Published:Updated:

தீபாவளி அன்று மட்டுமல்ல... எல்லா நாள்களிலும் நலம் தரும் தீபாவளி லேகியம்! #Deepavali

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீபாவளி அன்று மட்டுமல்ல... எல்லா நாள்களிலும் நலம் தரும் தீபாவளி லேகியம்! #Deepavali
தீபாவளி அன்று மட்டுமல்ல... எல்லா நாள்களிலும் நலம் தரும் தீபாவளி லேகியம்! #Deepavali

தீபாவளி அன்று மட்டுமல்ல... எல்லா நாள்களிலும் நலம் தரும் தீபாவளி லேகியம்! #Deepavali

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொண்டாட்டத்துக்கானது தீபாவளி. அந்தக் கொண்டாட்டம் சில உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கக்கூடியது. அதிகாலையிலேயே எழுந்து, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து, பலகாரங்களைச் சாப்பிடுவதால் சிலருக்குத் தொண்டை கட்டிக்கொள்ளும். அதிக அளவில் எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடுவதால் சிலருக்குச் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்குப் பட்டாசுப் புகையால் அலர்ஜி ஏற்பட்டு சளி பிடித்துக்கொள்ளும். இதுபோன்ற கோளாறுகளுக்கெல்லாம் அருமருந்து ஒன்று இருக்கிறது... அது, தீபாவளி லேகியம். இது குறித்து விளக்குகிறார் இயற்கை மருத்துவர் ஜீவா சேகர். 

``தீபாவளி லேகியம் சாப்பிட்டால், பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்ததுமே தீபாவளி லேகியத்தில் ஓர் உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம். இது தீபாவளியின்போது உடல் கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. பலகாரங்கள் சாப்பிட்ட பிறகு மதிய வேளையில்கூட இன்னொரு லேகிய உருண்டையை வாயில் போட்டுக்கொள்ளலாம்.

தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய்ப் பலகாரங்களும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தீபாவளி லேகியத்தைச் சாப்பிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறலாம். தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தைச் சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது. 

தீபாவளி லேகியம் செய்ய முடியாதவர்கள் வெறும் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துப் பொடியாக்கி, அதில் தேன் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து ஒருவருக்கு ஒரு உருண்டை என்ற கணக்கில் சாப்பிட்டால், தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். காலையில் இஞ்சிச்சாறு எடுத்து வெறுமனேயோ தேன் கலந்தோ குடிக்கலாம். மாலை வேளைகளில் சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் சேர்ந்த கலவையில் தயாரிக்கப்பட்ட சுக்கு காபியைப் பனைவெல்லம் சேர்த்து அருந்தலாம். காலையில் இஞ்சிச்சாறு, மாலையில் சுக்கு காபி என எப்போதுமே அருந்தி வந்தால் செரிமானக் கோளாறு உள்ளிட்ட வயிறு தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
இவை தவிர, புதினாத் துவையல், புதினா ஜூஸை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். ஓமத்தை வறுத்துப் பொடி செய்து, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ஓம வாட்டர் குடிக்கலாம். சீரகம், பெருஞ்சீரகம், வெந்நீர் மற்றும் வெற்றிலை போடுவதன் மூலமும் செரிமானக் கோளாறுகளிலிருந்து காத்துக்கொள்ளலாம்’’ என்கிறார் ஜீவா சேகர்.


இப்போதெல்லாம், தீபாவளி லேகியம் கடைகளிலேயே கிடைக்கிறது என்றாலும், இதை நம் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். தீபாவளி லேகியம் செய்யத் தேவையான பொருள்கள் என்னென்ன, எப்படிச் செய்வது என்பது குறித்து சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால் விளக்குகிறார்... 

``மிளகு இரண்டு டீஸ்பூன், சீரகம் இரண்டரை டீஸ்பூன், தனியா இரண்டரை டீஸ்பூன், ஓமம் 20 கிராம், கண்டதிப்பிலி 10 குச்சிகள், சுக்கு ஒரு துண்டு, ஏலக்காய் இரண்டு, வெல்லம் 100 கிராம், நெய் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். இதில் வெல்லம், நெய் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் லேசாக வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இது முழுமையாகப் பொடியாகாவிட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட்டு மீண்டும் நைசாக அரைக்கவும்.

அரைத்த பொருள்கள் அனைத்தையும் ஓர் அடிகனமான வாணலியில் கொட்டி கேஸ் ஸ்டவ்வை `சிம்'மில்வைத்துக் கிளறவும். இடையே வெல்லம், நெய் என ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து மீண்டும் கிளறினால் லேகியம் தயார். இது ஒருவேளைக்கு நான்கைந்து பேர் சாப்பிடப் போதுமானதாக இருக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு