Published:Updated:

குழந்தையைக் காப்பாற்றும் போராட்டம்... கல்லீரல் தானம் தந்து, கஷ்டங்களை எதிர்கொண்டு காப்பாற்றிய தாய்!

குழந்தையைக் காப்பாற்றும் போராட்டம்... கல்லீரல் தானம் தந்து, கஷ்டங்களை எதிர்கொண்டு காப்பாற்றிய தாய்!
குழந்தையைக் காப்பாற்றும் போராட்டம்... கல்லீரல் தானம் தந்து, கஷ்டங்களை எதிர்கொண்டு காப்பாற்றிய தாய்!

ரு தாய்க்கும் குழந்தைக்குமான உறவு தொப்புள்கொடியோடு முடிந்துவிடுவதில்லை. குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர், குழந்தைதான் அந்தத் தாயின் வாழ்க்கை என மாறிவிடுகிறது. சில சமயங்களில் பெண் தனிமையில் வாடும்போது, அவளால் இந்த பூமியில் பிறந்த உயிர்தான் அவளை உயிர்ப்போடுவைத்திருக்கிறது; பாதை தெரியாத தனிக்காட்டிலும் ஒளியைத் தேடிப் பயணிக்கச் செய்கிறது. அந்த ஜீவனின் உயிரே கேள்விக்குறி ஆனால்..? குழந்தையை மீட்டெடுக்க பெற்றவளின் வருத்தத்துக்கும் போராட்டத்துக்கும் அளவே இல்லாமல் போய்விடும். அப்படி ஒரு விடியலுக்கான போராட்டத்தை நடத்தியிருக்கிறார் கிருஷ்ணவேணி, பிரிஷா (Prissha) என்ற தன் மகளுக்காக.

மலேஷியத் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. பள்ளிப் படிப்பை முடித்ததும், சந்திரன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். நடுத்தரக் குடும்பம். கணவரின் வருமானத்தில் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. அவர்களுக்கு 'தருண்' என்று ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. முதல் குழந்தையே ஆண் குழந்தையல்லவா... உற்சாகத்தில் மிதந்தார்கள் சந்திரனும் கிருஷ்ணவேணியும். அந்தக் குழந்தைக்கு இரண்டாவது வயது நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராமல் வந்தது காய்ச்சல். `வைரல் ஃபீவர்’ என்றார்கள் மருத்துவர்கள். என்னென்னவோ சிகிச்சை கொடுத்துப் பார்த்தும் தருணைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தையைப் பறிகொடுக்கவேண்டியதானது. அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைதான் பிரிஷா. ஆனாலும் அந்தக் குழந்தையும் தங்கள் கைநழுவிப் போய்விடுமோ என்கிற அச்சத்தை பிறந்த சில நாள்களிலேயே ஏற்படுத்திவிட்டது.

பிரிஷா பிறந்த நான்காவது வாரத்தில், அவளுடைய கண்கள் மஞ்சளாக இருந்திருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள். தீவிரமான பரிசோதனைக்குப் பிறகு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிந்தார்கள். குழந்தைக்கு `அலிஜியண்ட் சிண்ட்ரோம்’ (Allegiant Syndrome) என்றார்கள் மருத்துவர்கள். அதாவது பிரிஷாவுக்கு கல்லீரலில் கோளாறு, ஒருவகை கல்லீரல் நோய் என்பது தெரியவந்திருக்கிறது. அதற்கான அறிகுறிகள் தெளிவாக பிரிஷாவிடம் தெரிந்தன. பதறிப் போனார் கிருஷ்ணவேணி. அதிகச் செலவு பிடிக்கும் நோய் கல்லீரல் நோய். கவனிக்காமல்விட்டால் உயிரையே பறித்துக்கொண்டுபோய்விடும்.

குழந்தை பிரிஷா வளர்ந்தாள். வளர, வளர, அவள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் கிருஷ்ணவேணியையும் சந்திரனையும் கவலையில் ஆழ்த்தின. ``அவளுக்கு அப்பப்போ உடம்பு முழுக்க அரிக்கும். சொறிஞ்சு சொறிஞ்சு ரத்தமே வந்துடும். பாதத்தைத் தரையில்வெச்சுக் கீறிக்கிட்டே இருப்பா. `அம்மா உள்ளங்கால் அரிக்குதும்மா’னு அழுவா. பல நாள்கள் அரிப்பு காரணமாக அவளால தூங்கவே முடியாது. இந்தத் தொல்லை இருக்குறதுனால ரொம்பக் கோபப்படுவா. பல நேரங்கள்ல சோம்பல்தனத்தோட இருப்பா. மற்ற குழந்தைங்களோட அவளால விளையாடவோ, பழகவோ முடியாது. சரியாவே சாப்பிட மாட்டா...’’ என்று கூறிக்கொண்டே குழந்தையின் உடம்பில் இருந்த அடையாளங்களை நமக்குக் காட்டினார் கிருஷ்ணவேணி.

`பிரிஷாவுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் குணப்படுத்த, அவளது கல்லீரலை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறியிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், அதற்குச் செலவு செய்வும் அளவுக்கு கிருஷ்ணவேணியிடமும், சந்திரனிடமும் பணம் இல்லை. அதிலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கெல்லாம் மலேஷியாவில் கட்டணம் அதிகம். எனவே, குழந்தை பிரிஷாவின் வலிக்குத் தற்காலிக மருத்துவம் பார்த்துக்கொண்டே இரண்டு வருடங்களை ஓட்டியிருக்கிறார் கிருஷ்ணவேணி. ஒருகட்டத்தில், பிரிஷாவுக்கு கல்லீரலை மாற்றியே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை. குழந்தையை சென்னைக்குக் கொண்டு போய் சிகிச்சை கொடுக்கலாம் என்று மலேஷிய மருத்துவர்களே சென்னையிலிருக்கும் ஒரு மருத்துவமனையையும் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதிலும் சிக்கல்!

பிரிஷாவுக்கு செய்யப்போகும் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு அவர்களுக்குத் தேவைப்பட்ட தொகை 40 லட்ச ரூபாய்! அதிர்ந்துபோனது பிரிஷாவின் குடும்பம். அடிபட்ட காலிலேயே திரும்ப அடிபடுவதுபோல, அந்தக் குடும்பத்தில் மற்றொரு சோகம் நிகழ்ந்தது. பிரிஷாவின் அப்பா சந்திரன் திடீரென ஒரு நாள் ஹார்ட்அட்டாக் வந்து இறந்துபோனார். இந்த நிலையில் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கிப்போய் நின்றார் கிருஷ்ணவேணி.

கணவரைப் பறிகொடுத்தாலும், குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே... ஒரு கட்டத்தில் அதற்கான வேலைகளில் இறங்கினார் கிருஷ்ணவேணி. தன்னுடன் படித்தவர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கோரினார். கிருஷ்ணவேணியின் நண்பர் ஆர்.கே. இந்திரன் என்பவர், பிரிஷாவுக்கு உதவிசெய்ய பல முயற்சிகளை எடுத்தார். சமூக வலைதளங்களில் பிரிசா குறித்தப் பதிவுகளைப் போட்டார். மலேஷியாவில் இருக்கும் `டி.ஹெச்.ஆர் ராகா மலேஷியா’ என்கிற பண்பலை வானொலியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் பிரிஷாவைப் பற்றியும் அவள் குடும்பத்துக்கு உதவி செய்யும்படியும் நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பப்பட்டது. பிரிஷாவையும் கிருஷ்ணவேணியையும் வீடியோக்களில் பேசவைத்து, அதையும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஷேர் செய்தார்கள். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த `மாமன் மச்சான்’ படக்குழுவினர், படத்தின் முதல் நாள் வசூலை, பிரிஷாவின் மருத்துவச் செலவுக்காகக் கொடுத்தார்கள்.

விடாமுயற்சியின் பலனாக பலபேரிடமிருந்து உதவி வந்து சேர்ந்தது. மலேஷியா, மியான்மர், இந்தியா... என்று பல நாட்டு மக்களிடம் இருந்து சுமார் 45 லட்ச ரூபாய் நிதியுதவி கிடைத்தது. உடனே, சென்னைக்கு வந்து குழந்தையை ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள். பிரிஷாவின் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு, ஓ பாசிட்டிவ் ரத்த வகை உள்ள ஒருவர், தன் கல்லீரலின் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும். அவரின் கல்லீரல், குழந்தை பிரிஷவின் உடல்நிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த அவசர நிலையில் அப்படி ஒருவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அப்போதுதான் தன் கல்லீரலையே பிரிஷாவுக்குக் கொடுக்க முன்வந்தார் கிருஷ்ணவேணி.

``உங்க கல்லீரலைவெச்சே குழந்தையைக் காப்பாத்திடலாம்தான். ஆனா, உங்க கல்லீரல்ல கொழுப்பு கொஞ்சம் இருக்கு. இன்னும் ஒரு மாசத்துக்கு டயட், எக்சர்சைஸ் செஞ்சு கொழுப்பைக் குறைச்சிட்டீங்கன்னா ஆபரேஷன் செஞ்சுடலாம்’’ என்று சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

உடனே செயலில் இறங்கினார் கிருஷ்ணவேணி. ஒன்றரை மாதம் கடுமையான டயட்டில் இருந்தார். தொடர்ந்து உடற்பயிற்சிசெய்தார். சிகிச்சைக்குத் தயாரானார். செப்டம்பர் மாதம் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அம்மா கிருஷ்ணவேணிக்கு ஆறு மணி நேரம் அறுவைசிகிச்சை... குழந்தைக்கு எட்டு மணி நேரம். ஆபரேஷன் முடிந்து இரண்டு வாரங்கள் கழித்துத்தான் கிருஷ்ணவேணியும் பிரிஷாவும் பார்த்துக்கொண்டார்கள். கிருஷ்ணவேணியின் அப்பா வேலு பத்துமலைதான் சென்னையில் கூடவே இருந்து இவர்களைப் பார்த்துக்கொண்டார்.

``ஆபரேஷனுக்கு அப்புறம் திரும்ப நான் பார்த்தபோது, பிரிஷா நல்லா இருந்தா. ஆபரேஷன் பண்ணினதால குழந்தையோட வயிறு கொஞ்சம் பெருசா இருக்கு. அங்கே மட்டும் அப்பப்போ வலிக்கும்னு சொல்லுவா. `போகப் போக அதுவும் சரி ஆயிடும்’னு டாக்டர் சொல்லியிருக்கார். ஆபரேஷனுக்கு அப்புறம் பிரிஷா இப்போ நல்லா சாப்பிடுறா, விளையாடுறா. உடம்புல அரிப்பெல்லாம் இல்லை. மத்த குழந்தைகளைப் பார்த்து அவ சிரிக்கிறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. எங்களுக்கு உதவி செஞ்ச, எங்களுக்காக பிரார்த்தனை செஞ்ச நல்ல உள்ளங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். மருந்து, மாத்திரை, ஆபரேஷனுக்குப் பிறகு ஆன செலவுனு இன்னும் பத்தரை லட்ச ரூபாய் தேவைப்படுது. அதைத் திரட்டுறதுக்காக நண்பர் ஆர்.கே.இந்திரன் மலேஷியா போயிருக்கார். டாக்டர் சொன்னதும், பணத்தைக் கட்டிட்டு நாங்க மலேஷியா போயிடுவோம்’’ என்கிற கிருஷ்ணவேணி இன்னொன்றையும் சொன்னார்...

``பிரிஷாக்கு இப்போ நல்ல பேச்சு வருது. அவளுக்கு சென்னை போலீஸ் ரொம்பப் பிடிச்சிருச்சாம். எதிர்காலத்துல போலீஸாத்தான் ஆகப் போறாளாம்.’’

நாம் குழந்தையை போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைக்க, `மாட்டேன்’ என்று அடம்பிடித்தது. ``போஸ் கொடுக்கலைனா போலீஸ் ஆக முடியாது’’ சொன்னதும் உடனே பிரிஷா போஸ் கொடுத்தாள்... க்யூட்டாக..!