Published:Updated:

காய்கறி சூப், மிளகுக் குழம்பு, தூதுவளை ரசம்... மழைக்கால நோய்களைத் தவிர்க்க எளிய உணவுகள்!

ழைக்காலங்களில் காலையில் கண் விழிப்பதில் தொடங்கி உறங்கும் வரையிலான அன்றாட நடவடிக்கைகளில் குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் நோய்கள் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ள முடியும். குறிப்பாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுமுறையைக் கொஞ்சம் மாற்றியமைத்துக்கொள்வது நல்லது. அதை எப்படி, எப்போது உண்ணலாம் என்பது பற்றிச் சொல்கிறார் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்.

“குளிர்ச்சியான பருவநிலையில் மின்விசிறியின் கீழே படுத்துத் தூங்குவது, ஜில்லென்று ஏ.சி-யை ஆன் பண்ணி உறங்குவது, குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது போன்றவற்றைச் செய்தால் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி சளித்தொல்லை எனப் பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும். இது சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களை வெகுவாக பாதிக்கும். அதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். அப்படிப்பட்டச் சூழலில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்; சூடான பானங்களையே அருந்த வேண்டும். காபி, டீ அருந்துவதற்குப் பதில் இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். தேயிலையுடன் இஞ்சி, துளசி சேர்த்துக் கொதிக்கவைத்து இனிப்பு சேர்த்து அருந்தலாம். வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைச் சாறு,

தேன் கலந்து குடிக்கலாம்.  

சளிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் மிளகு, சீரகம், துளசி, ஓமவல்லி, தூதுவளையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது தொண்டைக்கு இதமாக இருக்கும். அதோடு மூக்கடைப்பில் தொடங்கி சளி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும். தொண்டை கட்டிக்கொண்டிருந்தால் வெந்நீருடன் உப்புச் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். துளசி இலைகளை ஊறவைத்த நீரை அருந்துவதும் நன்மை தரும்.

மழைக்காலங்களில் தலைக்குக் குளிப்பதைப் பலரும் தவிர்த்துவிடுவது உண்டு. சிலர் சைனஸ், தலைபாரம், ஒற்றைத் தலைவலி எனச் சில காரணங்களைச் சொல்லி தலைக்குக் குளிக்காமல் தவிர்ப்பதுண்டு. இப்படிச் செய்வதால் தலையில் நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தலைக்குக் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலர்த்தி சாம்பிராணி புகைகாட்டுவது அல்லது வெந்நீரில் தலைக்குக் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நொச்சி, யூகலிப்டஸ் போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குளிப்பதும் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும். இரவு உறங்கும்போது தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்குவதும் மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து விடுதலை தரும்.

மழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், காலை உணவை உண்ணும்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருப்பது நல்லது. அவற்றுக்கு இணை உணவாக தூதுவளைச் சட்னி, இஞ்சி சட்னி செய்து சாப்பிடலாம். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து தோசை சுட்டுச் சாப்பிட்டால் சளித்தொல்லை காணாமல் போகும். கல்யாண முருங்கை இலையையும் இதேபோல் தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடலாம்.

மழைக்காலங்களில் மிக எளிதாக வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அதிக அளவில் நீர்ச்சத்து வெளியேறும் என்பதால் உடல் சோர்வு, நடக்க முடியாமை ஏற்படும். சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீராலேயே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்க, சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவுவது, வெந்நீர் அருந்துவது போன்றவை வயிற்றுப்போக்கு ஏற்படாமலிருக்கச் செய்யும். மேலும், காலரா, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகள் அசுத்தமான, சுகாதாரமற்ற தண்ணீரால் வர வாய்ப்பு உள்ளது என்பதால் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துவது நல்லது.

மழை நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. எனவே, நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை அருந்தலாம். கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து குடித்தாலும் காய்ச்சல் விலகும். 10 மிளகை வெறும் வாணலியில் வறுத்து அதில் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்து வந்தாலும் காய்ச்சல் கட்டுக்குள் வரும்.


காபி, டீக்குப் பதிலாக காய்கறி சூப் அருந்தலாம். முற்றிய வெண்டைக்காயில் சூப் செய்து அருந்தினாலும் தக்காளியில் சூப் செய்து அருந்தினாலும் இருமல், ஜலதோஷம் விலகும். மழையில் நனைவதாலோ அல்லது குளிர்ந்த சூழலாலோ மூக்கை அடைத்துக்கொண்டு சளி பிடிப்பதுபோல இருக்கும். அது போன்ற சூழலில் மணத்தக்காளிக்கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும். மணத்தக்காளி குளிர்ச்சியூட்டக்கூடியது என்றாலும், அதை சூப் வடிவில் செய்து சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்றவை குணமாகும். இதேபோல்  நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் `நறுக்குமூலம்’ எனப்படும் கண்டதிப்பிலியிலும் சூப் செய்து அருந்தலாம்.

சளி, இருமல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வைட்டமின் - சி சத்து சிலருக்கு ஒத்துப்போகாது. ஆனால், வைட்டமின் - சி சத்து உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் ஜூஸ் செய்து அருந்தினால் எதுவும் செய்யாது. சிலர் தனக்கு ஒத்துக்கொள்ளாது என்று சொல்வார்கள்; அவர்கள் அவற்றைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்றபடி பால் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால் மோர் சாப்பிடலாம். அதேபோல் இனிப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் தூதுவளை ரசம் சேர்த்துக்கொள்ளலாம். சளித்தொல்லை இருந்தால் பூண்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடலாம். இவை மழை மற்றும் குளிருக்கு இதமான குழம்புகள்... அனைவரும் சாப்பிடலாம். சுண்ட வற்றலைத் தனியாக வறுத்துப் பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து முதல் மற்றும் இரண்டாவது கவளம் உணவுடன் சாப்பிட்டாலும் சளித் தொந்தரவுகள் விலகும். இதேபோல் சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் சளியை விலகச் செய்யும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமலிருக்க வேண்டும். இரவு நேரங்களில் கண்டிப்பாகக் கீரை சாப்பிடக் கூடாது.

மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் சாப்பிடலாம். என்றாலும் அவை செரிமானம் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும். மாலை வேளைகளில் சுக்கு காபி அருந்துவது நல்லது. சுக்கு காபி என்றதும் சுக்குப் பொடியை பாலுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து குடிப்பதல்ல. மிளகு அதைவிட இரண்டு மடங்கு சுக்கு, சுக்கைப்போல் இரண்டு மடங்கு அதிகமாகக் கொத்தமல்லி (தனியா), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடித்து தண்ணீரில் சேர்த்துக்கொதிக்கவைத்து பனைவெல்லம் சேர்த்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். இந்தக் கலவையைக் கொதிக்க வைக்கும்போது துளசி, தூதுவளை, ஓமவல்லி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாவுக்கு ருசியாக இருக்கிறது என்பதற்காக மாலை நேரச் சிற்றுண்டியாக வடை, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. இரவு உணவும் ஆவியில் வேகவைத்த உணவுகளாகவோ, அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளாகவோ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நாம் உண்ணும் உணவுகளில் மிளகுத்தூளைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. 

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் பூண்டுப்பால் அருந்தலாம். அதாவது, 10, 12 பூண்டுப்பற்களைத் தோலுரித்து பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். முக்கால்வாசி வேக்காட்டின்போது மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி நன்றாகக் கடைந்தால் அது பூண்டுப்பால். இதைச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, நெஞ்சுச்சளியால் ஏற்படும் மூச்சுத்திணறல், இருமல், தலைபாரம் போன்றவை நீங்கி இரவில் நிம்மதியான தூக்கம் வரும். மழைக்காலங்களில் பலருக்குப் பழம் சாப்பிடப் பிடிக்காது. சில பழங்கள் சிலருக்குச் சேராது. ஆனால், எல்லாச் சூழல்களிலும் சாப்பிடக்கூடிய பழம் வாழைப்பழம். இதைச் சாப்பிடுவதால் எந்தவிதமான பிரச்னைகளும் வராது. 

மழைக்காலங்களில் கொசு, பூரான், வண்டு மற்றும் சிறுபூச்சிகளின் தொல்லைகள் அதிகம் இருக்கும். நொச்சி, வேம்பு போன்ற இலைகளை வீட்டுக்கு வெளியே தீயிட்டு கொளுத்தி புகைமூட்டம் போட்டால், கொசுக்களின் தொல்லை இருக்காது. வீட்டின் உள்ளே கற்பூரம் கொளுத்துவது, படுக்கையைச் சுற்றி பூண்டுப் பற்களை நசுக்கிவைப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்றவை பூச்சிகளின் தொந்தரவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தலையணையின் அடியில் வெள்ளைப்பூண்டை உரித்து வைத்து தூங்கினால் நிம்மதியான உறக்கம் வரும். அதேபோல் இரவு உணவு முதல் கவளம் எடுக்கும்போது உப்பு சேர்த்து வேகவைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும். பகல் வேளைகளில் சப்போட்டா பழங்களைச் சாப்பிட்டாலும் இரவில் நிம்மதியான தூக்கம் வரும். மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக அருந்துவதில்லை. இதனால் மலச்சிக்கல் வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும். மலச்சிக்கல் வந்தாலும் அவ்வப்போது காய்ந்த திராட்சைப்பழங்கள், கொய்யாப்பழம், பப்பாளி போன்றவற்றைச் சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.''