Published:Updated:

15 நாள் டெங்கு சிகிச்சைக்கு 16 லட்சம் கட்டணமா?! - ‘முறைப்படுத்தவேண்டிய நேரம் இது!’ அறிவுறுத்தும் மருத்துவர்கள்

15 நாள் டெங்கு சிகிச்சைக்கு 16 லட்சம் கட்டணமா?! - ‘முறைப்படுத்தவேண்டிய நேரம் இது!’ அறிவுறுத்தும் மருத்துவர்கள்
15 நாள் டெங்கு சிகிச்சைக்கு 16 லட்சம் கட்டணமா?! - ‘முறைப்படுத்தவேண்டிய நேரம் இது!’ அறிவுறுத்தும் மருத்துவர்கள்

நான் (Fight against Healthcare Corruption) இந்த முகநூல் பக்கத்தை ஆரம்பித்ததற்குக் காரணம், இந்தியாவில் நடைபெறும் மருத்துவ ஊழல்களையும், வணிகமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளையும் எதிர்த்துச் சண்டையிட வேண்டும் என்பதற்காகத்தான்" - டெங்குக் காய்ச்சலுக்குத் தன் ஏழு வயது மகளைப் பறிகொடுத்த ஒரு தந்தையின் பதிவு இது.

குஜராத் மாநிலம் துவார்கா என்னும் இடத்தில் வசித்துவருபவர் ஜெயந்த் சிங். இவருடைய ஏழு வயது மகள் அதியாவுக்கு டெங்குக் காய்ச்சல். துவார்காவிலுள்ள ராக்லேண்ட் மருத்துவமனைக்கு மகளைக் கொண்டுபோயிருக்கிறார். அங்கே அதியாவை அனுமதித்து, சிகிச்சையளித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு கட்டத்தில், மருத்துவர்கள் டெல்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனைக்கு அதியாவைக் கொண்டுபோகச் (Refer) சொல்லியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 31-ம் தேதி, அதியாவை குர்கானில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் ஜெயந்த் சிங்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயந்த் சிங், அதியாவை மீண்டும் ராக்லேண்ட் மருத்துவமனைக்கே கொண்டு சென்றிருக்கிறார். அங்கே இ.சி.ஜி சோதனை செய்து பார்த்தபோது அதியா இறந்துவிட்டார் என்பது தெரியவந்திருக்கிறது. நொறுங்கிப்போனார் ஜெயந்த் சிங். இந்த இரண்டு மருத்துவமனைகளின் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குத் தொடர உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்...

ராக்லேண்ட் மருத்துவமனையில் இருந்து என் மகளை குர்கானுக்குக் கூட்டிச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவில்லை.

ஆரம்பத்தில் மூன்று நாள்கள் வென்டிலேட்டரில் வைத்திருந்தார்கள். ஆனால், அது பற்றிய மருத்துவ விவரங்கள் எதுவும் எங்களுக்குத் தரப்படவில்லை.

ஏழு நாள்களுக்குப் பிறகு அவளின் மூளை மற்றும் உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்காக டயாலிசீஸ் செய்யப்பட்டது. மூன்று நாள்கள் கழித்து, டயாலிசீஸ் அறையில் இருந்து அதியா வெளியே கொண்டுவரப்பட்டாள். எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துபார்த்து மூளை 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தது. `பிளாஸ்மா மாற்று சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடலாம். அதற்கு 15 லட்ச ரூபாய் செலவாகும்’ என்றார்கள். பிறகு ஏன் டயாலிசீஸ் அறையிலேயே வைத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை.

அதியா, ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையிலேயே இறந்திருக்க வேண்டும். மருத்துவமனையைவிட்டு வெளியேறும்போதே அவளின் நிறம் மாறியிருந்தது. தோல் சுருங்கியிருந்தது. இறந்த குழந்தையைவைத்து சிகிச்சயளிப்பதாக நடித்திருக்கிறார்கள்.

15 நாளுக்கு 16 லட்ச ரூபாய் பணம் வசூலித்துவிட்டார்கள் .

இதுபோன்ற ஏராளமான குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார் ஜெயந்த் சிங். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. மருத்துவ நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெயந்த் சிங்கின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பிறகு, ஏராளமானோர் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையைப் பற்றியும், ராக்லேண்ட்

மருத்துவமனையைப் பற்றியும் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிந்துவருகிறார்கள். அவர்களில் டெல்லியைச் சேர்ந்த சுமித் வசிஷ்ட் ஒருவர்.

அவரிடம், இது தொடர்பாகப் பேசினோம் " அந்த மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சை எடுத்துவந்தேன். `எமர்ஜென்சி பெல்’ ஒன்று அங்கே இருக்கிறது. அதனால் எந்தப் பயனும் இல்லை. எவ்வளவு அவசர நேரத்தில் கூப்பிட்டாலும், யாரும் வர மாட்டார்கள். மருத்துவர்களும் நாகரிகமாக நடந்துகொள்ள மாட்டார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். பொறுப்பில்லாமல் பேசுவார்கள்.

`நல்ல மருத்துவமனை’ என்கிற பெயரை வைத்துக்கொண்டு மிக மோசமாக நடந்துகொள்கிறார்கள். ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையைவிட அரசு மருத்துவமனைகள் எவ்வளவோ மேல். பணம் செலவழித்தும் நல்ல சிகிச்சையோ, மரியாதையோ இருக்காது" என்கிறார் சுமித் வசிஷ்ட்.

இப்படி சில மருத்துமனைகள் உயிரை விலையாக வைத்துப் பணம் பறிப்பதற்கு என்ன காரணம்? பொதுநல மருத்துவர் புகழேந்தி விளக்குகிறார்...

"எந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் என்பதை அரசு முறைப்படுத்த வேண்டும். கிராமங்களில், நகரங்களில், மாநகரங்களில் என்று தனியாகப் பிரித்து மருத்துவத்துக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அதைப் பின்பற்றாத மருத்துவமனைகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவத்தில் வெளிப்படைத்தன்மை (Transparency) சுத்தமாக இல்லை. அதனால்தான் தனியார் மருத்துவமனைகள் இஷ்டத்துக்கு கட்டணங்களை வசூலிக்கின்றன. என் அம்மாவை ஓர் அறுவைசிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தேன். எவ்வளவு செலவாகும் என்று மருத்துவர் சொன்னதைவிட கூடுதலாக 65,000 ரூபாய் அதிகமாக பில் போட்டிருந்தார்கள்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “ஆபரேஷன் இரண்டு மணி நேரம் நடைபெறவில்லை. மூன்று மணி நேரம் நடந்தது. அதற்காகத்தான் கூடுதல் கட்டணம்" என்று சொன்னார்கள். அதோடு, ஆபரேஷன் கருவிகள் பொருத்தியதற்கு (fix) என்று தனியாக கட்டணம் போட்டிருந்தார்கள். மருத்துவர்களின் உதவியாளர்களுக்கு என்று ஒரு கட்டணத்தைச் சொல்லிக் கணக்குக் காட்டியிருந்தார்கள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபரேஷன் இரண்டு மணி நேரம்தான் நடந்தது என்பதை நான் அழுத்தமாகச் சொன்ன பின்னர், `சரி’ என்று கேட்டுக்கொண்டார்கள். பல வகைகளில் கொள்ளையடிக்கிறார்கள். மருத்துவரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன ?

ஒவ்வொரு சிகிச்சைக்கும் எவ்வளவு செலவாகும் என்பதை வெளிப்படையாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் போர்டில் எழுதி ஒட்ட வேண்டும். மருத்துவமனைக்குச் செல்பவர்களும் எவ்வளவு ஆகும் என்பதை எழுத்துபூர்வமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுப்பெற வேண்டும்.

நோயாளிகள் பற்றியத் தகவல்களை இங்கே பேப்பர்களில் பதிவுசெய்கிறார்கள். அதனால் தங்களுக்குத் தேவையான தகவல்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் எல்லாம் ஒரு நோயாளியின் நிலை பற்றி எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களில் பதிவுசெய்கிறார்கள். எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களில் பதிவு செய்யும்போது அதை யாராலும் அழிக்க முடியாது. அழித்தாலும் தெரிந்துவிடும்.

சிகிச்சை பற்றிய தகவல்களை மூன்று நாள்களுக்குள் நோயாளிக்கோ, உடன் வருபவர்களுக்கோ தர வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறது. மக்களும் தங்களுக்குத் தேவையான தகவல்களை கேட்டுப் பெற வேண்டும். 1996 -ம் ஆண்டு சட்டப்படி, டெங்குக் காய்ச்சல், அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய (Notifiable disease) ஒரு நோய். ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் பணத்துக்கு ஆசைப்பட்டு இதுகுறித்து அரசுக்குத் தெரிவிப்பதில்லை.

மக்களும் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். தவறினால் இதுபோன்ற பெரும் விலையைக் கொடுத்துத்தான் தீரவேண்டியிருக்கும்" என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவர் ரெக்ஸ் சற்குணத்திடம் பேசினோம். ``சில நேரங்களில் நாம்

எவ்வளவு சிகிச்சையளித்தாலும், சில மரணங்கள் நிகழ்ந்துவிடுவதுண்டு. அதற்கு மருத்துவரையோ, மருத்துவமனையையோ குறை சொல்ல முடியாது, ஆனால், பல இடங்களில் நோயாளியின் உண்மையான நிலையை மறைத்து, `சரியாகிவிடும், சரியாகிவிடும்’ என்று பொய் சொல்லி வணிக நோக்கத்துக்காகவும் செயல்படுகின்றனர்.

சிகிச்சைக்கு வருபவர்களிடமும் சரியான தகவல்களை வெளிப்படையாகத் தருவதில்லை. நோயாளிகளை வணிக நோக்கத்துடனேயே பார்க்கின்றனர்; அணுகுகின்றனர். சிகிச்சைக்காக வரும் ஆயிரம் பேரில் 900 பேர் சரியாகி 100 பேருக்கு சரியாகவில்லை என்றால், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை ( Insensitiveness).

`சிகிச்சைக்காக வருபவர்களுக்கு என்ன தெரியும்... நாம் ஏன் அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்?’ என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு நோயாளிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் சொல்லவேண்டியது மருத்துவர்களின், மருத்துவமனைகளின் கடமை.

அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இருந்தால், யாரும் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல மாட்டார்கள். அதுமட்டுமல்ல... அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு நம்பகத்தன்மையும் இல்லை. அதனால்தான் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்கிறார்கள்.

இங்கிலாந்து போன்ற பல வெளிநாடுகளில் இதுபோன்ற மரணச் சம்பவங்கள் அவ்வளவு எளிதாக நடக்காது. அங்கே மக்கள் மிகுந்த விழிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள். மருத்துவமனைகளும் தவறு செய்வதற்கு யோசிப்பார்கள், ஆனால், இங்கே அப்படி இல்லை, ஏதாவது பெரிய பிரச்னை என்றாலும், இரண்டு நாள்கள் போராட்டம் நடத்திவிட்டு அதைக் கடந்து சென்றுவிடுவார்கள். அதுதான் இதுபோன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சாதகமாக இருக்கிறது.

மருத்துவத் துறையில் கார்ப்பரேட் தன் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. பிரமாண்டமான, நேர்த்தியான, அழகான கட்டடங்களைக் கட்டி மக்களை ஈர்த்துவிடுகிறார்கள். மக்களும் அதைப் பார்த்து, நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். அதேபோல் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை. உபகரணங்கள் இருந்தும், பல இடங்களில் பயன்படுத்தாத நிலையே உள்ளது. முக்கியமாக நல்ல, திறமையான மருத்துவர்கள் யாரும் பொறுப்பான பதவிகளுக்கு வர முடிவதில்லை. குறுக்குவழிகளில் வருபவர்களே முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சாதாரண மக்களின் நிலை புரிவதில்லை. அதனால் தனியார் மருத்துவமனைகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

இக்கட்டான சூழ்நிலையில், ஒரு மருத்துவமனையில் இருந்து வேறொரு மருத்துவமனைக்கு ஒருவரைக் கொண்டு செல்லும்போது சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறார்களோ, அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு குழு வந்து சோதனைசெய்து மருத்துவ அறிக்கை தந்த பிறகுதான் தங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை இல்லாத மருத்துவமனைகளில் இதைப் பின்பற்ற வேண்டும்.

அரசு, தனியார் மருத்துவமனைகளுக்குச் சில விதிமுறைகளை விதிக்க வேண்டும். நோயாளிகளிடமும் அவர்கள் உடன் வருபவர்களிடமும் வெளிப்படைத் தன்மையோடு நடக்க அறிவுறுத்த வேண்டும். சிகிச்சை, மருத்துவக் கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும்" என்கிறார் ரெக்ஸ் சற்குணம்.