Published:Updated:

“ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கலாமா... காதலிக்கலாமா?!” - இயக்குநர் ஆர்.பார்த்திபனின் ‘சந்தோஷ’ டானிக்

“ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கலாமா... காதலிக்கலாமா?!” - இயக்குநர் ஆர்.பார்த்திபனின் ‘சந்தோஷ’ டானிக்
“ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கலாமா... காதலிக்கலாமா?!” - இயக்குநர் ஆர்.பார்த்திபனின் ‘சந்தோஷ’ டானிக்


“உங்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’ என்று நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனிடம் கேட்டோம். அதற்கு அவர் சொன்னது அவருக்கே உண்டான தனித்துவமான அக்மார்க் பார்த்திபன் பதில். அது... 

“ ‘stress’னு நாம சொல்றதுல இருக்கிற மூணு `s’-ஸையும் ஒழிக்கணும்னா நாம நிறைய விஷயங்களுக்கு `yes’ சொல்லிக்கிட்டே வரணும். அதாவது வேற சில வேலைகளை இழுத்துப்போட்டு செய்ய ஆரம்பிச்சிடணும். அப்போ ஆட்டோமேட்டிக்காக நம்ம ஸ்ட்ரெஸ் குறைய ஆரம்பிச்சிடும். இப்போ நீங்க போன் பண்ணும்போதுகூட பயங்கர ஸ்ட்ரெஸ்ல இருந்தேன். உங்கக்கிட்ட ஸ்ட்ரெஸ்ஸைப் பத்தி பேச ஆரம்பிச்சதும் அது எனக்கு மறந்துடுச்சு. 

எப்பவும் நம்மை பிஸியாவெச்சிக்கிட்டோம்னா அடுத்தடுத்த வேலைகள்ல இது மறந்துபோயிடும். திஸ் ஈஸ் தி பாஸிட்டிவ் மெத்தர்டு ஆஃப் குறைச்சிஃபையிங் தி ஸ்ட்ரெஸ். இதைவிட்டுட்டு 'தண்ணி அடிப்போம்'னு அடிச்சோம்னா திருகுவலி போய், தலைவலி வந்த கதையாகிடும். நம்ம பிரச்னை நம்ம மேல உட்கார நினைச்சுதுனா, நாம அது மேல ஏறி உட்கார்ந்துடணும். 

நான் கடைசியா எடுத்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துல எனக்கு நாலு கோடி ரூபாய் நஷ்டம். 'அய்யய்யோ... இப்படி ஆயிடுச்சே'னு நான் கவலைப்பட்டுக்கிட்டு உட்கார்ந்தேன்னா அவ்வளவுதான். இரு கோடுகள் கதை மாதிரிதான். சின்னக் கோட்டை அழிக்காம, அதன் அளவைக் குறைக்க பெரிய கோடு வரையறது. இப்போ எட்டு கோடி ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

நம்ம வேலையை நாம லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா, மனஅழுத்தம் எப்பவுமே ஏற்படாது. சினிமாவை நான் என்னுடைய காதலியாகத்தான் பார்க்கிறேன். காதலியை யாருக்கும் தெரியாமப் பார்த்து கண்ணடிக்கும்போது, முத்தமிடும்போது கிடைக்கிற சந்தோஷம் ஒரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கும்போது கிடைக்கும். 

நேத்திக்கு ராத்திரி ஓட்டல் பார்ட்டி ஒண்ணுல ஒரு பொண்ணு வந்து `சார் நீங்க நடிச்ச 'தென்றல்' படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் சார்’னு காதோரம் வந்து சொன்னாங்க. அதைக் கேட்டதும் எனக்குக் கிடைச்ச சந்தோஷம்... எனக்குக் கிடைச்ச உற்சாகம்... இன்னமும் இந்த கரியர்ல தொடர்ந்து பயணிக்க வைக்குது. 

யோகா, தியானம் பண்ணுங்கனு சொல்லுவாங்க. கண்ணை மூடிக்கிட்டு தியானத்துல உட்கார்ந்தோம்னா, ஏழு பொண்டாட்டிங்க மாதிரி ஒரு பிரச்னை தோள்ல வந்து உட்கார்ந்துக்குது. ஒண்ணு மடியில வந்து உட்கார்ந்துக்குது. தியானத்துக்குப் போகணும்னா நிர்மூலமா, எந்தப் பிரச்னையையும் நினைக்காமப் போகணும் நமக்குத்தான் கண்ணை மூடுனோம்னா ஆயிரம் பிரச்னை. இதுக்குக் கண்ணைத் திறந்தேவெச்சிருக்கலாம். ஒரு பிரச்னையோட போயிடும்.

பொதுவாகவே நான் நேர நிர்வாகத்துல ரொம்பக் கவனமா இருப்பேன். காலையிலேயே இன்னைக்கு என்னென்ன வேலைகளைச் செய்யணும்னு 28 விஷயங்களுக்கு டைம்டேபிள் போட்டு வெச்சிருப்பேன். 10 மணிக்கு இந்த வேலை, 11 மணிக்கு இந்த வேலை, 12 மணிக்கு இந்த வேலைனு பிரிச்சுவெச்சிடுவேன். ஆனா, 10 மணிக்கு வர வேண்டியவர் போன் பண்ணி, 'நான் ஒரு 11:30 மணிபோல வர்றேன் சார். கேரளாவுலர்ந்து வரவேண்டிய ட்ரெயின் லேட்டா வந்துக்கிட்டு இருக்கு சார்' அப்படிம்பாங்க. 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ள நாம வேற இடம் போகவேண்டி இருக்கும். ஆனா, அதை கேன்சல் பண்ண வேண்டி இருக்கும். டைம்ங்கிறது எவ்வளவு ப்ரீசியஸ் (Precious). ஆனா, ரொம்ப கூலா, `ட்ரெயின் லேட்டு’னு சொல்லிடுவாங்க. முன்னாடியெல்லாம் இந்த மாதிரி விஷயத்துக்குக் கோபம் வரும்... டென்ஷன் ஆவேன். இப்போ இதெல்லாம் பழகிடுச்சு. 

ஒரு விஷயத்தைத் தொடங்கும்போதே, அதுக்கு மாற்று ஏற்பாடா இன்னொண்ணைவெச்சிக்கப் பழகிட்டோம்னா இது சரியாயிடும். இந்த வேலை இல்லைனா, அடுத்து வேற என்ன பண்ணணும்னு முடிவு பண்ணி வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டோம்னா டென்ஷன் வராமப் பார்த்துக்கலாம். 

நம்ம மனசுதான் நமக்கு முதல் குழந்தை. அதற்கு அழுத்தம் ஏற்படாம சந்தோஷமா வெச்சிக்கிட்டோம்னா எந்தப் பிரச்னையும் வராது. `உலகம் எப்படி வேணாலும் இருந்துட்டுப் போகட்டும்... நாம சரியாக இருப்போம்’னு இருக்க ஆரம்பிச்சிட்டோம்னா பாதி பிரச்னை இல்லாமப் போயிடும். நாம சரியா இருக்கிறதுனால கிடைக்கும் முதல் நன்மை நமக்குத்தான்'' என்று தனக்கே உரிய பஞ்ச் டயலாக்குடன் முடித்துக் கொண்டார்.