Published:Updated:

அதிவேகத்தில் பரவும் டெங்கு... அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னென்ன?

அதிவேகத்தில் பரவும் டெங்கு... அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னென்ன?
அதிவேகத்தில் பரவும் டெங்கு... அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னென்ன?
அதிவேகத்தில் பரவும் டெங்கு... அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னென்ன?

டெங்குக் காய்ச்சல் என்றாலே பெரும்பாலான மக்கள் நாடுவது, அரசு மருத்துவமனைகளைத்தான்! அப்படி வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கமுடியாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி, வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்வரை திணறும்நிலையே உள்ளது. தலைநகர் சென்னையாக இருந்தாலும் சரி,  தென்கோடியில்  இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி... எங்கும் இந்தப் பிரச்னை நீடித்தபடி இருக்கிறது. இதற்குப் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள், மருத்துவர்கள். 

கோடை மாறி மழை, குளிர் பருவங்கள் வருகையில் வைரஸ் காய்ச்சலும் கூடவே வரும் என்பதால், அதைத் தடுப்பதற்காக முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே நீண்ட காலமாக இந்தப் பணியைச் செய்துவந்த நிலையில், சமீபமாக துப்புரவுப் பணி முழுவதையும் தனியார்மயப்படுத்திவிட்டார்கள். ஆரம்பசுகாதார நிலையத்தின் பணியாளர்களை உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளைச் செய்ய வைக்கின்றனர். குறிப்பாக சில ஆண்டுகளாக ஆய்வகப் பணியாளர்களுக்கு ஒரு பயிற்சியைக் கொடுத்து, அவர்களை பன்னோக்கு சுகாதாரப் பணியாளர் என ஆக்கி, உள்ளாட்சி அமைப்புகளின் பணியைச் சுமத்துவதால் அவர்களால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் முழுவதுமாக ஈடுபடமுடியவில்லை. இது கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் முக்கியமான பிரச்னை என்கிறார்கள், மருத்துவ உரிமைக்கான செயற்பாட்டாளர்கள். 

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர். இரவீந்திரநாத்திடம் பேசியபோது, உடனடி மற்றும் போர்க்கால நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.  

"தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எல்லா இடங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

அதிவேகத்தில் பரவும் டெங்கு... அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னென்ன?

ஆனால் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. அகில இந்திய அளவில், 12 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார்.  டெல்லி மாநிலத்திலோ 3,500 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதைப் பார்த்தால், இதன் முக்கியத்துவம் புரியும். 

இதேபோல 30 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்பசுகாதார நிலையம் இருக்கிறது; ஆனால் 15 ஆயிரம் பேருக்கு ஒன்றாவது இருக்கவேண்டியது அவசியம். துணை மையங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரம் பேருக்கு ஒன்றாக இருக்கிறது; இதை, 2500 பேருக்கு ஒன்றாக அதிகரிக்கவேண்டும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தது 6 மருத்துவர்கள், 6 மருத்துவப் பணியாளர்களை நியமித்து, 24 மணி நேரமும் இயங்கச் செய்யவேண்டும்.

மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகளும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இல்லாததால், காய்ச்சலோடு வருபவர்களை படுக்கை இல்லை என்றோ வேறு காரணம் சொல்லியோ திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இதனால் தனியார் மருத்துவமனையை நாடவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். அங்கு சிகிச்சைக் கட்டணம் அதிகமாக இருப்பதால் மருந்துக்கடைகளில் சுயமாகவே மருந்தை வாங்கி உட்கொள்கிறார்கள். உரிய நேரத்தில் மருத்துவரை அணுகாமல் சுயசிகிச்சை செய்துகொள்வதால் தான் விரும்பதகாத விளைவுகள் ஏற்படுகின்றன. 

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆங்காங்கே பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக மருத்துவமனைகளை அரசு அமைக்கவேண்டும். இதில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள், செவிலியர்களைப் பணியில் அமர்த்தலாம். 

இதுமட்டுமின்றி டெங்குத் தடுப்பூசிக்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. சில நாடுகளில் தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. வாஷிங்டனில் ஜிகா வைரஸ் தாக்கியபோது, பெல்லட் குண்டுகள் வடிவத்தில் கொசுக்கொல்லிகளை நீர்நிலைகளில் வெடிக்கவைத்து கொசுக்களை ஒழித்தார்கள். டெங்கு, வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கியூபா, அதிலிருந்து மீண்ட வழிகளையும் நாடலாம். சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண் கொசுக்களை மலட்டுத்தன்மை கொண்டதாக மாற்றும் ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இதன்மூலம் கொசுக்களின் இனப்பெருக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் ஆய்வுசெய்து, தடுப்பு முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு டெங்கு சிகிச்சைக்கான சிறப்புப் பயிற்சிகளையும் அளிக்கவேண்டும்” என்கிறார் அவர். 

"இதை சுகாதாரத் துறையின் நடவடிக்கை என்பதாக மட்டும் குறுக்கிவிடுவது தவறான கண்ணோட்டம்; பிரச்னையைத் தீர்க்க இது பயன்படாது" என்கிறார்கள், மருத்துவப் பேராசிரியர் மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் ஆய்வாளர்கள் தரப்பில். 

” டெங்கு  மற்றும் வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் 80% பேருக்கு வந்துவிட்டுப் போய்விடக்கூடிய ஒன்றுதான். குழந்தைகளுக்கு, குறிப்பாக ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, முதியவர்களுக்கு, நோயெதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களுக்குத் தான் ரத்தக்கசிவு, உயிராபத்து அளவுக்கான பாதிப்புகள் வருகின்றன. இதன் சமூகக்காரணிகளைக் கணக்கில்கொண்டு ஆய்வுசெய்யவேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் நகரமயமாக்கல் அதிகரித்துள்ளது; அத்துடன் கழிவுகளும் அதிகமாக உருவாகின்றன. இவற்றை முறைப்படுத்தாமல் கொசு அழிப்பைப் பற்றி திட்டமிட்டால்,  டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவுவதைத் தடுக்கமுடியாது”என்கிறார்கள். 

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் டெங்குவை அழிக்க, முன்னேயுள்ள எல்லா தீர்வுகளையும் அரசாங்கம் பரிசீலிப்பது அவசர அவசியம்!