Published:Updated:

அந்தப்புரம் - 6

அந்தப்புரம் - 6

அந்தப்புரம் - 6

அந்தப்புரம் - 6

Published:Updated:

'நீயெல்லாம் புகுந்த வீட்டுக்குப் போய், எப்படிக் குப்பை கொட்டப்போறயோ?'' ஊரில் இருந்து வந்த அத்தை இப்படித்தான் திட்டினாள். ஒவ்வொரு பெண்ணுக்கும், தான் புகுந்த வீட்டுக்குப் போக வேண்டியவள் என்பது இப்படித்தான் ஏதாவது ஓர் உறவினர் மூலம் நினைவுறுத்தப்படுகிறது.

இப்போதெல்லாம் அப்பாவும் அம்மாவும்கூட அவ்வப்போது ஜாடைமாடையாக அனிதாவின் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தார்கள்.  

புது வீட்டுக்குப் போவதே ஒரு திகிலாக இருந்தது. இந்த அழகில் புருஷனோடு 'குப்பைகொட்டுவதை’ நினைத்துப் பார்த்தாள். குழந்தை பெற்றுக்கொள்வது திருமணத்தோடு தொடர்புடையது என்பது மட்டும்தான் புரிந்தது. வயிற்றில் குழந்தை வளரும். வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுப்பார்கள்... எனப் பலவிதமாகத் தோழிகள் சொல்வார்கள். கல்யாணமே அவளுக்குக் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவளுடைய தோழி ஒருத்தி, 'அடிப்பாவி இதுகூடத் தெரியாதா? பெண் உறுப்பின் மூலம்தான் குழந்தை வெளியே வரும்'' என்றாள்.

அந்தப்புரம் - 6

பக்கத்து வீட்டு அக்காவுக்குக் குழந்தை பிறந்தது. அம்மாவுடன் ஹாஸ்பிட்டலுக்குப் போய் குழந்தையைப் பார்த்தாள். மூன்று கிலோவுக்கு மேல் இருந்தது குழந்தை. அதைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, 'இது எப்படி பெண் உறுப்பின் வழியாக வர முடியும்’ என்ற 'கனமான’ சந்தேகம் வந்து மறைந்தது. சிறுநீர் கழிக்கும் உறுப்பு மிகச் சிறிய துளையாக இருக்கிறதே அதில் எப்படி இவ்வளவு பெரிய குழந்தை பிறக்க முடியும்? அவளுடைய சந்தேகத்தை யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது? அம்மா, அத்தை, டீச்சர்...  யாரிடம் கேட்டாலும் தப்பாக நினைப்பார்கள்.

அனிதாவுக்கு பெண் உறுப்பைப் பற்றிய சந்தேகங்கள் அதிகமாகவே இருந்தன. அந்த சந்தேகங்கள் பயமாகவும் கவலையாகவும் மாறியிருந்தன.

நம் உறுப்பும் உடலும் குழந்தை பெறுவதற்குத் தயாராகிவிட்டனவா? பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது 21 என்று போட்டிருக்கிறார்களே, திருமணத்துக்கு என்று ஒரு வயது உண்டா?  ஒரு முறை அலுவலகத்தில் திருமணம் பற்றி பேச்சு வந்தது. 'கன்னி சவ்வு கிழிந்துவிட்டால், புருஷன்காரன் கன்னித்தன்மை இல்லாதவள் என்று துரத்திவிடுவான்'' என்றாள் ரிசப்ஷனிஸ்ட் பவானி.

நமக்குக் கன்னி சவ்வு கிழிபடாமல் இருக்கிறதா? என்பதும் அவளுடைய அச்சப் பட்டியலில் சேர்ந்துகொண்டது. 'எனக்கு கல்யாணம் வேண்டாம்’ என்று சொல்ல ஆரம்பித்திருந்தாள். நாணத்தால்தான் அப்படிச் சொல்வதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அது நாணம் அல்ல; அச்சம்.

ஏன்? எதற்கு? எப்படி?

சிறுநீர் கழிக்கும் உறுப்புதான், உடல் உறவுக்கான உறுப்பா?

அனிதாவுக்கு மட்டுமல்ல, உலகில் பல பெண்களுக்கும் இந்த சந்தேகம் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டு மறையும். இதுபோன்ற விஷயங்களைப் பெரியவர்களும், பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வதற்குத் தயங்குகிறார்கள். பிள்ளைகளோ, பெரியவர்களிடம் கேட்பதற்குப் பயப்படுகிறார்கள். செக்ஸ் என்பதே தயக்கமும் அச்சமும் நிறைந்ததாக மாறிவிடுகிறது. அதனால்தான் அனிதா பெண் உறுப்பு முழுதையுமே சிறுநீர் கழிக்கும் உறுப்பு எனத் தவறாக நினைக்கிறாள்.

அந்தப்புரம் - 6

பெண் உறுப்பை உட்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

பெண்குறியின் உட்புறம் 1. ஓவரிஸ் (கருப்பை), 2. ஃபெலோப்பியன் ட்யூப், 3. கர்ப்பப்பை (யூட்ரஸ்), 4. யோனி (வெஜைனா) என நான்கு முக்கியப் பகுதிகளைக்கொண்டது. பெண்களின் உட்புற செக்ஸ் உறுப்புகள் மூன்று முக்கிய வழிகளில் செயல்படுகின்றன.

முதலில், உற்பத்திப் பிரிவுகள். ஓவரிஸ்,  கரு முட்டை உருவாகும் இடம். கருத்தரித்த முட்டை பாதுகாப்பாக வளரும் இடம், கர்ப்பப்பை. அங்குதான் கருத்தரித்த முட்டை தங்கி, குழந்தையாக வளர்கிறது,  தவிர, மூன்று குழாய்கள் உள்ளன. இரண்டு ஃபெலோப்பியன் குழாய்கள், மற்றும் (யோனி) வெஜைனா.

இந்தப் யோனியைக் கன்னிச் சவ்வு மூடியிருக்கும். முதல் முறை உடலுறவு கொள்ளும்போது இந்தச் சவ்வு கிழிபடும். அப்போது சிறிய அளவில் ரத்தம் வெளியாகும். ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது, தாண்டிக் குதிப்பது, விளையாடுவது போன்ற செயல்களால் திருமணத்துக்கு முன்பேகூட கன்னிச்சவ்வு கிழிந்துவிடுவது உண்டு.

உடலுறவு கொள்வது யோனி வழியாகத்தான். படித்த பலருக்கே இந்த விவரம் தெரிவது இல்லை. என்னிடம் வந்த ஒரு படித்த, புதுத் தம்பதியினர் உடலுறவின்போது வலி ஏற்படுவதாகச் சொன்னார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான், அந்தப் பெண்ணின் சிறுநீர் கழிக்கும்  துளையின் வழியே உடலுறவுக்கு முயற்சி செய்தது தெரியவந்தது.

இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றிய போதிய தெளிவு இல்லாமையே இதற்குக் காரணம். குழந்தையை ஈன்றெடுப்பதும் அந்தப் பெண்குறி வழியாகத்தான். வயிற்றைக் கீறி எல்லாம் குழந்தையை வெளியே எடுப்பது இல்லை.

ரகசியம் பகிர்வோம்

டவுட் கார்னர்

'பெண் உறுப்பு என்று பொதுவாக எதைச் சொல்கிறோம்?'

ராஜாராமன், சென்னை - 21.

'பெண்குறி என்பது பெண்களின் செக்ஸ் உறுப்பு ஆகும். அதன் வெளிப்புறப் பகுதியின் முழுத் தொகுதியை வால்வா என்கிறோம். அதன் பெரும்பகுதி முடியால் மூடப்பட்டு இருக்கிறது. அது இரண்டு தொடைப் பகுதிகளும் இணையும் மையப் பகுதியில் உள்ளது. பெண்களுக்கு யோனியின் திறப்புப் பகுதி (படம்) ஒரு சவ்வினால் ஓர் அளவுக்கு மூடப்பட்டு இருக்கும். அதன் மேலே சிறுநீர் வெளியேறும் துளை உள்ளது. பெண் குறிக்குள் பார்த்தோலின் சுரப்பிகள் மூலம் பிசுபிசுப்பான திரவம் சுரக்கப்படுகிறது. இந்தத் திரவம் பெண்குறியின் உள் உதடுகளான லேபியா மைனோராவை உழைவுத்தன்மையோடு வைத்திருக்கிறது. சிறுநீர் குழாய்க்கு மேலே அதை மூடியபடி கிளிடோரியஸ் இதழ் அமைந்துள்ளது. ஆணுறுப்புக்கு நிகராக இதைச் சொல்லலாம். வெளி உதடுகள் லேபியா மஜோரா எனப்படும். இது  மோன்ஸ் வெனரிஸ் பகுதியில் இருந்து வெளிப்படுகிறது.

வால்வா எனப்படும் இந்த ஒட்டுமொத்த பெண் உறுப்புத் தொகுதியும் ஒரு பொது எலும்பு (பப்ளிக் போன்) வளையத்தின் உட் சுவருக்குள் சதைப் பகுதியால் சுற்றப்பட்டு அமைந்துள்ளது.'

'அதிகமாகத் தேய்த்துக் கொடுப்பதனால் கிளிட்டோரியஸ் பகுதி பாதிக்கப்படுமா?'

ரமா தேவி, சென்னிமலை.

'இல்லை. போதிய உழைவுத்தன்மை இல்லாமல் அதிகமாகத் தூண்டப்பட்டால் ரணமாகக்கூடும்.'

'உடலுறவின்போது என் கணவர் கிளிடோரியஸ் பகுதியை தேய்த்துக் கொடுக்கிறார்.  அப்படித் தேய்க்கும்போது கிளிடோரியஸ் பகுதி மறைந்துவிடுவதாகச் சொல்கிறார். அது உண்மையா?'

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, பொள்ளாச்சி.

'பெண் சாதாரண நிலையில் இருக்கும்போது கிளிடோரியஸை நன்றாகப் பார்க்க முடியும். ஆனால், பெண் அதிகமாகத் தூண்டப்படும்போது, கிளிடோரியஸ் பகுதி உள்ளே மறைந்துவிடுகிறது. அப்படி மறைந்துவிடும் நிலையிலும் கிளிடோரியஸ் பகுதி சென்சிட்வாக இருக்கும். மறைந்துவிடுகிறது, பார்வைக்குத் தெரியவில்லை என்பதற்காக உங்கள் கணவர் கவலைப்பட வேண்டாம். முதலில் கிளிடோரியஸ் தென்பட்ட சதைப் பகுதியைத் தேய்த்துக் கொடுத்தாலே, தொடர்ச்சியாகத் தூண்டல் ஏற்படும்.'

அந்தப்புரம் - 6
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism