Published:Updated:

``எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிட்டா, உடம்பும் சீரியாஸாகிடும்!’’ - சிங்கமுத்துவின் மருத்துவ சிரிப்பு #LetsRelieveStress

``எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிட்டா,  உடம்பும் சீரியாஸாகிடும்!’’ - சிங்கமுத்துவின் மருத்துவ சிரிப்பு  #LetsRelieveStress
``எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிட்டா, உடம்பும் சீரியாஸாகிடும்!’’ - சிங்கமுத்துவின் மருத்துவ சிரிப்பு #LetsRelieveStress

கைச்சுவை நடிகர், ஆன்மிகப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மையுடன் செயல்பட்டுவருபவர் சிங்கமுத்து. அரசியல், சினிமா, ஆன்மிகம் என மூன்று குதிரைகளில் சவாரி செய்துகொண்டிருப்பவர். ``பரபரப்பான இந்த வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் கவலை, டென்ஷன், ஸ்ட்ரெஸ்ஸை எப்படிச் சரிசெய்துகொள்கிறீர்கள்?’’ என்று கேட்டோம்.  

மிக நிதானமாக, பதற்றமில்லாமல் பேச ஆரம்பித்தார். ``அவசரமான இந்த உலகத்துல ஒண்ணு மாத்தி ஒண்ணு தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும். அதனால மனசுல கவலையும் சோர்வும் வந்துக்கிட்டேதான் இருக்கும். படிக்கிற காலத்துல படிக்கணுமேனு கவலை... வாலிபப் பருவத்துல வேலை கிடைக்கலையேனு கவலை. வேலை கிடைச்சா நல்ல சம்பளம் கிடைக்கலையேனு கவலை. நல்ல சம்பளம் கிடைச்சா, நல்ல பொண்ணு மனைவியா அமையணும்னு கவலை. கல்யாணம் நடந்தா குழந்தை வேணும்னு கவலை. அதுவும் ஆணுல ஒண்ணு பொண்ணுல ஒண்ணு வேணும்னு கவலை. அப்புறம் அவங்க படிச்சு, வேலைக்குப்போய் கல்யாணம் ஆகி, பேரப் புள்ளைங்களைப் பார்க்கணும்னு கவலை. இப்படி கவலைக்கு ஒரு முடிவே கிடையாது. 

'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துல எம்.ஜி.ஆர் 'மனதை அதன் போக்கிலேயே விட்டுட்டா, அதற்கு மத யானை பலம் வந்திடும்’பார். அது மாதிரி நம்ம மனசைப் போற போக்குல விட்டுடக் கூடாது. அதைக் கட்டிப்போடத் தெரிஞ்சிருக்கணும். மனசைக் கட்டிப்போடணும்னா நமக்குள்ள ஆன்மிகத்தேடல் இருக்கணும். இந்த உலகம், நாம் காணும் காட்சி, நாம் வாழும் வாழ்க்கை எல்லாமே பொய், மாயைங்கிறதை உணர்ந்துட்டோம்னா நமக்கு ஏன் சார் டென்ஷன் வருது?

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், தோப்புகள், வயல்கள் ஆயிரம் பதினாயிரம்னு பொன், பொருள் எல்லாம் இருந்தாலும், போகும்போது எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டுத்தான் போகணும். சராசரியா ஒரு மனுஷன் 60 வருஷம் வாழ்கிறான்னு வெச்சுக்கிட்டோம்னா அதுல தூங்கினது, வேலை பார்த்தது எல்லாம் போக, அவன் வாழும் நேரம் வெறும் 15 வருஷம்தான் இருக்கும். அதை மகிழ்ச்சியா, சந்தோஷமா வாழ்ந்துட்டுப் போகலாமே! வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் 'என் மார்க்கம், இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்’னு  சொல்றார்.  

பூமிக்கு வர்றப்போ எதையும் கொண்டு வரலை. போகும்போதும் எதையும் நாம கொண்டு போகப் போறதில்லை. இடையில, சின்னதா ஒரு வாழ்க்கை. இதுலதான் இவ்வளவு ஆட்டம், பாட்டம், போட்டி, பொறாமை. ஒண்ணு கிடைச்சிடுச்சேனு நெனைச்சு சந்தோஷத்துல துள்ளவும் கூடாது. கிடைக்காம போயிடுச்சேனு துவண்டும் போயிடக்கூடாது. 

என்னைப் பொறுத்தவரைக்கும், நேர்மையான நடத்தை, கடுமையான உழைப்பு, இரக்கம், தர்மம் இதை முறையாகக் கடைப்பிடிச்சோம்னா எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு மனச்சோர்வு வராது. இடையில எனக்கும் சில சோதனைகள் வந்ததுண்டு. மனசை அப்படியே சிவனிடம் ஒப்படைச்சுட்டேன். 

நமது ஆன்மிகப் பெரியவர்கள், ஆயுள் முழுவதையும் செலவிட்டு சாகாவரம் பெற்ற  இறைபக்திப் பாடல்களை, யாக்கை நிலையாமையைப் பாடிச் சென்றிருக்கிறார்கள். வேறு எந்த நாட்டிலும் எந்த மக்களுக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் அது.

காலையில் எழுந்ததும் குளித்து முடிச்சுட்டு, தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற பக்தி ரசம் சொட்டும் பாடல்களை, பதிகங்களை அட்சரம் பிசகாமல் பாடுவேன். மனசு சரியில்லைன்னா எனக்குக் கை கொடுக்கிறது தேவாரம், திருவாசகம் பாடல்கள்தான். 
ஈரத்துண்டாக கனத்துக்கிடந்த மனம், பிழிந்து கொடியில் உலர்த்தியதுபோல் ஆகிவிடும். அஞ்சு வயசுலேயே பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்த பழக்கம் உண்டு’’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் சிங்கமுத்து. 

``அதேபோல சாப்பாட்டுலயும் எதையும் வேணாம்னு தள்ளுறது கிடையாது. எல்லாம் சாப்பிடுவேன். வியாழன், சனி ரெண்டு நாள்கள் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டேன். என்ன காரணம்னா, வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரிய நாள். 'குரு பார்க்கக் கோடி நன்மை'னு சொல்வாங்க. அதேமாதிரி சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாள். சனீஸ்வர பகவான், கொஞ்சம் கவனமாகக் கையாளப்பட வேண்டியவர். அதனால அன்னிக்கும் அசைவம் சாப்பிட மாட்டேன்’’ என்றவரிடம்,  ``கொஞ்சம்கூட சீரியஸே இல்லாம வாழ்க்கையை இவ்வளவு எளிமையாக எடுத்துக்கிட்டா சரியா இருக்குமா?’’ எனக் கேட்டோம். 

``எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிட்டா,  உடம்பும் சீரியாஸாகிடும்.’’ `எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே’னு தாயுமானவர் சொன்னதுதான் எனக்கு வேதம்’’ மனதில் பட்டதை, அவர் வாழ்க்கை இயல்பைத் தெளிவாகச் சொல்கிறார் சிங்கமுத்து.