Published:Updated:

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு சலுகைகள் வேண்டும்! வலுக்கும் குரல்கள் #NationalOrganDonationAwarenessWeek

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு சலுகைகள் வேண்டும்! வலுக்கும் குரல்கள்  #NationalOrganDonationAwarenessWeek
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு சலுகைகள் வேண்டும்! வலுக்கும் குரல்கள் #NationalOrganDonationAwarenessWeek

டல் உறுப்புதானத்தில் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து, ஹாட்ரிக் சாதனை புரிந்திருக்கிறது தமிழ்நாடு. இதற்காக, டெல்லியில் நடைபெற்ற  8-வது இந்திய உடலுறுப்பு தானம் தின விழாவில், மத்திய அரசின் பாரட்டையும் பரிசையும் பெற்று கௌரவம் சேர்த்திருக்கிறது. அதே நேரத்தில், " உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள்’’ என்று 'உடல் உறுப்பு தானம் வார விழா'வில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

உடல் ஆரோக்கியமுள்ள ஒருவரோ, மரணமடைந்தவரோ அல்லது மூளைச் சாவடைந்து இறக்கும் தருவாயில் உள்ளவரோ தன்னுடைய உடல் உறுப்பையோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியையோ, அந்த உறுப்பு தேவையுள்ள ஒருவருக்கு வழங்கி அவர் உயிர்பிழைக்க உதவுவதே 'உடல் உறுப்பு தானம்.'

உடல் உறுப்பு தானம்குறித்த விழிப்பு உணர்வு வடமாநிலங்களைவிட, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்பட்டுவருகிறது. இருந்தாலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுகுறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.

எனவே, மக்களிடையே, உடல் உறுப்பு தானம்குறித்த விழிப்பு உணர்வை மேலும் அதிகரிக்க, ஊக்குவிக்க எந்த மாதிரியான திட்டங்கள் உதவும் என்பதுகுறித்து 'மோகன் ஃபவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குநர் லலிதா ரகுராமிடம் பேசினோம். அவர் சில வழிமுறைகளைச் சொன்னார். அவை...

உடல் உறுப்பு தானத்தைக் கட்டாயமாக்குதல்

இங்கு உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஸ்பெயின் போன்ற உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் முன்னிலை வகிக்கும் பல நாடுகளில், உறுப்பு தானம் பெறுவதில் புதுமையான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது, `இறந்ததும் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன்’ என்று பதிவுசெய்ய வேண்டியதில்லை. அவர்கள் இறந்த பிறகு, அரசே தானாக முன்வந்து இறந்தவர்களின் உறுப்புகளை எடுத்துக்கொள்ளும். அதேநேரத்தில், `நான் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விருப்பமில்லை’ என்று பதிவுசெய்தவர்களிடம் மட்டும் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுவதில்லை; எடுக்கப்படுவதில்லை. இதுபோன்ற திட்டங்களையும் நம் நாட்டிலும் முன்னெடுக்கலாம்.

லைசென்ஸுடன் இணைப்பு

ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போதே உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவராக இருந்தால், ஓட்டுநர் உரிமத்தில், 'உடல் உறுப்பு தானம் செய்பவர்' என, அச்சிட்டு வழங்கலாம். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உயிரிழக்க நேரிடும்போது, அவர்களுடைய உடல் உறுப்புகள், உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களுக்கு வழங்க ஏற்படும் காலதாமத்தைத் தவிர்க்க உதவும். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அந்த மாநிலத்தின் போக்குவரத்து துறையால் திட்டமிடப்பட்டிருக்கிறது.

மருத்துவ ஆலோசகர் நியமித்தல்!

தங்களின் குடும்பத்தில் ஒருவர், விபத்தில் மூளைச்சாவு அடைந்ததும், அந்த நெருக்கடியான நேரத்திலும் அவருடைய உறுப்புகளை தானமாகக் கொடுக்க, அந்தக் குடும்பத்தினர் எடுக்கும் முடிவே, முக்கியமானது. ஆனால், இறந்தவரின் இழப்பை ஈடு செய்வது எப்படி என அடுத்த கட்டம்குறித்து யோசிக்க வேண்டிய இக்கட்டான நிலையில், பெரும்பாலும் உடல் உறுப்பு தானம்குறித்து முடிவெடுப்பது அந்த குடும்பத்தினருக்கு கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருக்கும். இந்தச் சமயங்களில் அந்த மருத்துவமனையிலேயே, அவர்களுக்கு மனதளவில் தைரியமூட்டவும், அதற்கான நடைமுறைகள்குறித்து விளக்கிப் புரியவைப்பதற்கும் ஒரு மருத்துவ ஆலோசகர் நியமிக்கப்பட்டிருந்தால், உதவியாக இருக்கும். எனவே, அரசு சார்பில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் உடல் உறுப்பு தானத்துக்கென ஒரு மனநல மருத்துவர் நியமிக்கப்பட்டிருந்தால், சிறப்பாக இருக்கும். அதேபோல உடல் உறுப்பு தானம் தற்போது சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. இதற்கென ஒரு தனி அமைச்சகத்தை அமைக்கலாம்.

தானம் செய்தவரின் குடும்பத்துக்குச் சலுகை!

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு மருத்துவம் பலன் அளிக்காதபோதோ, மூளைச் சாவடைந்த பின்னரோ இறந்தவரிடமிருந்து இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. அதுவரை அவர்கள் செலவழித்த பணத்தின் மதிப்புக்கும், அதற்கு அடுத்து அவர்களின் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்வதற்கும் அரசு சார்பில் வழங்கப்படுவது ஒரு சான்றிதழ் மட்டுமே. அதே நேரத்தில் ஒவ்வோர் உறுப்புக்கும் விலை நிர்ணயம் செய்வது, விலை பேசுவது போலாகிவிடும். ஆனால், குடும்பத் தலைவர்களை இழந்து திக்கற்ற நிலையில் நிற்கும் குடும்பத்தின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் சலுகையோ, இடஒதுக்கீடோ வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.

பிரபலங்கள் மூலம் விழிப்பு உணர்வு

உறுப்புதான வார விழா கடைப்பிடித்தல், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவை அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதேபோல, சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மூலமும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்.

அரசுக்கு ஒத்துழைத்தல்

உறுப்பு தானம் செய்யப் பதிவுசெய்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் குடும்பத்தினரிடம், அவரது விருப்பத்தை தெரிவித்து வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் இறப்புக்குப் பின்னர் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் வரும்போது, குடும்பத்தினரின் சம்மதம் கிடைப்பதிலோ, உறுப்பைப் பெறுவதிலோ ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க முடியும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும், `உறுப்பு தானம் செய்வோம்’ என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் சம்பாதித்த பணத்தையோ, சேர்த்துவைத்த சொத்துகளையோ, அடுத்த சந்ததிக்காக விட்டுச் செல்லும்போது, உறுப்புகள் மட்டும் ஏன் வீணாக மண்ணில் மக்கிப் போக வேண்டும்? அவையும் சமுதாயத்துக்குப் பயன்படட்டுமே’’ என்கிறார் லலிதா ரகுராம்.

உடலுறுப்பு தானங்களை முறைப்படுத்துவதற்காக, சுகாதாரத் துறையின் கீழ், தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், இந்த ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்காக என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவை எப்படி எளிமையாக்கப்பட்டுள்ளன என்பதுகுறித்து தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய நிர்வாகி ஒருவர் விவரித்தார்...

"உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பதிவு செய்துகொள்ளலாம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். இந்த நடைமுறையை தற்போது எளிமையாக்கி, உறுப்பு தானம் செய்ய விரும்புவோருக்கு ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையைத் தமிழக அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கென்றே அமைந்துள்ள <www.tnos.org> என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அட்டையில் பெயர், ரத்தப் பிரிவுடன், சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல்... என எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும்.

உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வை அதிகரிக்க, ஆண்டுதோறும்  'உடல் உறுப்பு தான விழா' (National Organ Donation Awareness Week ) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினங்களில், உறுப்பு தானம் செய்தவர்களை அழைத்து கௌரவிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில், தமிழகத்தில், 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், கடந்த 27-ம் தேதிவரை  (27.11.2017)  1,062 பேரிடம் இருந்து, 5,980 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு, நிதியுதவி அளிக்கப்படுகிறது. உடலுறுப்பு தானம் செய்வதற்கான நடைமுறைகள், சட்ட திட்டங்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது’’ என்கிறார் அவர்.