Published:Updated:

ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா... கோயம்பேடு தொழிலாளர்களால் பதறும் கடலூர் மாவட்டம்!

கோயம்பேடு
கோயம்பேடு

கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கடலூர் மாவட்டத்துக்குத் திரும்பிய 107 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், சென்னைக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது கடலூர் மாவட்டம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தீவிரத்தால் 12 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்ட 3,023 பேரில் 1,379 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில் 30 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் அதில் பணிபுரிந்த ஊழியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பினர். அதன்படி கடந்த 1-ம் தேதி கடலூருக்குத் திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் 2-ம் தேதி 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன். கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கடலூர் திரும்பிய சுமார் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், விளைபொருள்களை விற்பனை செய்வதற்காக கடலூரிலிருந்து கோயம்பேடு சென்று திரும்பியவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு படிப்படியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கடலூருக்குத் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கடலூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 160-ஆக உயர்ந்திருக்கிறது. அதில் 129 பேர் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திரும்பியவர்கள். மீதமுள்ள 430 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முடிவுகள் வந்தால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர் அதிகாரிகள்.

அடுத்த கட்டுரைக்கு