Published:Updated:

சர்க்கரைநோய்... தேவை அக்கறை! உலக சர்க்கரைநோய் தினப் பகிர்வு #WorldDiabetesDay

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
சர்க்கரைநோய்... தேவை அக்கறை! உலக சர்க்கரைநோய் தினப் பகிர்வு #WorldDiabetesDay
சர்க்கரைநோய்... தேவை அக்கறை! உலக சர்க்கரைநோய் தினப் பகிர்வு #WorldDiabetesDay

’நாம் சாப்பிடும் பாலீஷ் செய்யப்பட்ட சத்தில்லாத அரிசி உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால், வீட்டின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கும் நாம் வளர்க்கும் செல்ல நாய்களுக்கும் சர்க்கரைநோய் வந்துவிடுகிறது’ என்பது சில வருடங்களாக உலா வரும் செய்தி. நம்மைச் சார்ந்து வாழும் செல்லப் பிராணிகளுக்கும் சர்க்கரைநோயைப் பரிசளிக்கும் அளவுக்கு நம் உணவியலும் வாழ்வியலும் தவறான ஓடுதளத்தில் சீறிப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் நவம்பர் 14-ம் தேதியை `உலக சர்க்கரை நோய் தின’மாகக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.

மணிச்சம்பா என்கிற மணியான அரிசி!

‘அரிசி உணவைச் சாப்பிட்டாலே சர்க்கரைநோய் (மதுமேக நோய்) உண்டாகும்’ என்று அரிசியைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம்முடைய பல பாரம்பர்ய அரிசி ரகங்களுக்கு சர்க்கரைநோயைத் தடுக்கக்கூடிய தன்மை இருந்திருக்கிறது. ’நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்’ என்று அகத்தியர் குணவாகடம், மணிச்சம்பா அரிசி வகையைப் புகழ்கிறது. ஆனால், இப்போது பெருமளவில் வழக்கத்திலிருக்கும் பட்டை தீட்டப்பட்ட அரிசியை அதிகளவில் சாப்பிடும்போதுதான் ஆபத்தே. முதலில் கைக்குத்தல் அரிசியை அதிகமாகச் சாப்பிட்டோம். பின்னர் அதன் இடத்தை இயந்திரங்களில் அடிவாங்கிய அரிசி வகைகள் இடம்பிடித்தன. இப்போதோ வறுத்த அரிசி வகைகளை (Fried rice) பெருமளவில் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். விளைவு… தொற்றா நோய்க் கூட்டம் நம்மிடம்!... 

மரபியல்ரீதியாக மட்டும்தானா?

‘பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் சர்க்கரைநோய் இருந்தால் நமக்கும் வருமா?’ என்று மரபியல்ரீதியாக ’பெர்முடேஷன் காம்பினேஷன்’ (Permutation Combination) எல்லாம் இப்போதைய ஃபாஸ்ட் ஃபார்வார்டு உலகத்தில் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. குடும்பத்தினருக்கு இருக்கிறதோ இல்லையோ, முறையற்ற உணவு முறையையும் தவறான வாழ்க்கை முறையையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரைநோய் வரலாம். ஐம்பது அறுபதுகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டு என எட்டிப்பார்த்த சர்க்கரைநோய், இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல், மிகக் குறைந்த வயதிலேயே இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது. 

அறிகுறிகள்...

அதிக தாகம் (Polydipsia), அதிகமாகச் சிறுநீர்கழித்தல் (Polyuria), அதிகப்பசி (Polyphagia), விரைவில் சோர்ந்துவிடுதல் ஆகியவை சர்க்கரைநோயின் மிக முக்கிய அறிகுறிகள். இவை அனைத்தும் ஒருவருக்கே இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சர்க்கரையின் அளவு இயல்பைவிட அதிகளவில் இருப்பினும், (உதாரணம், 250mg/dl, உணவுக்குப் பின்) சிலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அதற்காக அவருக்கு சர்க்கரைநோய் இல்லை என்பதல்ல. அறிகுறிகள் இல்லை என்பதால் உணவுக் கட்டுபாடும் இல்லாமல், எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது அநேகம் பேரின் வழக்கமாக இருக்கிறது. 

அதிக தாகம், அதிகமாகச் சிறுநீர் வெளியேறுதல்!

சர்க்கரைநோயாளியின் ரத்தத்தில், சர்க்கரையின் (குளூக்கோஸ்) அளவு அதிகமாக இருக்கும்போது, ரத்தத்தை வடிகட்டும் சிறுநீரகங்கள், தன்னிடம் மிதந்துவரும் குளூக்கோஸ் மூலக்கூறுகளை இயன்ற அளவுக்கு உறிஞ்சப் பார்க்கும். ஆனால் அளவுக்கு மீறிய சர்க்கரை, சிறுநீரகத்துக்கே ஆட்டம் காட்டிவிட்டு திசுக்களிலிருந்து நீரை இழுத்துக்கொண்டு, அதிகளவில் சிறுநீரில் வெளியேறும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால், நாவறண்டு போதல், அதிக தாகம் போன்ற அறிகுறிகளும் உண்டாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும்போது, சர்க்கரையை சிறுநீரில் வெளியேற்றாமல் சிறுநீரகங்கள் உறிஞ்சி ரத்தத்தில் கலக்கச் செய்துவிடும். 

இன்சுலின் ஊக்கியின் செயல்பாடு

நாம் சாப்பிடும் உணவுகள், செரிமான செயல்பாடுகளின் இறுதியில் குளூக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ், எந்த வேலையையும் செய்யாமல் வெறுமனே சுற்றித்திரிந்தால் எந்தப் பயனும் இல்லை. அது, செல்களுக்கு ஆற்றலாகப் பயன்பட வேண்டும். உடலின் செல்களுக்குப் பயன்படும் வகையில் குளூக்கோஸை ஆற்றலாக மாற்றும் வேலையைத்தான் இன்சுலின் எனும் முக்கியமான ஹார்மோன் செய்கிறது.

கணையத்திலிருந்து சுரக்கும் இந்த இன்சுலின் ஊக்கியின் செயல்பாட்டுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால், குளுக்கோஸ் ஆற்றலாக மாற்றப்படாமல், பயனற்ற குளுக்கோஸாக ரத்தத்தில் உலவிக்கொண்டிருக்கும். ரத்தத்தில் இருக்கும் குளூக்கோஸின் அளவைவிட, இன்சுலின் ஊக்கியின் அளவு குறைவாக இருந்தாலும் சரி, இல்லை முற்றிலும் சுரக்காமல் இருந்தாலும் சரி... சர்க்கரைநோய் உறுதி. சில நேரங்களில் இன்சுலின் சுரப்பு அதிகளவில் இருக்கும். ஆனால் செயல்படாமல் இருக்கும். அப்போது ரத்தத்தில் குலூக்கோஸின் அளவும் அதிகமாக இருக்கும். இதனை Hyperinsulinemic hyperglycemia என்று அழைக்கலாம். இப்படிச் சில காரணங்களால் குளூக்கோஸ் ஆற்றலாக மாற்றப்படாததால், எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கொண்டே (Polyphagia) இருக்கும். சர்க்கரைநோயில் முதல் வகை, இரண்டாம் வகை, கர்ப்ப கால சர்க்கரைநோய் எனப் பொதுவான வகைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இன்றையச் சூழ்நிலையில் முப்பது வயதுக்கு மேல், வருடம் ஒரு முறையாவது உடலில் சர்க்கரையின் அளவைப் பரிசோதனை செய்துகொண்டு கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம். சர்க்கரைநோய்க்கான உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளும் என்னென்ன? இனிப்பின்றி பயணிப்போம்...

உணவு

அரிசியே வேண்டாம் என்பதில்லை. பாரம்பர்ய அரிசி ரகங்களைத் தட்டி எழுப்பிப் பயன்படுத்தலாம். மதிய உணவில் சோற்றின் அளவைக்காட்டிலும், காய்களின் அளவு அதிகமிருந்தால் மிகச் சிறப்பு. விரைவாக குளூக்கோஸின் அளவை அதிகரிக்கச்செய்யும் கிழங்கு வகைகள் வேண்டாம். புரதங்கள் நிறைந்த முளைகட்டிய தானியங்கள் மிகவும் பயன்தரக்கூடியவை. டீ, காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் வெள்ளைச் சர்க்கரையைச் சிறிதும் சேர்த்துவிடக் கூடாது. தேன் என்று ஏமாற்றும் வெல்லப்பாகும் கூடாது. தற்போது பிரபலமடைந்திருக்கும் சுகர்லெஸ் இனிப்புகள், சுகர்-ஃப்ரீ சர்க்கரைக் கட்டிகளையும் தவிர்த்துவிடுவது சிறந்தது.

கொய்யா, ஆப்பிள், நெல்லி, ஆரஞ்சு, அத்தி போன்றப் பழ வகைகளை சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். அவற்றை முற்றிலுமாக புறந்தள்ள வேண்டும் என்று அவசியமில்லை. சோர்வுற்றிருக்கும்போது சில பழத்துண்டுகளைச் சாப்பிடலாம். மது, புகைப்பழக்கம் இருக்கும் சர்க்கரைநோயாளிகளின் வாழ்நாள் அதிகளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சர்க்கரைநோயை வராமல் தடுப்பதில் சிறுதானியங்களின் பங்கு அளப்பரியது. குருதிச் சுற்றோட்டத்தில் சர்க்கரைச் சத்தை மெதுவாக வெளியிடும் தன்மைகொண்டவை சிறுதானியங்கள் (Low glycemic foods). ஆவாரைக் குடிநீர் சூரணம், சீந்தில் சூரணம், திரிபலா சூரணம், சிறுகுறிஞ்சான் பொடி, நாவல் கொட்டை சூரணம், மதுமேக சூரணம்... எனப் பல சித்த மருந்துகள் சர்க்கரைநோயில் பயன்படுகின்றன. 

நடைப்பயிற்சி, யோகப்பயிற்சி!

தொடர்ந்து நடைப்பயிற்சி செய்துவருவதால், ரத்தத்தில் இருக்கும் பயன்படுத்தப்படாத குளூக்கோஸ், தசைகளுக்கு உணவாக மாறும். அதே நேரத்தில் தாழ்சர்க்கரை அளவையும் (Low blood sugar level due to strenuous exercise) கவனத்தில் கொண்டு, மருத்துவர் ஆலோசனையோடு தினமும் நடக்கவேண்டிய தூரத்தைக் கணக்கிட்டுக்கொள்ளலாம். பொதுவாக தினமும் அரை மணி நேர நடைப்பயணம் போதுமானது. கலப்பையாசனம், வில்லாசனம், பவனமுக்தாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசன வகைகளை தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரைநோய் எட்டிப் பார்க்காது. இவ்வகை ஆசனங்கள் கணையத்தின் செயல்பாட்டைத் தூண்டி, இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். 

மனஅழுத்தம் உண்டாகும்போது சுரக்கும் சில ஹார்மோன்கள், சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. தொடர்ந்து மனஅழுத்தம் உண்டாகும்போது, அதிகரிக்கும் சர்க்கரையின் அளவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு உண்டாகும். பிறகு சர்க்கரைநோய் நிரந்தரமாகும். எனவே, மனதை அமைதியாக வைத்துக்கொள்வோமே! 

சர்க்கரைநோய் வந்த பிறகுதான், அதைப் பற்றி அக்கறைகொள்கிறோம். சர்க்கரைநோய் வராமல் தடுக்க மற்ற உறுப்புகளைப்போலவே கணையத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க முயற்சிக்க வேண்டும். எப்படி… தேவையான உடல் உழைப்பு மற்றும் முறையான உணவுப் பழக்கம் போதும், கணையம் ஆரோக்கியமாக செயல்படும். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நம் நாட்டை வருங்காலத்தில், சர்க்கரை நோயாளிகளே இல்லாத கனவு நாடாக உருமாற்ற, நம் உணவு மற்றும் வாழ்வியல் அக்கறைகளை முறையாக வடிவமைக்கவேண்டியது அவசியம்.