Published:Updated:

பாம்பு கடித்தால் பதற வேண்டாம்! - அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சைகள்

பாம்பு கடித்தால் பதற வேண்டாம்! - அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சைகள்

பாம்பு கடித்தால் பதற வேண்டாம்! - அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சைகள்

பாம்பு கடித்தால் பதற வேண்டாம்! - அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சைகள்

பாம்பு கடித்தால் பதற வேண்டாம்! - அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சைகள்

Published:Updated:
பாம்பு கடித்தால் பதற வேண்டாம்! - அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சைகள்

மிழ்நாட்டில் வடகிழக்குப் பருமழை ஆரம்பித்து, சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமே அடை மழை. கிராமம், நகரம்... பாகுபாடில்லாமல் பல இடங்களில் தேங்கிக்கிடக்கிறது நீர். சென்னை போன்ற பெருநகரங்களில்கூட சாலை, தெருக்கள் ஒன்றையும் விட்டுவைக்காமல் மழைநீர் குளம்போல தேங்கியும், ஆறுபோல ஓடிக்கொண்டும் இருக்கிறது. மழை பாதிப்பு இருக்கட்டும்... வீடுகளுக்குள் பூரான், தேள், பூச்சிகள் போன்றவை புகுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றில் நம்மைப் பீதிக்குள்ளாக்குபவை பாம்புகள்! குறிப்பாக, `சென்னை புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைவது அதிகமாகியிருக்கிறது’ என்கிறார்கள் வனத்துறையினர். 

ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை என்பதே இங்கே யதார்த்தம். `பாம்பு கடித்துவிட்டது’ என்றதும் பலருக்கும் திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்தான் நினைவுக்கு வரும். பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்தே விஷத்தை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள் நம் ஹீரோக்கள். வேடிக்கை பார்ப்பவர்களில் சிலர், பாம்புக்கடிக்கு

ஆளானவரைக் காப்பாற்றுவதைவிட, அதைப் பிடித்து  மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதுதான் முக்கியம் என்று பாம்பை விரட்ட ஆரம்பித்துவிடுவார்கள். பூச்சி கடித்தால்கூட பாம்பு கடித்துவிட்டதாக நினைத்து, பதறிக் கூச்சல் போடுபவர்களும் இருக்கிறார்கள். இவை மட்டுமல்ல... பாம்பு கடித்த இடத்தில் நெருப்புவைப்பது, கீறிவிடுவது... என பல அபத்தமான சிகிச்சைகளைச் செய்வதும் நடக்கும். 

சரி... பாம்பு கடித்த அடையாளத்தை எப்படிக் கண்டுபிடிப்பது, அதற்கான முதலுதவி, சிகிச்சைகள் என்னென்ன? அவசர சிகிச்சை மருத்துவர் வைரமுத்துவிடம் கேட்டோம்...

பாம்புக்கடி குறித்தப் பல தவறான நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கின்றன. பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிவது, நெருப்புவைப்பது, கத்தியால் கீறிவிடுவது இவை எல்லாமே தவறான முதலுதவிகள். பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள் போன்ற பொருள்களைப் பூசக் கூடாது. பாம்புக்கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து செல்லக் கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச் செல்ல வேண்டும்.

கடித்தது விஷப்பாம்புதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதை எப்படிக் கண்டறிவது?  பாம்பு கடித்த இடத்தில், இரண்டு பற்களின் அடையாளம் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்திருக்கும்; அந்த இடம் சற்று வீங்கி கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். இந்த அறிகுறி இருந்தால், அது விஷப்பாம்புக் கடியாகத்தான் இருக்கும். கடித்த இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பற்கள் வரிசையாகப் பதிந்து காணப்பட்டால், அந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.

முதலுதவி

முதலில் பாம்பு கடித்தவரை நடக்கவோ ஓடவோவிடக் கூடாது. அவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவிவிடும்.

கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். 

கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றைக் கட்ட வேண்டும். இறுக்கமாகக் கட்டாமல், இரண்டு விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி கொடுத்துக் கட்டலாம். 

சிலர், கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். இதுவும் தவறு. பாம்பைப் பார்த்து எந்தவிதச் சிகிச்சையும் கொடுக்கப்படுவது கிடையாது. பாம்பை அடிப்பதற்காக ஓடாமல், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு விரைவாக கூட்டிச் செல்வதே நல்லது.

சிகிச்சை

எந்தப் பாம்பு கடித்ததென்று தெரிந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதில்லை. ரத்த உறையும் நேரத்தைக் கணக்கிட்டு எந்த வகைப் பாம்பு கடித்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். எந்தப் பாம்பு கடித்தது என்பது தெரிந்தால் பொருத்தமான சிகிச்சை கொடுக்க முடியும் என்பதும் உண்மையே. பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாக மருத்துமனைகளில் `ஆன்டி-ஸ்நேக் விநோம்’ (Anti Snake Venom - ASV)  மருந்து தரப்படும்.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இந்தியாவில் உள்ள நச்சுப் பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை.  

கடித்த பாம்புகளுக்கேற்ப விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்கப்படும். விஷத்தில் இரண்டு வகை. ஒன்று, நியூரோடாக்ஸின் (Neurotoxin) என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம் உடலில் ஏறும். அரை மணி நேரத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிபட்டவரின் உயிரைக் காப்பாற்றிவிடலாம். மற்றொன்று, ஹீமோடாக்ஸின் (Hemotoxin) என்ற விஷம். இது, ரத்த செல்களைப் பாதித்து ரத்த உறைதலைத் தடுக்கும் அல்லது ரத்த சிவப்பணுக்களை அழித்துவிடும். கட்டுவிரியன் கண்ணாடிவிரியன், சாரைப்பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும்."