Published:Updated:

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள்! பகுதி-2 #CelebrateGovtHospital

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள்! பகுதி-2  #CelebrateGovtHospital
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள்! பகுதி-2 #CelebrateGovtHospital

இதற்கு முன்பாக, பகுதி - 1 ல் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள், என்னென்ன துறைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிப் பார்த்தோம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளான  ரத்தநாள அறுவைச் சிகிச்சை  (Vasculer surgery) பற்றியும், ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை (Plastic surgery)  பற்றியும் சற்று விரிவாகப் பார்த்தோம். தற்போது மற்ற துறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

டுத்ததாக நாம் நுழைந்தது நரம்பியல் துறை. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உள்நோயளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர்

புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அந்தத் துறையின் தலைவர், பேராசிரியர் லஷ்மி நரசிம்மன், முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

அறிமுகப்படுத்திக்கொண்டதுமே சரளமாகப் பேச ஆரம்பித்தார்... ``நானும் கல்லூரியில் படிக்கும்போது விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக இருந்தவன்தான்’’ என்று சொல்லிவிட்டுப் பேசத்தொடங்கினார். ``1950 - ம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் நியூராலஜிக்கென்று தனித்துறை உருவானது. நியூராலஜியில் பொது நரம்பியல் சிகிச்சைகள் மற்றும் சிறப்பு நரம்பியல் சிகிச்சைகள் என இரண்டு வகைகள் உள்ளன. பொது நரம்பியல் சிகிச்சையில் அனைத்துவிதமான நரம்புக் கோளாறுகளுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது.

சிறப்புப் பிரிவில், தலைவலி, மறதி நோய், தசை நோய்கள், அங்க அசைவுக் கோளாறுகள், பக்கவாதம், வலிப்பு நோய் ஆகியவற்றுக்கென தனித்தனி கிளினிக்குகள் உள்ளன. வருடத்துக்கு கிட்டத்தட்ட 12,000-க்கும் அதிகமானோருக்கு இங்கே அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

80,000 ரூபாய் மதிப்புள்ள 'ஸ்ட்ரோக் த்ரோம்போலிசிஸ்' (Stroke Thrombolysis) மாத்திரைகள் இங்கே இலவசமாக வழங்கப்படுகின்றன" என்கிறார் மருத்துவர் லக்‌ஷ்மி நரசிம்மன்.

அடுத்ததாக, அதிகமாக வெளியில் சொல்லத் தயங்கும் பாலியல் நோய்கள் (Venereology) துறைக்குச் சென்றோம். பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரிடம் இருந்தும் விலகி தனியாக இருக்க விரும்புவார்கள். அதேபோல்தான் இந்த மருத்துவமனையிலும் ஒரு மூலையில், பாழடைந்த கட்டடத்தில் இருக்கிறது இந்தப் பிரிவு. முகத்தில் சோக ரேகைகளோடு வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர் சிகிச்சைக்கு வந்தவர்கள்.

``கிரந்தி, வெட்டை, ஹெர்பிஸ் மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மருக்கள் ஆகிய பிரச்னைகளுக்கு இங்கே சிகிச்சையளிக்கப்படுகிறது. வைரஸ்களால்தான் இந்த நோய் மற்றவர்களுக்கு ஏற்படுகிறது. சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக இதைச் சரிசெய்துவிடலாம். ஆனால், தயக்கம்தான் பலரையும் சிகிச்சை பெறவிடாமல் தடுக்கிறது. யாரும் இதற்காகத் தயக்கப்படத் தேவையில்லை. தினமும் 100- க்கும் மேற்பட்டோர் இங்கே வந்து சிகிச்சை பெறுகிறார்கள். ஆரம்பத்திலேயே வந்துவிட்டால் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். எய்ட்ஸ் பொது மருத்துவப் பிரிவோடு சேர்க்கப்பட்டிருப்பதால், அதற்கு சிகிச்சை இங்கே அளிக்கப்படுவதில்லை" என்கிறார் பேராசியியர் மருத்துவர் விஜய பாஸ்கர்.

அடுத்ததாக நெஞ்சக நோய்கள் (Throcic medicine ) பகுதிக்குச் சென்றோம். இருமலோடும், போர்த்திய போர்வைகளோடும் பலர்

காத்துக்கொண்டிருந்தனர்,

"இருமல், சளி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், எய்ட்ஸ் நோயால் உண்டாகும் சளி ஆகியவற்றுக்கு இங்கே சிகிச்சையளிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோர் இங்கே புறநோயாளிகளாக வந்து சிச்சை பெற்று திரும்புகின்றனர். உள்நோயாளிகளாக பதினைந்து பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவு சிக்கலான நிலையில் இங்கே வந்தாலும், குணப்படுத்திவிடுவோம். இங்கே, அதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும், அனுபவம் வாய்ந்த பேராசியர்களும் இருக்கிறார்கள்" என்கிறார் பேராசியர் மருத்துவர் கிருஷ்ண ராஜசேகரன்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறையும் இங்கே சிறப்பாக செயல்பட்டுவருகிறது. நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சைபெற்றுச் செல்கிறார்கள்.

வி.ஐ.பி-க்கள் வந்து தங்கி சிகிச்சை பெறுவதற்கென்று தனிப்பிரிவொன்று அதி நவீன வசதிகளுடன் இயங்குகிறது. தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு இவ்வளவு கட்டணம் என்று வசூலிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. தங்குவதற்கு மட்டுமே கட்டணம்... மற்றபடி, சிகிச்சைக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை.

அடுத்ததாக, ரத்த சேகரிப்பு மையத்துக்குச் சென்றோம். கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான ரத்த மாதிரிகள் இங்கே இருக்கின்றன. ரத்தத்தில் இருந்து தட்டணுக்கள் பிரிக்கப்பட்டு, தனியாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ரத்த மாதிரிகளில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் இருந்தால், அவை தனியாக எடுக்கப்பட்டு, சம்பத்தப்பட்ட நபருக்கு தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தினமும் கேம்ப் நடத்தி ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. தானாக முன்வந்து ரத்தம் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

"ரத்தம் சேகரிப்பதற்கு ஆகும் செலவைவிட அதை சோதனை செய்து, தனியாகப் பிரித்து எடுப்பதற்கான செலவுகள்தான் அதிகம். வெளியில் என்றால், ஒரு யூனிட்டுக்கு 2,000 ரூபாய் வரை செலவாகும்’’ என்கிறார்கள்அந்தப் பிரிவு ஊழியர்கள்.

24 மணிநேரமும் இயங்கக்கூடிய பெரிய பொது மருந்தகமும், அந்தந்த துறைகளுக்கு அருகிலேயே சிறிய மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன. எல்லா மருந்தகங்களிலும் எந்த நேரத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே, தனியார் மருத்துவமனையையே மிஞ்சிவிடும் அளவுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளோடும்,பளபளக்கும் பளிங்குத் தரை, வண்ண மீன் தொட்டிகள் என வண்ண மயமாகக் காட்சியளிக்கிறது 'அம்மா முழு உடல் பரிசோதனை மையம்'. இங்கே முழு உடல் பரிசோதனை மூன்று திட்டங்களின் கீழ் செய்யப்படுகிறது. `அம்மா கோல்டு’, `அம்மா டைமண்ட்’, `அம்மா பிளாட்டினம்’... முறையே 1,000, 2,000, 3,000 ரூபாய் என்று கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

3,000 ரூபாய்க்குச் செய்யப்படும் முழு உடல் பரிசோதனையை வெளியில் செய்தால் பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகும் என்கிறார்கள் பணியாளர்கள். தினமும் 50க்கும் மேற்பட்டோர் இங்கே 'மாஸ்டர் ஹெல்த் செக் அப்' செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு தரமான உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. காலையில் சோதனை செய்தால் மதியத்துக்குள் மருத்துவ அறிக்கை கிடைத்துவிடும், கிட்டத்தட்ட 68 சோதனைகளுக்கான முடிவுகள் கிடைத்துவிடும். இதற்காக மட்டுமே எட்டு மருத்துவ அதிகாரிகள் இருக்கிறார்கள்.

எவ்வளவு சிறப்பான வசதிகள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், சிறப்பான, அர்ப்பணிபோடு கூடிய சிகிச்சையளிக்கப்பட்டாலும் அரசு மருத்துவமனைக்குள் இருக்கிறோம் என்கிற சிந்தனை பெரும்பாலான இடங்களில் வந்துவிடுகிறது. 

கட்டணம் வாங்கிக்கொண்டு மருத்துவம் செய்யும் தனியார் மருத்துவமனைகளையும், அரசு மருத்துவமனைகளையும் ஒப்பிடக் கூடாது என்பது நியாயமான வாதமாக இருந்தாலும்கூட, அரசு மருத்துவமனைக்குள்ளேயே கட்டணம் வாங்கிக்கொண்டு செயல்படும் அம்மா உடல் பரிசோதனை மையம், வி.ஐ.பி-க்களுக்கான சிகிச்சைப் பிரிவு மட்டும் எப்படி இவ்வளவு தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எனில், பணம் இல்லாத ஏழை மக்கள் சிகிச்சை பெறும் இடங்கள் தூசியும், நாற்றத்தோடும்தான் இருக்கும் என்பது ஒவ்வொருமுறையும் நிரூப்பிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் மிக முக்கியமான, உடனடியாக சரிசெய்யப்பட வேண்டிய பிரச்னையாக இருப்பது 'லிஃப்ட்' வசதி. முக்கியமான இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு லிஃப்ட்தான் இயங்குகிறது.

அதிலும் நரம்பியல் துறை இயங்கும் கட்டடத்தில் லிஃப்ட் வசதி சுத்தமாக இல்லை. நான்காவது மாடியில் நின்றுகொண்டு `இன்னும் இரண்டு மாடிதான் நடந்துறலாம்’ என்று வயதான, நடக்க முடியாத நோயாளியிடம் நர்ஸ் சொல்லும்போது பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார் அந்த வயதான பெண்மணி.

`சிகிச்சைக்கு வரும் மக்களும் வளாகத்துக்குள்ளேயே கண்ட இடங்களில் எச்சில் துப்புகிறார்கள். பெண்களில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை கழிவறைக்குள் திணிக்கிறார்கள். ஆண்கள் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை மருத்துவமனைக்குள்ளேயே போட்டுவிட்டுச் சென்று விடுகிறார்கள்...’ என்று வருத்தப்படுகிறார்கள் மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்கள். இவற்றையெல்லாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நம் வீட்டை எப்படிப் பராமரிப்போமோ அப்படித்தான் மருத்துவமனையையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2015 மற்றும் 2016 -ம் ஆண்டில் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம். அதில் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. கடந்த சில நாள்களுக்கு முன்னதாகக்கூட, உடல் உறுப்புதானத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மருத்துவமனை மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் முதல்வரின் தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக சில குறைபாடுகள் இருந்தாலும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் அர்ப்பணிப்போடு கூடிய சிகிச்சையும், தன் தாய், தந்தையைப்போல முதியவர்களை கவனித்துக்கொள்ளும் செவிலியர்களும், எத்தனை முறை குப்பைகளைப் போட்டாலும் திட்டிக்கொண்டேயாவது அவற்றைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களும், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட மக்கள் பணியாற்ற காலை முதலே காத்திருக்கும் வயதான முதியவர்களும், அவசர சிகிச்சைக்காக வருபவர்களை உடனடியாகத் தூக்கிச் செல்ல எப்போதும் படைவீரர்களைப் போலத் தயாராக இருக்கும் அவசர நிலை உதவியாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்கள் அனைவரும் இந்த மருத்துவமனைக்கு இன்னும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுத் தருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.