Published:Updated:

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

Published:Updated:
நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

`இனிமேலாவது தினமும் வாக்கிங் போகலைனா, நீங்க நிறைய உடல்ரீதியான தொந்தரவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ - இப்படி மருத்துவர் சொல்லிவிட்டாரே என்று வேறு வழியின்றி நடைப்பயிற்சியைத் தொடங்குபவர்களே இன்று அதிகம். உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, ஃபிட்டான உடல்வாகுக்கு என ஆரம்பத்திலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு. உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம். 

அரைமணி நேர நடை:

வேலை செய்யவேண்டிய இடத்துக்கு பல கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டிய நிலைமை எல்லாம் இன்று இல்லை. வீட்டு வாசலுக்கும், அலுவலக வாசலுக்கும் போக்குவரத்துப் புரியும் சொகுசு வாகனங்கள், அலுங்காமல் குலுங்காமல் நம்மைக் கொண்டு சேர்க்கும் பணியை வெகு சிறப்பாகச் செய்கின்றன. இப்படி உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.

உறுப்புகளுக்கு நம்பிக்கை துரோகம்:

மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல்... என நமது உடல் உறுப்புகள் அனைத்தும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நம்பிக்கை துரோகம் செய்துகொண்டிருக்கிறோம். நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்படவைக்கும். 
நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது. நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்போம்.

பலன்கள்:

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும். சிறு வயது முதலே விளையாட்டுடன்கூடிய நடைப்பயிற்சி, முதுமையைத் தள்ளிப்போடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும் (Increases Lung capacity). எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும். உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சியோடு, யோகப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய்யலாம். 

இதயத்தை வலிமையாக்கும்:

வாரத்துக்குக் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த முதியோர்களுக்கான பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, இளம் வயதிலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாகத் தடங்கலின்றி இயங்குவதாகத் தெரிவிக்கிறது. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்குமாம். 

மகிழ்ச்சியை வழங்கும்:

`நடைப்பயிற்சி, மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஹார்மோன்கள் சுரக்க உதவும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைப்பழக்கமும் முக்கியமான ஒன்று. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள ’ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) பகுதி சிறப்பாகச் செயல்படுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பல உணர்வுபூர்வமான செயல்பாடுகளுக்குக் காரணமான ஹிப்போகாம்பஸ் பகுதி, முக்கியமாக ஞாபகசக்தியுடன் தொடர்புடையது. நடப்பதால், மூளையின் அனைத்துச் செயல்பாடுகளும் மேம்படுவதாகவும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாள்கள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள்... உற்சாகம் கரைப்புரண்டு ஓடும்! 

இயந்திரமா... இயற்கையா?

’ட்ரெட்மில் இருக்கிறது… வீட்டுக்குள்ளேயே அதில் நடக்கிறேன்’ என்பவர்களுக்கு ஒரு செய்தி… சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பவர்களுக்கு கூடுதல் பலனாக `வைட்டமின் டி’ கிடைக்கும். வெளிச்சம் உள்நுழையாத நான்கு சுவர்களுக்குள் நடப்பதற்கும் இயற்கையான ’வெளியில்’ நடப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் வெளியில் நடக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், ட்ரெட்மில் இயந்திரத்திலாவது நடக்கவேண்டியது அவசியம். 

நடக்க சில வழிமுறைகள்...

நடைப்பயிற்சி செய்யும்போது, அதற்குத் தோதான காலுறைகளையும் காலணிகளையும் பயன்படுத்துவது முக்கியம். நடைப்பயிற்சிக்கு உகந்த உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். நாலைந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடைப்பயிற்சி செல்வது நல்லதுதான். ஆனால் அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல. உலக அரசியல் அனைத்தையும் `வாக்கிங்’ செல்லும்போது பேசிக்கொண்டே இருந்தால், முழுப் பலன்களும் கிடைக்காது. பேசிக்கொண்டே நடப்பதால், நடைப்பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகளவில் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறையலாம். நடக்கும்போதுகூட, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி செல்போனை தடவிக்கொண்டிருந்தால், விபத்து நடக்கலாம். மேடு, பள்ளம் இல்லாத சமதரையில் நடக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதியவர்கள் சமதரையில் நடப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைதானத்திலோ அல்லது வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்களிலோதான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால், அருகிலிருக்கும் இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங்களின் வாசனையும் துணை நிற்க நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன்களைக் கொடுக்கும். 

நடைப்பயிற்சி எனும் அடிக்‌ஷன் ‘Addiction’:

புதிதாக நடைபயிற்சி செய்யத் தொடங்குபவர்கள், சிறிது சிறிதாக நடக்கும் தூரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். முதல் நாளே பல கி.மீ தூரம் நடக்கிறேன் என்று ஆர்வக் கோளாறில் தொடங்கினால், இரண்டாம் நாளுக்கு நடை தாண்டாது. நடைப்பயிற்சி செய்வதற்கு முன்னர், எளிய ஸ்ரெட்சிங் பயிற்சிகள் (Stretching Exercises) செய்துகொள்வது நல்லது. பழகிவிட்டால், அதன் பலன்களை உணர்ந்து, தவறாமல் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவீர்கள். புகை, மது போன்ற தீய பழக்கங்களைச் சார்ந்து இருக்கும் ‘Addiction’-ஐ தவிர்த்துவிட்டு, நடைப்பயிற்சிக்கு ‘Addict’ ஆகிவிட்டால் போதும். ஆரோக்கியம் உத்தரவாதம். 

காலையில் தூங்கி வழிந்து, விருப்பமில்லாமல் `நடக்கணுமே...’ என்று நடப்பது முழுமையான நடைப்பயிற்சி அல்ல! உடலை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், உற்சாகமாக தினமும் நடப்பதே உண்மையான நடைப்பயிற்சி! ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் உல்லாசமாக நடப்பதால் எந்தப் பயனும் இல்லை. இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்த உடலுடன் (வி)வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி. முன்பெல்லாம், ஒவ்வொரு செயலுடனும் ’நடை’ எனும் பயிற்சி ஒன்றிணைந்திருந்தது. ஆனால் இப்போதோ, நடைக்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. வாய்ப்புகளை உண்டாக்குவதுதான் முக்கியம். காலை பிறக்கும் இளஞ்சூரியன் மற்றும் மாலை மறையும் கதகதப்பான சூரியனின் பார்வையில் உற்சாகமாக நடந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்!