Published:Updated:

தீபாவளி... எண்ணெய்க் குளியலின்போது இதையெல்லாம் தவறவிடாதீங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீபாவளி... எண்ணெய்க் குளியலின்போது இதையெல்லாம் தவறவிடாதீங்க!
தீபாவளி... எண்ணெய்க் குளியலின்போது இதையெல்லாம் தவறவிடாதீங்க!

தீபாவளி... எண்ணெய்க் குளியலின்போது இதையெல்லாம் தவறவிடாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பத்தாண்டுகளுக்கு முன் தீபாவளிக் கொண்டாட்டம் என்பது நம் பாரம்பர்யத்தைவிட்டு விலகாததாக இருந்தது. தீபாவளி வருவதற்கு சில நாள்களுக்கு முன்னரே அனைத்து வீடுகளிலும் பண்டிகைக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடும். தாய்மார் தம் கைப்பட பலகாரங்கள் செய்வார்கள். இளம் பெண்கள் கைகளில் மருதாணி பூசிக்கொள்வார்கள். வீட்டிலிருக்கும் ஆண்கள், கடை கடையாக ஏறி, இறங்கி குடும்பத்தாருக்குத் தேவையான புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி வருவார்கள். தீபாவளி நாளன்று அதிகாலையில் கண் விழித்ததும் முதலில் உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். இன்றைக்கு இவை எல்லாமே மெள்ள மெள்ள வழக்கொழிந்துவருகின்றன. சிலர் மட்டுமே சம்பிரதாயத்துக்காக  அவற்றைப் பின்பற்றிவருகிறார்கள். தீபாவளிக் கொண்டாட்டத்தில் முக்கியமான ஓர் அங்கம் எண்ணெய்க் குளியல். இது கட்டாயம் எல்லோரும் பின்பற்றும் ஒரு வழிமுறையாக இருந்து வந்திருக்கிறது. இது பற்றி விரிவாகப் பேசுகிறார் சித்த மருத்துவர் அர்ஜுனன்...

``தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது `கங்கா ஸ்நானம்' என்று கூறப்படுகிறது. கங்கை நதியில் குளிப்பதற்கு இணையானதாக தீபாவளி எண்ணெய்க் குளியல் கருதப்படுகிறது. அதிகாலை வேளை, நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் என்பதாலும், அஞ்ஞானம் (இருள்) அகன்று மெய்ஞானம் (ஒளி) பிறப்பதை உணர்த்தும் வகையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் நேரம் என்பதாலும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. 
`பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்' - நோயணுகா விதிகள் பற்றி தேரையர் எழுதிய புத்தகத்தில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது. இதன்பொருள், `நாட்டு மாட்டின் பால் உணவை உண்போம்; நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிப்போம்’ என்பதே.


நம் பாரம்பர்யத்தில் எண்ணெய்க் குளியல் செய்தால், உடலை நோய் அணுகாமல் காத்துக்கொள்ளலாம்; அது, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதைத் தெரிந்துவைத்திருந்தார்கள். அதன் அடிப்படையில்தான் வாரத்துக்கு ஒருநாள் எண்ணெய்க் குளியல் செய்து ஆரோக்கியத்தை காத்துவந்தார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்குத் தீர்வாக அமையும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பொதுவாக, எண்ணெய்க் குளியலுக்கு ஏற்றது நல்லெண்ணெய். அது இல்லாதபட்சத்தில்  தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்தவையாக சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், உடலில் உள்ள சூட்டைத் தணித்து குளிர்ச்சியடையச் செய்யும். எவ்வளவு சூடான உடல்வாகைக்கொண்டவராக இருந்தாலும், உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்துக்குளிப்பது நிச்சயம் பலன் தரும். முதலில் எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி, உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். அதன்பிறகு உடலின் ஒவ்வொரு பாகத்திலும் மெதுவாகத் தேய்க்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து, சீயக்காய் போட்டு நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

எண்ணெய்க் குளியலின்போது, நல்லெண்ணெயில் சிறிது மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு, சின்ன வெங்காயம், உடைக்காத காய்ந்த மிளகாய் ஒன்று போன்றவற்றைப் போட்டு புகையாமல் காய்ச்சி உடலெங்கும் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு கடலை மாவு, பச்சைக் கற்பூரம், இரண்டு எலுமிச்சைப் பழச்சாறு ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்த கலவையை உடல் முழுக்கத் தேய்த்து, கால் மணி நேரம் உலரவிட்டு இதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். இதையடுத்து பால் சாம்பிராணி, உலரவைத்த துளசி இலை, நிலவேம்புக் குடிநீருக்குப் பயன்படுத்தும் பொடி போன்றவற்றைத் தணலில் போட்டு புகை பிடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது. 
 

எண்ணெய்க் குளியல் செய்வதால் முடி கொட்டாது; முடி நன்றாக வளர உதவும்; இளநரை வராது. உடல் சூடு தணிந்து, புத்துணர்ச்சி கிடைக்கும்; நரம்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும். சளி, தலைவலித் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியமான தூக்கம் வர வழிவகுக்கும். இவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம்.


சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய்ச் சத்து அவசியம். இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய்ச் சுரப்பும் இவை இரண்டிலும் இருந்தாலும், அவற்றை தக்கவைத்துக்கொள்ள எண்ணெய் தடவுவது மற்றும் மசாஜ் செய்து குளிக்கவேண்டியது அவசியம். உடல் முழுக்க எண்ணெய் தடவி, மசாஜ் செய்தால் உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படும்; உடல் பொலிவு அதிகரிக்கும். பாதங்களில் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் பார்வைத்திறன் அதிகரிக்கும்; கண் கோளாறுகள் நீங்கும். 


குழந்தை பிறப்புக்குப் பிறகு வரக்கூடிய தழும்புகள் மறைய ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பெண்கள் ஆமணக்கு எண்ணெயைத் தேய்த்துக் குளிப்பது நல்லது. எண்ணெய் தேய்க்கும்போது கட்டைவிரல்களில் எண்ணெய் வைப்பதன் மூலம் கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் வலிகள் நீங்கும். மனஅழுத்தம் குறைந்து மனதில் அமைதி பிறக்கும். 
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்குச் சுத்தமான தேங்காய் எண்ணெயை வாரத்துக்கு ஒருநாளாவது உடல் முழுக்கத் தடவிவிட்டு, வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுவது நல்லது. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சனிக்கிழமைகளில் உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் ஊறவிட்டுக் குளிப்பாட்ட வேண்டும்.
எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்தால், அது சருமத்தில் உள்ள அடுக்குகளுக்குள் சென்று பல்வேறு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். வியர்வையால் சருமத்தில் ஏற்பட்ட அழுக்குகளையும், மிகவும் நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடும்.  வியர்வை தடையில்லாமல் வெளியேறுவதால், உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி கிடைக்கும். வேனல் கட்டி, கொப்பளங்கள், வியர்க்குரு போன்றவை ஏற்படாமலிருக்க எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது’’ என்கிறார் சித்த மருத்துவர் அர்ஜுனன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு