Published:Updated:

அந்தப்புரம் - 9

அந்தப்புரம் - 9

டி.நாராயண ரெட்டி
பாலியல் மருத்துவர்

ஸ்வினின் நண்பன் தண்டபாணி. அவன் பைக் மெக்கானிக். அஸ்வினின் பைக்கை ரிப்பேருக்கு விடும்போது ஏற்பட்ட பழக்கம்.

அந்தப்புரம் - 9

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவனைச் சுற்றி சமூக வட்டம் ஒன்று உண்டு. எப்போதும் எதையும் ஆபாசமாகப் பார்க்கும் உலகம் அது. ‘என்னடா வீட்ல பஜனையா?’ என்பது அவர்களுக்குப் போதையூட்டும் காம வாக்கியம். என்னடா இது நீளமா இருக்கு? என்ன இது ஓட்டையா இருக்கு என எதைச் சொன்னாலும் அவர்களுக்கு அது காமம் சம்பந்தமானதுதான். குரூப்பாக சேர்ந்தால் சுலபமாகக் கிடைக்கும் சாணிக்காகித செக்ஸ் புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.

அந்தப்புரம் - 9

உலகத்தில் யாரும் ஆண்கள் இல்லை என்பது அவன் ஏற்றுக்கொண்ட தத்துவம். பெண்கள் எல்லோரும் சீதைகளாக இருந்திருந்தால் ஆண்கள் ராமன்களாகத்தானே இருந்திருக்க முடியும்.

இது அவனுடைய கோடி ரூபாய் கேள்வி.

அவனுக்குத் திருமணமான மறுநாள்...

அவனுடைய சந்தேகம் உண்மையாகிவிட்டது என்று ஓடி வந்தான். அஸ்வினிடம் முறையிட்டான்.

‘’மச்சி எம் பொண்டாட்டி சுத்தமானவ இல்லடா’’

‘’ஏண்டா அப்படிச் சொல்றே?’’ அஸ்வின் பதறினான்.

தண்டபாணி விவரித்தான். ‘’அவளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குடா. எதுக்கும் கூச்சப்படவே இல்லை. சாதாரணமா நடந்துக்கிட்டா. அவளுக்கு செக்ஸைப் பத்தி முன்னாடியே தெரிஞ்சுருக்குடா. இல்லாட்டி இவ்வளவு ஈஸியா என்னோட இணங்கியிருக்க மாட்டா’’

அஸ்வினுக்கு அவன் சொல்வதில் உண்மை இருக்கும் என்று தோன்றினாலும் ‘’சேச்சே.. அப்படிலாம் சந்தேகப்படாதடா’’ என்று தேற்ற நினைத்தான்.

‘’இல்லடா... கன்னிப் பொண்ணா இருந்தா முதல் முறை உறவுகொள்ளும்போது கன்னிச்சவ்வு கிழிந்து ரத்தம் வரும்னு சொல்வாங்க இல்ல, நான் பெட்ஷீட்ல பார்த்தேன். ரத்தம் எதுவும் இல்லடா’’

அதற்கு மேல் அஸ்வினுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தனக்கு இப்படி ஒரு பொண்டாட்டி வாய்த்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் அப்போதைக்கு வேண்டிக்கொள்ள வேண்டியிருந்தது...

ஏன்? எதற்கு? எப்படி?

முதலில் கன்னிச் சவ்வு எனப்படும் ஹைமென் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டால் இந்த சந்தேகங்கள் வராது. நம் நண்பர் தண்டபாணிக்கு கண்ட கண்ட புத்தகங்களைப் படித்து ஒரு மாதிரி மைண்ட் செட் ஏற்பட்டு விட்டது. கன்னிச் சவ்வு என்பது யோனியை முழுசாக ஒரு ஸ்கிரீன் மாதிரி மூடியிருக்கும் என நினைக்கிறார். அப்படி அல்ல. அது யோனியின் உட்புற வாய்ப் பகுதியில் வட்டமான சிறிய ஓட்டையுடன் இருக்கும். அந்தச் சவ்வு மெல்லியதானது. மாதவிடாய் ரத்தப் போக்கு இந்த ஓட்டையின் வழியாகத்தான் நடக்கும்.

பெண் முதன் முதலாக உடலுறவில் ஈடுபடும்போது, விறைப்பான ஆணுறுப்பு உள்ளே செலுத்துப்படுவதால் இந்தக் கன்னிச் சவ்வு விரிவடைகிறது, அல்லது கிழிகிறது. இதனால் சில துளி ரத்தம் வெளியேறும். ஆனால் கண்டிப்பாக உடலுறவின் போதுதான் இது நிகழ வேண்டும் என்பது இல்லை. அந்த மெல்லிய சவ்வு விளையாடும்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ, தாண்டிக் குதிக்கும்போதோ, ஏதேனும் காயம் ஏற்பட்டோ கிழிபடலாம்.

அதிர்வுக் கருவிகள், மெழுகுவத்தி போன்ற பொருட்களைவைத்து சுய இன்பத்தில் ஈடுபடும்போது கன்னிச் சவ்வு பாதிக்கப்படலாம்.

நம்முடைய பாரம்பர்ய மதிப்பீடுகள், பெண்ணின் கன்னித் தன்மையை, பெண் புகுந்த விட்டுக்குக் கொண்டு செல்லும் பொக்கிஷம் என வலியுறுத்துகின்றன. ஆனால், அதற்காக அதைக் கன்னிச் சவ்வு கிழிதலோடு தொடர்புபடுத்தி சந்தேகிப்பது தேவையற்றது. ஆரம்பக்காலங்களில் பெண்ணின் கற்பு என்பது அவளுடைய உடலோடு சம்பந்தப்பட்டதாக இல்லை. மாறாக சமூக, உளவியல் காரணங்களுக்காக எந்த ஆணுடனோ, ஆண்களுடனோ இணைந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. பின் நாட்களில் ஏற்பட்ட திருமண உறவுகள், ஒரு பெண்ணை தனக்கு மட்டுமே உரியவள் என்ற மனப்போக்கு ஆட்படுத்தியது. ஒரு பெண் தன் கற்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அதற்கான ஏராளமான சம்பிரதாயங்களும் ஏற்பட்டன. எது எப்படியோ, கன்னிச் சவ்வு கிழிந்திருப்பதால் ஒரு பெண் கன்னித்தன்மை அற்றவள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தண்டபாணிகள் உணர்க.

டாக்டர் ஒரு டவுட்...

உடலுறவின்போது கன்னிச்சவ்வு கிழிபடும்போது எவ்வளவு ரத்தம் வெளியேறும்?

சு.ஆறுமுகம்,
பழைய வண்ணாரப் பேட்டை.

வெளியேறும் ரத்தத்தின் அளவு, பெண்ணுக்குப் பெண் வேறுபடும். சவ்வின் தடிமன், சவ்வில் இருக்கும் ரத்த நாளங்களின் எண்ணிக்கை,  சேர்க்கையின்போது ஆணுறுப்பின் மூலம் செயல்படும் மூர்க்கம்... இவற்றைப் பொறுத்தும் ரத்த இழப்பின் அளவு மாறுபடும்.

பொதுவாக, ரத்த இழப்பு சில துளிகள் இருக்கும்.

- ரகசியம் பகிர்வோம்

ஓவியம்: ஸ்யாம்