Published:Updated:

அந்தப்புரம் - 11

அந்தப்புரம் - 11

அந்தப்புரம் - 11

அந்தப்புரம் - 11

Published:Updated:

டி.நாராயணரெட்டி
பாலியல் மருத்துவர்

அந்தப்புரம் - 11

சில வாரங்களாகவே பவானி சோர்வாகத்தான் இருக்கிறாள். அடிக்கடி காய்ச்சல் என்று விடுப்பு எடுக்கிறாள். அவள் போக்கே சரி இல்லை என்றுதான் எல்லோரும் அலட்சியமாக இருந்தனர். “ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறாய்” என்று அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த மனித வள மேம்பாட்டு அலுவலர், பவானியை அழைத்து விசாரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தயங்கியபடியே மெதுவாக விஷயத்தைச் சொன்னாள் பவானி. “என் இடதுபுற மார்பகத்தில் வலி எடுக்கிறது. அழுத்திப்பார்த்தால், உள்ளே கட்டி போல தென்படுகிறது” என்றாள்.

அந்தப்புரம் - 11

மனிதவள மேம்பாட்டு அலுவலர், உடனடியாக மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து, அப்பாயின்மென்ட் வாங்கி, இன்றே மார்பகத்தைப் பரிசோதிக்குமாறு சொல்லி அனுப்பினார்.

மார்பகத்தைப் பரிசோதிப்பதா? அந்த வலியிலும் பவானிக்குக் கூச்சமாகத்தான் இருந்தது.

ஆனால், பரிசோதனை முடிவு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. பவானிக்கு புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக, முதல்கட்ட பரிசோதனையில் சொல்லப்பட்டது.

‘மார்பகப் புற்றுநோய் எங்கோ யாருக்கோதான் வரும். நமக்கெல்லாம் அது வராது’ என்று பலரும் நினைப்பதுபோலத்தான் பவானி அடுத்தகட்ட சோதனைக்குப் போனாள். ஆனால், பவானிக்கு மார்பகப் புற்றுநோய் உறுதியாகிவிட்டதாகச் சொன்னார்கள். அலுவலகமே சோகத்தில் ஆழ்ந்துபோனது. பெண்கள் அனுதாபமும், அச்சமும் அடைந்தனர். கும்பல் கும்பலாகக் கூடிப் பேசினர். மார்பகத்தில் புற்றுநோய் என்பதைச் சிலர் அன்றுதான் முதன் முதலாகக் கேள்விப்பட்டனர். அலுவலகப் பெண்கள் அனைவருக்குமே, ‘மார்பகப் புற்றுநோய் உயிருக்கே உலைவைத்துவிடுமா, நமக்கும் இருக்குமா’ என்ற  எண்ணம்  உண்டானது. ‘நாமும் பரிசோதனை செய்துகொள்ளலாமா’ என்பது போன்ற சந்தேகப் பரிமாறலும் பகிரப்பட்டது.

ஏன்? எதற்கு? எப்படி?

ஒருவர் ஒரு நோயைப் பற்றிச் சொல்லும்போது, அது தனக்கும் ஏற்பட்டுவிடுமோ, தனக்கும் இருக்குமோ என்று அஞ்சுவது மனித இயல்பு.

மார்பகப் புற்றுநோயை அறிய, எளிய முறை உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் மாதம் ஒருமுறையேனும் மார்பகத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மார்பகத்தில் ஏற்படும் வித்தியாசங்களை அறிந்து, மருத்துவரின் உதவியை நாட வேண்டுமா என்பதை, அப்போதுதான் தெரிந்துகொள்ள முடியும். மார்பகம் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டால்தான் உரிய நேரத்தில் மருத்துவம் செய்யமுடியும்.

மருத்துவர் உதவியை நாடுவதற்கு முன் சுயமாகவே பரிசோதித்துக்கொள்ளலாம். 

மேலாடையை அகற்றிவிட்டு கண்ணாடி முன்பு நிற்கவும். கைகள் இரண்டையும் கீழே தொங்கவிட்ட படி, மார்பகத்தின் வளைவுகளில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்பதைக் கவனிக்கவும். ஏதாவது மடிப்புகள், சுருக்கங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு, காம்புப் பகுதியை சோதியுங்கள். தேவைப்பட்டால் அதிலிருந்து ஏதாவது ரத்தமோ சீழோ வெளிவருகிறதா என்று அழுத்திப்பாருங்கள்.

அந்தப்புரம் - 11

அடுத்த கட்ட சோதனை, ஒவ்வொரு மார்பகத்தையும் ஐந்து பகுதிகளாக சோதிக்க வேண்டும். ஒவ்வொரு மார்பகத்தையும் படத்தில் உள்ளபடி, நான்கு கால் பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள்.  ஐந்தாவது பகுதி அக்குள்.

வலது பக்க தோள்பட்டைக்குக் கீழே ஒரு டவலை மடித்துவைத்து, படுக்கையில் வசதியாகப் படுத்துக்கொள்ளுங்கள். வலது கையைத் தலைக்குக் கீழே மடித்து வைத்துக்
கொள்ளுங்கள். மார்பகத்தின் மேல்பக்கத்தின் இரண்டு கால் பகுதிகளை இடது கையின் விரல்களால் மிருதுவாக தேய்த்துக்கொடுங்கள். அதேபோல், மார்பகத்தின் கீழ் இரண்டு கால்பகுதிகளையும் தேய்த்து உணருங்கள். அடுத்து அக்குள் பகுதியில் மிருதுவாகத் தேய்த்துப் பாருங்கள்.

இதே மாதிரி, இடது தோள்பட்டைக்குக் கீழே டவலை மாற்றிக்கொண்டு வலது கையின் விரல்களால் இடது மார்பகங்களின் மேல் இரண்டு கால் பகுதிகள்... கீழ் இரண்டு கால் பகுதிகளை ஆராயுங்கள்.

இப்படிச் செய்துபார்க்கும்போது, கட்டி போன்று ஏதேனும் தென்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். கட்டி இருப்பது போன்று ஏதேனும் தெரிந்தால், உடனே அது கேன்சர் என்று பயப்பட வேண்டியது இல்லை. சமயங்களில் அது வேர்க்குரு கட்டியாகவும் இருக்கலாம். சந்தேகப்படும்படியான, வழக்கத்துக்கு மாறான ஏதேனும் வீக்கங்கள் இருந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெற்று மருத்துவம் பார்க்கவேண்டியது அவசியம். 

டாக்டர்... ஒரு டவுட்

“என்னுடைய மார்பகத்தின் ஓர் இடத்தில் கெட்டியாக உள்ளது. அது கேன்சராக இருக்குமா என்று கவலையாக இருக்கிறது. அது கேன்சரா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?”

வாசகி, விருதுநகர்.

“பயப்பட வேண்டாம்.  75 முதல் 80 சதவிகிதம் மார்பகக் கட்டிகள் கேன்சராக இருப்பது இல்லை. டாக்டரிடம் ஒருமுறை விளக்கம் பெறுவது நல்லது.”

“எனக்கு 13 வயது. மார்பகம் இன்னும் முழுமையாக வளராமல் இருக்கிறது. என்னுடன் படிக்கும் மற்ற மாணவிகளின் மார்பகங்கள் எடுப்பாக இருக்கின்றன. என் மார்பகம் மட்டும் தட்டையாக இருப்பதால் வெட்கமாக இருக்கிறது. ஆலோசனை கூறவும்.”

வாசகி, மதுரை.

“மார்பகம் நாம் விரும்புகிற நேரத்தில் வளர்ந்துவிடுவது இல்லை. ஒவ்வொரு உடலுக்குமான கால அட்டவணை இருக்கிறது. சரியான நேரத்தில், மார்பகத்துக்கான தூண்டல் உடலில் நிகழும். உங்களுக்கும் அதற்கான நேரம் வரும். எல்லா பெண்களுக்கும் இது ஒரே வயதில் நிகழ வேண்டும் என்பது இல்லை. எனவே, இதை எண்ணி வெட்கப்பட வேண்டாம்.”

“சிறிய மார்பகம் இருக்கும் பெண்கள் செக்ஸில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்களா?”

வி.ஆறுமுகம், கொளத்தூர்.

“இதில் உண்மை இல்லை. செக்ஸ் நாட்டம் என்பது, எப்படி வளர்க்கப்படுகிறோம், குடும்பச் சூழல், செக்ஸ் பற்றிய அவர்களின் புரிதல் ஆகியவற்றைப் பொறுத்தது.”

- ரகசியம் பகிர்வோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism