Published:Updated:

அந்தப்புரம் - 14

அந்தப்புரம் - 14

அந்தப்புரம் - 14

அடுத்தவர்கள் செய்யும் தவறுகள் நம் கண்ணுக்குத் தெரிகிற அளவுக்கு, நம்முடைய தவறுகள் நமக்குத் தெரிவது இல்லை. அனிதா, வியர்வை துர்நாற்றத்துடன் இருப்பதைக் குறையாகக் கண்டான் அஸ்வின். அதனால், அவளைவிட்டு விலகிச் சென்றான் என்பதை,  கடந்த இதழில் பார்த்தோம். அதே நேரத்தில் அவனை அனிதாவும் நெருங்கத் தயங்கினாள். காரணம்..?

படுக்கைக்கு வருவதற்கு முன், ஒரு தம் இழுத்துவிட்டுத்தான் அனிதாவின் அருகே வந்தான். சிகரெட் நாற்றம் அவளுடைய  குடலைப் புரட்டும். சொல்லத் தயங்குவாள். இருவரும் இணையாததற்கு அவரவர் வாசனையே காரணமாக இருந்தன. பரவசத்தில் மூழ்கித் திளைக்க வேண்டிய புதுமணத் தம்பதி, வாசனை காரணமாக விலகியே இருந்தனர். படுக்கையில் இணக்கமான சூழ்நிலை இல்லை என்றால், அதுவே வீண் விரோதத்துக்கும் காரணமாகிவிடும். தொட்டது எல்லாம் குற்றமாகத் தெரிந்தது. சின்னச்சின்ன சண்டைகள் ஆரம்பமாகின. ‘சமையல் சரியில்லை. சட்டையைச் சரியாகத் துவைக்கவில்லை’ என்பதாக அது திசை திரும்பியது. அனிதா, வாரத்துக்கு ஒருமுறை கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போனாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அந்தப்புரம் - 14

ஏன்? எதற்கு? எப்படி?


கணவன், மனைவிக்குள் வாசனையே இவ்வளவு பெரிய பிரச்னையாக வெடிக்குமா?
நறுமணம், செக்ஸோடு நெருங்கிய தொடர்புடையது. நம் நாட்டில் பெண்கள் மல்லிகையைச் சூடிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதைக் கவனிக்கலாம். அது பெண்களுக்கான அலங்காரப் பொருள் மட்டும் அல்ல, ஆண்களை ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது.


ஆண்கள் தங்கள் வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பது தாம்பத்தியத்தில் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும். சிகரெட் நாற்றம் பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பது இல்லை. அஸ்வின் தன் மனைவியை நெருங்கும் சந்தர்ப்பங்களிலாவது சிகரெட் வாசனையைத் தவிர்க்கலாம்.  பிடித்தமான நறுமணப் பொருட்களைப் பயன்படுத்துவது நெருக்கத்தை அதிகரிக்கும்.


அதேபோல, ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் ஆண் உறுப்பின் உட்புறத் தோல் பகுதியில் மெழுகு போன்ற படிவு உருவாகும்.  தினமும், குளிக்கும்போது, அதை நன்கு கழுவ
வேண்டும். அப்படி கழுவவில்லை என்றால், அது துர்நாற்றத்தை உருவாக்குவதோடு, கிருமிகள் உருவாகவும் காரணமாகிவிடும்.

அந்தப்புரம் - 14


ஆண்கள், ஆணுறுப்பின் தோலைப் பின்னுக்குத் தள்ளி, அதில் படிந்திருக்கும் படிவுகளைக் குளிக்கும்போது தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.


ஆண், பெண் இருபாலரும் தங்கள் உள்ளாடைகளைத் தினமும் மாற்றிவிட வேண்டும். உள்ளாடைகள் பருத்தியில் ஆனதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் வியர்வையை உறிஞ்சும். உள்ளாடைகளைத் தினமும் துவைத்து, சூரிய ஒளி படும்விதமாகக் காயவைக்க வேண்டும்.

காலைக் கடன் முடித்து, மலப்புழையைக் கழுவும்போது, முன்புறம் இருந்து பின்புறம் நோக்கிக் கழுவ வேண்டும். இதனால் மலப்புழையில் இருக்கும் கிருமிகள் இனப்பெருக்க உறுப்புக்குள் செல்லாமல் தவிர்க்கப்படும். குறிப்பாக இது பெண்களுக்கு மிகுந்த பலனளிக்கும். இதனால், பெண்களுக்குச் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறையும்.

- ரகசியம் பகிர்வோம்

டாக்டர் ஒரு டவுட் !

“என் ஆண் உறுப்பு துர்நாற்றம் வீசுகிறது. இதை எப்படித் தவிப்பது?”

ஒரு வாசகர், தண்டையார்பேட்டை.

“ஆண் உறுப்பில் வாசம் ஏற்படுவது பொதுவானதுதான். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஏற்கெனவே சொன்னது போல, அந்தப் படிவம் ஆணுறுப்பின் தோலுக்கு அடியில் படிவதுதான் காரணம். இதை ‘ஸ்மெக்மா’ என்பர்.
அதேபோல், சிறுநீர் கழிந்தபிறகு, தங்கும் சில சொட்டுகள் நம் உள் ஆடையில் படியும். தினமும் உள்ளாடையை சோப்பினால் சுத்தம் செய்வதனாலும் ஆணுறுப்பின் தோல் உட்பகுதியை சோப்பினால் சுத்தம் செய்வதனாலும் கெட்ட வாடையைத் தவிர்க்கலாம். தொடை இடுக்குகளில் கசகசப்பினால் உருவாகும் அழுக்குகளையும் குளிக்கும்போது நன்கு சுத்தப்படுத்துவது அவசியம்.

 குளித்த ஈரம் நன்றாகக் காய்ந்த பிறகே உள்ளாடைகளை அணிய வேண்டும். அதே போல உள்ளாடைகள் நன்கு காய்ந்தபிறகுதான் அணிய வேண்டும். ஈரமான உள்ளாடைகள் பூஞ்சை (ஃபங்கஸ்) தோன்றுவதற்குக் காரணமாகிவிடும். சிலருக்கு பூஞ்சை காரணமாக படை, தேமல் ஏற்பட்டு, புண்கள் ஏற்படுவதாலும் கெட்ட நாற்றம் ஏற்படும்.

முறையற்ற உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு கொனோரியா உள்ளிட்ட பால்வினை நோய்கள் வர வாய்ப்பு உண்டு. இவை காரணமாக துர்நாற்றம் வரலாம். நல்ல மருத்துவரை அணுகி உடனடியாக அதற்கான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும்.”


ஓவியம்: ஸ்யாம்
பாலியல் தொடர்பான வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.