Published:Updated:

புற்றுமண் பற்று, காவிக்கல் பற்று... நாம் தொலைத்த அற்புதப் பற்று மருத்துவம்!

புற்றுமண் பற்று, காவிக்கல் பற்று... நாம் தொலைத்த அற்புதப் பற்று மருத்துவம்!
புற்றுமண் பற்று, காவிக்கல் பற்று... நாம் தொலைத்த அற்புதப் பற்று மருத்துவம்!

ம் வழக்கத்திலிருந்த, மிக நுட்பமான பல மருத்துவங்களை நாம் மறந்துவிட்டோம். இயற்கையான பொருட்களை, உள்மருந்தாகவும் வெளிமருந்தாகவும் பயன்படுத்தும் உத்திகளை உதாசினப்படுத்திவிட்டோம். நாம் மறந்த விஷயங்களில் ‘பற்றுப் போடுதல்’ எனப்படும் புற மருத்துவமுறை முக்கியமான ஒன்று. ’தல பாரமா இருக்கும் போது, சுக்குப் பத்து போட்டுக்கமா’ என்று சொன்ன குரல்கள், ’தல பாரமா இருந்தா, மாத்திரை போட்டுக்கம்மா’ என்று மாறிவிட்டன. 

‘அரிசனம் நொச்சிவசம் புற்கை’ என பற்று சார்ந்த குறிப்பினை 'தேரன் நூல்' கூறுகிறது. மஞ்சள், நொச்சி இலைகள், ஆமணக்கு இலைகளை எண்ணெயில் வதக்கி வீக்கங்களுக்கும் வலிகளுக்கும் பற்றுப் போடலாம். ஓமம், உப்பு, பெருங்காயம், சுண்ணாம்பு இவற்றைத் தண்ணீரில் அரைத்து உடல்வலி உள்ள இடங்களில் பற்றிடலாம். சில ஆரம்ப நோய் நிலைகளுக்கு பயன்பாட்டிலிருந்த பற்று மருத்துவங்கள் பற்றிப் பார்க்கலாம்.  

வீக்கங்களுக்கு சிறந்தது:

அடிபட்ட வீக்கங்களைக் கரைப்பதற்கு பற்றுப்போடும் மருத்துவம் சிறந்த பலனைத் தரக்கூடியது. சாதாரண வீக்கத்திற்குக் கூட ஆங்கில (Anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொள்வது வழக்கமாகி விட்டது. ஆனால் அது உடல்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாது. தென்தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் வர்ம மருத்துவ முறையில், வெளிமருந்தாக பற்றுப்போடும் வழக்கு முறைகள் ஏராளம் இருக்கின்றன. யானைக்கால் நோய்க்கு உள்மருந்தாக சில முக்கியமான மருந்துகளை கொடுத்து, வெளியில் புற்றுமண், காவிக்கல், கறுப்புக்கொள்ளு, முட்டைவெண்கரு கொண்டுப் பற்றுபோடும் மருத்துவ முறை நெடுங்காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.

கழற்சிப் பற்று:

விரை வீக்கத்திற்கு, கழற்சிக்காயைப் பொடித்து, முட்டையின் வெண்கருவில் அரைத்து பற்றுப்போடலாம். கழற்சிக்காய் மட்டுமல்லாமல், கழற்சி இலைகளை விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு அரைத்துப் பற்றுப்போடலாம். கழற்சி விதைக்கு இசிவகற்றித் (Anti-spasmodic) தன்மை இருப்பதால், தசைப் பிடிப்புகளுக்கும் பற்றிடலாம். கழற்சி இலைகளுக்கு வீக்கமுறுக்கி தன்மை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மூசாம்பரப் பற்று:

கற்றாழையின் உலர்ந்த கூழ் பகுதி, 'மூசாம்பரம்' என்றழைக்கப்படுகிறது. அடிப்பட்ட வீக்கங்கள் மற்றும் மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களுக்கு மூசாம்பரப் பற்று சிறந்த பலனைக் கொடுக்கும். மூசாம்பரத்துடன் முட்டை வெண்கரு அல்லது வெந்நீர் விட்டு அரைத்து, வீக்கம் உள்ள இடங்களில் பற்றுப் போட வேண்டும். மூசாம்பரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மூசாம்பரத்திற்கு ’கரியபோளம்’ என்றும் பெயர் இருக்கிறது. அனைத்து வீடுகளிலும் நடைமுறையிலிருந்த மூசாம்பரப் பற்று மருத்துவம் இப்போது முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.

நீர்க்கோவை மாத்திரை:

முன்நெற்றி வலி, தலைபாரம், தலைவலி, தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற குறிகுணங்களைக் கொண்ட பீனிச (சைனஸைடிஸ்) நோயின் தன்மையைக் குறைக்க ’நீர்க்கோவை மாத்திரைப் பற்று’ சிறந்ததாக இருக்கும். சித்த மருந்தான நீர்க்கோவை மாத்திரைகளைப் பொடித்து, இஞ்சிச்சாறு விட்டு குழப்பி, நெற்றிப் பகுதி, கன்னப் பகுதி ஆகியவற்றில் பற்றுப் போட்டு வரலாம். ஒருமணி நேரம் கழித்து, குறிகுணங்கள் மறைந்திருப்பதை தாராளமாக உணரமுடியும். இஞ்சிச் சாறு சேர்த்து பற்றுப் போடுவதால் லேசான எரிச்சலிருப்பின் பயப்பட வேண்டாம். இஞ்சிச் சாறுக்கு பதில், தண்ணீரிலும் கலந்து பற்றிடலாம். 

கப நோய்களுக்கு:

விடாமல் பாடுபடுத்தும் இருமலைக் குணமாக்க, வெற்றிலையை நல்லெண்ணெயில் முழுகவிட்டு, மிதமாக சூடுபடுத்தி மார்பு பகுதியில் பற்றிடலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் இருமலை விரைவில் குணப்படுத்தும். தாய்மார்களுக்கு பால் சுரப்பைத் தூண்டவும், வெற்றிலையை சூடாக்கி மார்பில் பற்றுப் போடலாம். பூச்சிக்கடிகளுக்கு குப்பைமேனி இலை, உப்பு, வெற்றிலை இம்மூன்றையும் அரைத்து பற்று போடுவதால் குறிகுணங்கள் விரைவாக மறையும். வெங்காயத்தையும் இஞ்சியையும் அரைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து, துணியில் நனைத்து மார்பில் போட, சளி, இருமல் பறந்து போகும். கற்பூரவள்ளி இலைப் பற்று, தலைவலிக்கும், சுளுக்குகளுக்கும் பலன் தரும். இதிலுள்ள மருத்துவ குணமிக்க வாசனை எண்ணெய்கள் (Volatile oils) குறிகுணங்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது. நொச்சி இலைகள், பூண்டு, மருதாணி இலைகளைக் கொண்டு செய்யப்படும் பற்று தலைபாரத்தை குறைக்கும். கிராம்பை நீர் விட்டு அரைத்து நெற்றிப் பகுதியில் பற்றுப் போட்டால், தலைபாரத்தின் தீவிரம் குறையும். 

உடல் வெப்பத்தைக் குறைக்க:

ஆமணக்கு இலை, மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து இம்முன்றையும் அரைத்து, கழுத்தில் உண்டாகும் வீக்கங்களுக்கு பற்று போடுவது மரபு. தாய்ப்பாலைத் துணியில் நனைத்து, தலைவலிகளுக்கு நெற்றிப்பகுதியில் பற்றிடலாம். காய்ச்சல் இருக்கும்போது, உடனடியாக வெப்பத்தைக் குறைக்க, ஈரத்துணியைக் கொண்டு பற்றுப்போடுவதை பலரும் மறந்துவிட்டனர். இன்றும்கூட அதிக வெப்பத்துடன் காய்ச்சல் இருக்கும்போது, ஈரத்துணியைக் கொண்டு உடலைத் துடைக்கச் செய்து, வெப்பத்தை குறைக்கும் முறையை சில மருத்துவமனைகளில் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு விரைவாக பலன் தரக்கூடியது. 

தசையின் வலிமைக்கு:

மூட்டுவலிக்கும் வீக்கத்திற்கும் முடக்கறுத்தான் இலைப் பற்று, கழற்சிப் பற்று, முட்டை வெண்கரு பற்று சிறந்தது. ஆவாரை இலை மற்றும் கருப்பு உளுந்து மாவு கலந்து செய்யப்படும் பற்று மருத்துவம், கழுத்து வலி மற்றும் இடுப்புப் பொருத்து வலியை சாந்தப்படுத்தக் கூடியது. கருப்பு உளுந்து மாவுப் பற்றானது, தசைகளுக்கு வலிமை தரக்கூடியது. விலங்கின மருத்துவத்திலும் நிறைய பற்று முறைகள் பின்பற்றப்படுகின்றன.

சில மூலிகைப் பற்றுகள்:

அமுக்கராக்கிழங்கு, அதிமதுரம், எட்டிப்பழம் என முலிகைகளை உள்மருந்தாக மட்டுமில்லாமல் வெளிமருந்தாகவும் பல்வேறு நோய் நிலைகளில் பயன்படுத்தலாம். வாத நாராயணன் இலை, புளியிலை, கொய்யா இலை, தழுதாழை இலை, குன்றிமணி விதை என பற்று மருத்துவத்திற்குப் பயன்படும் மூலிகைகள் நிறைய இருக்கின்றன. உடல் வலியைக் குறைக்க, சாணத்தைக் காய்ச்சி போடும் பற்றின் மகத்துவத்தை கிராமங்களில் இருப்பவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும். ரத்தம் வழியும் காயங்களைச் சுற்றிப் போடப்படும் சில மூலிகைப் பற்றுகள், ரத்தம் வடிவதையும் நிறுத்த உதவும். இதற்கு துவர்ப்பு சுவையுள்ள மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறன. பெரும்பாலான துவர்ப்பு சுவையுள்ள மூலிகைகளுக்கு குருதியை அடக்கும் தன்மை  இருக்கிறது.

நோயுள்ள பகுதிகளில் மூலிகைகளைக் கொண்டு பற்றுப்போடும் போது, தோலின் மூலமாக அதன் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, மருத்துவப் பலன்களை வெளிப்படுத்தும். அடிப்பட்ட வீக்கங்களுக்கு மிதவெப்பத்தில் பற்று மருத்துவம் செய்யும் போது, அப்பகுதியில் குருதிச் சுற்றோட்டத்தை அதிகரித்து நோயை நிவர்த்தி செய்யஉதவும். அடிப்பட்ட இடத்தில் உண்டான வீக்கத்தையும் வலியையும் விரைவாக குறைக்கும். மிதமான சூட்டில் கொடுக்கப்படும் பற்று, வலிகளுக்கும் இதமாக இருக்கும்.

வரைமுறை:

எந்த எந்த நோய்களுக்கு, எந்த நிலையில் உள்ள குறிகுணங்களுக்கு பற்று மருத்துவம் மேற்கொள்ளலாம் என்ற வரைமுறை இருக்கிறது. எலும்பு முறிந்த நிலையில் உண்டாக்கும் வீக்கங்களுக்கு, பற்று மருத்துவம் தான் மேற்கொள்வேன் என்று அடம்பிடிப்பது தவறு. முறையான எலும்பு முறிவு மருத்துவரிடம் ஆலோசனைப்பெற்று மருத்துவம் எடுக்க வேண்டும். புற்றுநோய்க் கட்டிகளுக்கு பற்று மருத்துவமே போதும் என்று எண்ணுவது தவறானது. அதற்கும் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும். மிதவெப்பத்தில் மட்டுமே பற்று மருத்துவத்தை செய்யவேண்டும். அதிகமான சூட்டில் செய்யும் போது தோலில் கொப்புளங்கள் உண்டாகலாம். மருத்துவரின் அறிவுரையோடு தேவையான நோய்களுக்கு பற்று மருத்துவத்தை மேற்கொண்டால், பல நோய்களை உள்மருந்துகள் இல்லாமலே தடுக்க முடியும்.

இன்னும் நிறைய பற்று முறைகள் பல பகுதிகளில் நடைமுறையில் இருக்கும். எல்லாவற்றையும் தேடி ஆவணப்படுத்தினாலே போதும், பற்று மருத்துவத்தின் மேன்மையை அனைவரும் அறியும்படி செய்திடலாம். வீடுகளில் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்கும் மாத்திரைகளைப் போல, இனிமேல் பற்று மருத்துவம் செய்ய தேவையான இயற்கைப் பொருட்களும் வீடுகளில் தயார் நிலையில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வோம்!