உயிரியல் கடிகாரம்தான் தீர்மானிக்கிறது. 

மனிதர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா உயிரினங்களுக்கும் அப்படித்தான்.  உதாரணமாக, ஒரு தாவரம் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூ பூக்கும் என்றால் எக்காலமும் அது மாறாது. 60 வருடம் ஆனது தாவரங்களுக்கு எப்படித் தெரியும். வேறு வேறு இடங்களில் அந்தத் தாவரத்தை நட்டால் கூட அது சரியாகத்தான் பூக்கும். 

மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களும் சரியான கால நீரோட்டத்தில் இயங்கக் காரணமாக இருப்பவை இரண்டு ஜீன்கள்.  பீரியட் (period). டைம்லெஸ் ஜீன் (Timeless). 

முதல் ஜீனை,  ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் ஆகிய இருவரும் கூட்டாக கண்டறிந்தனர். இரண்டாவது ஜீனை, மைக்கேல் டபிள்யூ.யங்மாகி கண்டறிந்தார். 

இந்த ஜீன்கள்  செய்யும் வேலை என்ன ?

பீரியட் ஜீன் , ஒரு வகையான புரதத்தை உற்பத்தி செய்யும். இது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். செல்லில் இந்தப் புரதத்தின் அளவு குறையக் குறைய,  இரண்டாவது ஜீனான டைம்லெஸ் (Timeless). ஜீன் சிதையும். இந்த சிதைவுதான் காலம் நகருவதை செல்களுக்கு உணர்த்தும். இதன்மூலம் தான் நமக்குத் தூக்கம், பசி போன்ற வெளிப்படையான உடலியல் இயக்கங்களும், உடலுக்குள் ஏற்பட வேண்டிய  இயக்கங்களும் சரிவர நடக்கின்றன. இந்தப் புரதம் இரவு நேரத்தில் அதிகமாகச் சுரப்பதையும், பகலில் அதன் அளவு குறைவதையும் மேற்கண்ட மூவரும் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 'சிர்காடியன் ரித'த்தைப் பொருத்து புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதையும் நிரூபித்துள்ளனர்.

 ஃப்ரூட் ஃப்ளைஸ் (Fruit Flies) என்னும், பழங்களை மொய்க்கும் ஒரு வகை ஈக்களில் இருந்து இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்து சாதித்திருக்கிறார்கள். 

இந்த ஆராய்ச்சிக்கும் பிறகு நடைபெற்றுவரும் ஒரு முக்கியமான விவாதம், மனிதர்களில் உள்ள வேறுபாட்டைப் பற்றியது. மனிதர்களில்  பகலில் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் இருப்பார்கள். இவர்கள் காலை நேரத்தில் சிறப்பாக வேலை செய்வார்கள். படிப்பார்கள், எழுதுவார்கள். ஆனால், சிலர் இரவு நேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்குவார்கள்.  படிப்பார்கள். எழுதுவார்கள்.

இரவு நேரத்தில் இயங்கவே முடியாத ஒருவர் நைட் ஷிப்ட்டில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பார். அவரால் வேலையை ஒழுங்காகச் செய்யமுடியாது. அது மட்டுமல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளும் அவருக்கு உண்டாகும். 

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் தனித்தன்மைகளைக் கண்டறிந்து விட்டால் அனைவரும் காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்யவேண்டும் என்கிற நிலை மாறும். ஐரோப்பாவில் பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் 8 மணி நேரம் வேலை செய்யவேண்டும். ஆனால், அது எந்த நேரம் என்பதை ஊழியர்களே தீர்மானம் செய்துகொள்ளலாம். அதைப்போன்ற முறை இங்கே இல்லை.

எதிர்காலத்தில் அறிவியல் ரீதியாக ஒரு மனிதத் தன்மையுடன் ஒரு சமூகத்தைப் படைக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்... " என்கிறார் தா.வி. வெங்கடேஸ்வரன்.

உயிரியல் கடிகாரம் பாதிக்கப்பட்டால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் உண்டாகும்?

பொதுநல மருத்துவர் சிவராமக்கண்ணனிடம் கேட்டோம் 

“உயிரியல் கடிகாரத்துக்கு மாறாக நாம் செயல்படும்போது டயாபட்டீஸ், ரத்த அழுத்த நோய், இதயநோய்கள், ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, ஒரு நாளில் காலை 9 மணி முதல் 2 மணி வரைதான் நாம் சிறப்பாக இயங்க முடியும் அதற்குப் பிறகு ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இரவு நேரம் நெருங்கியதும் மெலட்டனின் சுரந்து நமக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், அந்த நேரத்தில் வலுக்கட்டாயமாக வேலை செய்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இதற்கெல்லாம் காரணம் உயிரியல் கடிகாரத்தை செயல்படுத்த உதவும் ஒரு வகையான புரதம்தான். இந்தப் புரதம் அதிகமாக இருக்கும்பொழுது நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். குறையும்போது செயல்பட முடியாது. இந்தப் புரதத்தைக் கண்டறிந்ததற்காகத்தான் தற்போது நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்பட இருக்கின்றன. எப்படி தூக்கம் வருவதற்கு மெலட்டனின் மாத்திரைகள் உதவுகிறதோ, அதேபோல் இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய மருந்துகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதைத்  தவிர்க்க முடியும்" என்கிறார் மருத்துவர் சிவராமக்கண்ணன்.

"உயிரியல் கடிகாரம் பற்றி  சித்த மருத்துவம் என்ன சொல்கிறது?"

சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.

“சிர்காடியன் ரிதம், சித்த மருத்துவத்தில் 'நாள் ஒழுக்கம்' என்று அழைக்கப்படுகிறது. ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்' என்பதே சித்த மருத்துவத்தின் கான்செப்ட். வெளியில் உள்ள பஞ்சபூதமும், உடலில் உள்ள பஞ்சபூதமும் சேர்ந்துதான் உடலை இயக்குகின்றன. காலை 4.30 முதல் 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும் என்பதே முதல் ஒழுக்கம். காலை எழுந்ததும் நல்ல காற்றுக்காக நுரையீரல் ஏங்கும். நல்ல காற்றானது 4.30 முதல் 6 மணி வரை தான் இருக்கும். இதுதான், 'பிரம்ம முகூர்த்தம்' என்கிறோம். அதனால்தான் காலை விடியற்காலையில் எழவேண்டும் என்கிறோம். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். எட்டு மணிக்குள் உறங்கிவிட வேண்டும். இதுபோன்ற பழக்கவழக்கங்களை வாழ்வியல் முறைகளோடு பிணைத்துத் தந்துள்ளனர் நம் முன்னோர்கள். நாம் பகுத்து ஆராய்ந்து தீர்த்த இயற்கையை நவீன ஆராய்ச்சி மூலம் இப்போது கண்டுபிடித்துள்ளனர். முன்னோர்கள்  சொன்னார்கள் என்றால் யாரும் கேட்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் சொன்னால்தான் கேட்பார்கள். எப்படியாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி..." என்கிறார் வேலாயுதம்.

உயிர்க்கடிகாரம் பற்றிய ஆராய்ச்சி நம் மதுரையில் மேற்கொள்ளப்பட்டது. அதுகுறித்து விவரிக்கிறார், 'கைக்கடிகாரமும், உயிர்க்கடிகாரமும்' என்ற புத்தகத்தை எழுதிய  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பொன்னையா ராஜமாணிக்கம். 

“உயிர் கடிகாரம் குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சோதனை செய்யப்பட்டது. பிக்பாஸ் மாதிரி, இது 'பங்கர் ஸ்டடி'. பூமிக்கடியில் குழி தோண்டி அதற்குள் மூன்று விஞ்ஞானிகள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு பகல், இரவு என்று  எதுவும் தெரியாது. அவர்களின்  தூக்கம், வேலைநேரம், ஒய்வு நேரம் இதெல்லாம் கணக்கிடப்பட்டது . அதேபோல் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமாக ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆய்வில் ' உயிர்க்கடிகாரம்'  மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமான புரதம்தான் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

உயிர் அணுக்களும் ஒருவித கடிகாரச் சுழற்சியில்தான் இயங்குகின்றன. ஆஸ்துமா நோயாளிகளுக்கு காலை நேரத்தில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் எல்லாம் காலைநேரத்தில் வேலை செய்யக்கூடியவையாக இருக்கும்.

அதேபோல், நம் வீட்டில் மாலை நேரத்தில் சவரம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் மாலை நேரத்தில் ரத்தம் உறைவது தாமதமாகும் என்பதற்காகத்தான்... " என்கிறார் ராஜமாணிக்கம்.

ஆக, நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பென்பது, நம் முன்னோர் முன்பே கண்டறிந்த ஒரு தத்துவத்தின் சிறு பொறிதான். நம் முன்னோரின் சித்தாந்தங்களை, கண்டுபிடிப்புகளை, தத்துவங்களை, மருத்துவத்தை எல்லாம் தொகுத்து, மொழி மாற்றி உலகின் பார்வைக்குக் கொண்டு சென்றால்..? நோபல் என்ன... உலகில் இருக்கும் அத்தனை விருதுகளும் நமக்குத்தான்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு