Published:Updated:

“மூணு விஷயம் நேர்க்கோட்டுல இருந்தா ஸ்ட்ரெஸ்ஸே வராது!” - லட்சுமி ராமகிருஷ்ணன் #LetsRelieveStress

“மூணு விஷயம் நேர்க்கோட்டுல இருந்தா ஸ்ட்ரெஸ்ஸே வராது!” - லட்சுமி ராமகிருஷ்ணன் #LetsRelieveStress
“மூணு விஷயம் நேர்க்கோட்டுல இருந்தா ஸ்ட்ரெஸ்ஸே வராது!” - லட்சுமி ராமகிருஷ்ணன் #LetsRelieveStress

“மூணு விஷயம் நேர்க்கோட்டுல இருந்தா ஸ்ட்ரெஸ்ஸே வராது!” - லட்சுமி ராமகிருஷ்ணன் #LetsRelieveStress

சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் வழியாக பலரது மனச்சுமைகளைப் போக்கி, மனம் மலரச்செய்யும் லட்சுமி ராமகிருஷ்ணன், தனக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை, டென்ஷனை எப்படிப் போக்கிக்கொள்கிறார்? அவரிடம் பேசினோம். தெளிந்த நீரோடையைப்போன்ற அவரது பேச்சு, நமக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. “மனித வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம். மனம், வாக்கு, செயல் மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்துக்கொண்டால் மட்டுமே வாழ்க்கையை எளிதாக வெல்ல முடியும்” என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

“ஸ்ட்ரெஸ் நமக்கு எதனால ஏற்படுது? ஒண்ணு நம்ம வேலையால ஏற்படும். இன்னொண்ணு ஃபேமிலியாலே ஏற்படும். பிடிக்காத வேலையைச் செய்யும்போதுதான் நமக்கு மனச்சோர்வு, கவலை எல்லாம் ஏற்பட்டு, அதுவே நமக்கு ஸ்ட்ரெஸ்ஸா மாறிடுது. காலையில எந்திரிக்கும்போதே, 'ஐயோ `இன்னிக்கு ஆபீஸ் போகணுமே... அந்த சிடுசிடு மானேஜரை எப்படி சமாளிக்கப்போறோம்?’னு நெனைச்சா, ஸ்ட்ரெஸ் வீட்டிலேயே ஆரம்பிச்சுடும். 

பிடிச்ச வேலையைச் செய்யும்போது நமக்குக் களைப்பே ஏற்படாது. அதனால மகிழ்ச்சியோட செஞ்சிக்கிட்டே இருக்கலாம். `If you follow your passion, you will never work a day in your life’னு ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி இருக்குது. அதைத்தான் நான் ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கேன்.

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி மூலமா பலருக்கு உளவியல்ரீதியான ஆலோசனைகளை என்னால சொல்ல முடியுது.

`மத்தவங்களோட பிரச்னை, வாழ்க்கைச் சிக்கல் இதெல்லாத்தையும் கேட்டுக் கேட்டு உங்களுக்குப் பெரிய மன உளைச்சல் ஏற்படுமே...'னு சிலர் கேட்பாங்க. நாம என்ன நினைக்கிறோமோ, அதையே பேசணும்; என்ன பேசுறோமோ அதையே செய்யணும். மனம், வாக்கு, செயல் இந்த மூன்றையும் ஒரே நேர்க்கோட்டுவெச்சிருந்தோம்னா நமக்கு எந்த டென்ஷனும், ஸ்ட்ரெஸ்ஸும் ஏற்படாது. 

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி 1,200 எபிசோடுகளைக் கடந்து போயிக்கிட்டு இருக்கு. ஒரு புரோக்ராம் இத்தனை நாள் நீடிச்சிருக்குதுன்னா அதுக்குக் காரணம் இருக்கு. நிகழ்ச்சிக்குப் போகும்போது மிக கவனத்தோடயும் பொறுப்புணர்வோடும் போவேன். அந்த நிகழ்ச்சியைத் தவம் மாதிரி நினைச்சு முழு  கான்சன்ட்ரேஷனோட செய்வேன். 

உறவுகளுக்கு இடையே ஏன் சிக்கல்கள் வருது? வாழ்க்கைங்கிறது போதுமான விழிப்புஉணர்வும், கனிவான புரிந்துகொள்ளலும் இல்லாததாலதான் சிக்கலாகுது. கூடவே இருக்கிற உறவுக்காரங்களுக்கும் நண்பர்களுக்கும்கூட அந்தப் புரிதல் இல்லை. அதனாலயே அவங்களுக்கு கைடுலைன் கொடுக்க முடியறதில்லை. 

'பணம் இருந்தா கவலை இருக்காது'னு நினைக்கிறோம். ஒருமுறை ஒருத்தர் பிரச்னைனு வந்தார். மஞ்சப்பையைக் கையில பிடிச்சுக்கிட்டு வெறுங்காலோடதான் வந்தார். அவரோடு பேசிட்டு, அவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தா ரொம்ப வசதியானவர்னு தெரிஞ்சுது. 20 கோடி ரூபாய்க்கு மேல அவருக்கு சொத்து இருக்கு. அவரவர் வாழுற உலகத்துகேத்த மாதிரி அவரவர்களுக்கு ஆயிரம் கவலைகள்... 

பள்ளிக்கூடம் போகிற சின்னக் குழந்தைங்களுக்குப் பிடிச்ச கலர்ல பேனா, பென்சில், பேப்பர் வாங்க முடியலையேன்னு கவலைன்னா, பெரியவங்களுக்கு அவங்களுக்குத் தகுந்த மாதிரி கவலைகள். அந்தக் கவலைகளை நாம எப்படி எடுத்துக்கிறோம்கிறதைப் பொறுத்துத்தான் எல்லாமே இருக்கு. 

நம்ம சமூக அமைப்புல இன்னிக்கு பல பேருக்கு அடுத்தவங்க மேல அக்கறையே இல்லாம போச்சு. சிலர், அடுத்தவங்க கஷ்டப்பட்டா மகிழ்ச்சி அடைவாங்க... அந்த மாதிரியான வேதனையான சூழ்நிலையும் இப்போ இருக்கு. அதனாலதான் இந்த நிகழ்ச்சி மூலமாகவாவது ஒரு நல்ல ஆலோசனை கிடைக்காதானு எங்கக்கிட்ட நிறையபேர் வர்றாங்க.

அவங்க சொல்ற வாழ்க்கைச் சம்பவங்களைக் கேட்கும்போது மனசு நிச்சயமா வலிக்கத்தான் செய்யும். ஆனா, அவங்க நிலைமையில நாம இருந்தா என்ன செய்வோமோ அதைத்தான் நான் ஆலோசனையா  சொல்வேன். எனக்கு ஒரு நீதி, பொதுவா ஒரு நீதினு நினைக்க மாட்டேன்.

அவங்க மூலமாகவும் நான் எவ்வளவோ விஷயங்களைக் கத்துக்கிட்டு இருக்கேன். அவங்க பிரச்னைகளையெல்லாம் நினைக்கும்போது நம்ம பிரச்னையெல்லாம் ஒண்ணுமே இல்லை.'வேலைக்காரம்மா இன்னிக்கு வரலை. டிரைவர் திடுதிப்புனு ஊருக்குப் போயிட்டாரு'ங்கிறதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. 

சில சமயம் நம்ம முதுகுக்குப் பின்னாடி சில பேர் தப்பாப் பேசுவாங்க... அது நம்ம காதுக்கே வரும். அதுக்கெல்லாம் டென்ஷனே ஆகக் கூடாது. அதையெல்லாம் இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்டுடணும். அதுல்லாம் நம்ம பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது. இவ்வளவு நேரமா வேலையைப் பத்திச் சொல்லிட்டேன். 

இனி, ஃபேமிலியில உறவுகளை எப்படிப் பராமரிக்கிறேன்... பரஸ்பரம் அன்பா இருக்கிறேன்ங்கிறது பத்திச் சொல்றேன்.
எங்களுக்கு பூர்வீகம் தஞ்சாவூர். ஆனா, எங்க முன்னோர்கள் காலத்துலயே திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாவோட அழைப்பின் பேர்ல கோயிலில் பூஜைகள் செய்வதற்காக கேரளாவுக்குப் போயிட்டோம். எங்க அம்மாவோட அப்பாவுக்கு (தாத்தா) ஏழு ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள். அவருக்கு 47 பேரக் குழந்தைகள். நான் 46-வது பேரக்குழந்தை. ஆனா, எங்க எல்லாருடைய ஜாதகமும் அவருக்கு அத்துப்படி. 

எதுக்கு இதைச் சொல்ல வர்றேன்னா, உறவுகளின் மீது அவருக்கு இருக்கும் அன்பு, அவர்களின் மீது இருக்கும் அக்கறை, மரியாதை இதிலெல்லாம் அவருக்கு எவ்வளவு பெரிய இன்வால்வ்மென்ட். இதனாலதான் அவருக்கு எல்லாரையும் பத்தித் தெரிஞ்சுவெச்சிக்க முடிஞ்சுது. இந்த அளவுக்கு நாமும் நம்ம குழந்தைகள், உறவுகள் மேலே அன்பும் அக்கறையும்வெச்சோம்னா நிச்சயமா நமக்கு உறவுகளால எந்த மனக்கசப்பும், மனச்சோர்வும் ஏற்படாது'' என்றவரிடம், ''யோகா மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் நீங்கள் எப்படி?'' என்று கேட்டோம்.

''நான் யோகா, உடற்பயிற்சினு எதுவும் செய்றதில்லை. ஆனா, ரெகுலரா எங்க கேம்பஸ்லேயே 45 நிமிஷம் வாக்கிங் போவேன். அலோபதி மருந்து, மாத்திரைகள் பக்கம் தலைவைச்சும் படுக்கறதில்லை. நான் கடைசியாக ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் எடுத்துக்கிட்டது என் இளைய மகள் பிறந்திருந்தப்போதான். பல வருஷம் ஆகிடுச்சு’’ என்று தனது ஆரோக்கியத்தின் ரகசியம் கூறுகிறார் லட்சுமி. 
சரி... என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடுகிறார் லட்சுமி?

“முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையில் விளைந்த உணவு வகைகள்தான். தயிர், மோருக்கெல்லாம் பாக்கெட் பாலை பயன்படுத்துவதில்லை. கறந்த பாலைத்தான் பயன்படுத்துறோம். சிறுதானிய உணவு வகைகளை அதிகமா சேர்த்துக்குவோம். 
காலையில் எழுந்து பல் தேய்த்ததும், முக்கால் லிட்டர் அளவுக்குத் தண்ணீர் குடிப்பேன். பிறகு அரை மணி நேரம் கழிச்சு,  நாட்டுச்சர்க்கரை போட்ட பிளாக் காபி. காலை 8 மணிக்கு மூணு இட்லி இல்லைன்னா மூணு தோசை. அதுவும் இல்லைன்னா, மல்ட்டி கிரெய்ன் பிரெட் ஸ்லைஸ் வித் வெஜிடபிள் சாலட்ஸ். காலை 11 மணிக்கு சோயா மில்க் அல்லது  ஒரு சூப். மதியம் 1 மணிக்கு குதிரைவாலி, தினை, போன்ற சிறுதானியங்களில் தயாரான உணவுகள். மாலை 4 மணிக்கு கேழ்வரகு முறுக்கு, சோள பக்கோடா போன்ற ஸ்நாக்ஸ் கொஞ்சம். இரவில் சப்பாத்தி-தால், வெஜிடபிள் சாலட் இதுதான் என்னோட ஒருநாள் சாப்பாட்டு மெனு.

வாரத்துல ஒரு நாள் கைக்குத்தல் அரிசி சாதம். சில சமயம் வெளியிடங்களுக்குப் போகும்போது சாதாரணமா என்ன கிடைக்குதோ அதைச் சாப்பிடுவேன். மற்றபடி, அரிசி, வெள்ளைச் சர்க்கரை, பால் மூன்றுக்கும் டாடா சொல்லி பல நாள்கள் ஆகிடுச்சு’’ என்று தன்னுடைய வழக்கமான புன்னகையுடன் சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். கடைசியாக அவர் சொன்னது ஆச்சர்யத் தகவல். “எனக்கும் ஸ்ட்ரெஸ் வரும். எப்போ தெரியுமா? வேலையே இல்லாம சும்மா உட்கார்ந்திருந்தேன்னா ஸ்ட்ரெஸ் வந்துடும்.''  

அடுத்த கட்டுரைக்கு