Published:Updated:

அந்தப்புரம் - 19

அந்தப்புரம் - 19

அந்தப்புரம் - 19

அந்தப்புரம் - 19

Published:Updated:
அந்தப்புரம் - 19

ஜெனிபரின் கண்கள் சிவந்திருந்தன. எதுவும் பேசவும் மறுத்தாள். எந்த நேரமும் கண்ணீரைச் சிந்தத் தயாராக இருப்பது அவளுடைய முகக்குறிப்பில் தெரிந்தது. தான் பேசுவது  அந்த ரெஸ்டாரன்டில் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்  மூலையில் இருக்கையைத் தேர்ந்தெடுத்தாள் அனிதா. ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அழைத்துவந்துவிட்டு, எதையோ சொல்லவருவதும் அதைத் தொண்டைக்குள்ளேயே விழுங்குவதுமாக இருந்தாள்.

அனிதாவுடன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவள் ஜெனிபர். அடுத்த மாதம் ஜெனிபருக்குத் திருமணம். இந்த நேரத்தில் முக்கியமான விஷயம் என ரகசியமாகப் பேச வேண்டும் என்றால் என்னவென நினைப்பது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவளாகச் சொல்லும் வரை காத்திருப்போம் என, சூடு ஆறிப்போன காபியை நிதானமாகக் குடித்துக்கொண்டிருந்தாள்.

எதிர்பாராத நேரத்தில் குபுக் என அழுதபடி, அனிதாவின் மீது சாய்ந்து, குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

“என்ன ஆச்சு ஜெனி? எதுக்கு இப்படி வெளியே சொல்லாம் புழுங்கிக்கிட்டு இருக்கே? சொன்னாத்தானே தெரியும்?’’ வாஞ்சையாக அணைத்தபடி கேட்டாள் அனிதா.

அந்தப்புரம் - 19

சின்ன விசும்பலுக்கு இடையே சொன்னாள்... “நான் இப்ப முழுகாம இருக்கேன்டி.’’

“என்ன சொல்றே... அடுத்த மாசம் கல்யாணம்... இப்ப இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போடுற...”

“ராபர்ட்தான் ஃபோர்ஸ் பண்ணினான்.  நான் எவ்வளவோ மறுத்துப்பார்த்தேன்.’’

“என்னது... ராபர்ட்டா?’’

அனிதாவுக்குக் கொஞ்சம் நிம்மதி. ராபார்ட், ஜெனியை மணக்கப் போகிறவன்தான்.

“கட்டிக்கப்போறவங்கதானே... ப்ளீஸ் ஒரே ஒரு தடவைனு சொன்னான். அன்னைக்கு ஒருநாள் மகாபலிபுரம் போயிட்டு வந்தோமே... அப்போதான் தப்பு நடந்துபோச்சு... இப்ப என்ன பண்றதுன்னே தெரியலை.’’

“இதை முன்னாடியே யோசிச்சிருக்கணும். செக்ஸ் வெச்சுக்கிட்டா குழந்தை பிறக்கும்னு உனக்குத்் தெரியாதா?’’

“ ‘ஒரு தடவை செக்ஸ் வெச்சுக்கிட்டா எல்லாம் குழந்தை பிறக்காது’னு சொன்னான்.”

“நீயும் உடனே நம்பிட்டியாக்கும்?”

இப்போது என்ன செய்வது? இருவருமே சேர்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

ஏன்... எதற்கு... எப்படி?

ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? எந்தச் சமயங்களில் உறவுகொண்டால் கருத்தரிக்கும்? இந்த மாதிரி கேள்விகள் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும்.

‘கன்சீவ்’ என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையில் இருந்து உருவானது. ‘கன்சிஃபையர்’ என்ற லத்தீன் வார்த்தைக்கு ஏற்றுக்கொள்ளுதல் என அர்த்தம். ஆணுடைய விதையில் இருந்து விந்து வெளியாதல் அல்லது பெண்ணின் கருப்பையில் கருமுட்டை வெளியாதல் என்பதைப் பொறுத்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரிப்புக் காலம் என்பது கருத்தரித்த நேரம் தொடங்கி, பிரசவ நேரம் வரை. இது, கரு உருவான அந்த மாதத்தின் மாதவிடாய் நாளில் தொடங்கி 280 நாட்களைக் குறிக்கும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்குப் பின் பெண்ணின் கருப்பையில் முட்டை உருவாகி, ஃபாலிக்கலில் தகுதி நிலையை அடைகிறது. மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஃபாலிக்கல் உடைந்து, முட்டை விடுவிக்கப்படுகிறது. இதை, ‘ஓவலேஷன்’ என்கிறோம். மாதவிடாய் சுழற்சியின் 14-ம் நாளில் (மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 14-வது நாள்) கருப்பையின் உட்புற லைனிங் ஆன எண்டோமெட்ரியம் தடித்து, கருமுட்டையைச் சுமந்து, வளர்ப்பதற்குத் தயாராகி நிற்கிறது.

அந்தப்புரம் - 19

இந்த நிலையில் முட்டையானது பெண்ணின் பெரிடோனியல் குழியில் இருந்து, ஃபெலோப்பியன் குழாய் மூலமாக, கர்ப்பப்பையை அடைகிறது.

இந்தத் தருணத்தில் உடலுறவு நிகழ்ந்தால், முட்டையானது கருத்தரிப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருக்கும். உச்சநிலையின்போது, ஆணுறுப்பில் இருந்து 3 மி.லி அளவு வரை விந்து பீய்ச்சப்படுகிறது.

ஒவ்வொரு மி.லி விந்துவும் 15 மில்லியனுக்கு மேல் விந்தணுக்களைக் கொண்டிருக்கும். 1 முதல் 5 மணி நேரம் வரை இந்த விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் பயணிக்கின்றன. யோனியில் தொடங்கி ஃபெலோப்பியன் குழாய் வரையான இந்தப் பயணத்தின்போது, ஏராளமான விந்தணுக்கள் ஆற்றல் இழந்துபோகின்றன. இறுதியில் 3,000 விந்தணுக்கள் மட்டுமே முட்டை இருக்கும் ஃபெலோப்பியன் குழாயை அடைகின்றன. அதில், சில நூறு விந்தணுக்கள்தான் முட்டையை அடைகின்றன. அதில், ஒரு விந்தணு மட்டுமே முட்டையைத் துளைத்து கருத்தரிக்கக் காரணமாகிறது.

உடலுறவின்போது கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்பதற்காக இதைச் சொன்னேன்.

- ரகசியம் பகிர்வோம்

ஓவியம்: ஸ்யாம்

டவுட் கார்னர்

“ஒரே ஒருமுறை உறவுகொண்டாலும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதா?”

சி.மகேஸ்வரி, திருச்சி.

“வாய்ப்பு உண்டு. முட்டை தயார் நிலையில் இருந்து, விந்து சரியான தருணத்தில் செலுத்தப்பட்டால், கருத்தரிக்க 100 சதவிகித வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பதற்கு பலமுறை உடலுறவுகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.”

“கருத்தரிப்பதற்கான சரியான வயது எது?”

கே.முருகேசன், வந்தவாசி.

“25 வயது சரியானது. 35 வயதுக்குப் பின் பெண்கள் கருத்தரிப்பது, பாதிப்புடைய குழந்தைகள் பிறக்கவும் குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.”

“எந்தெந்த நாட்களில் உறவுகொண்டால் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்?”

ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

“அது மாதவிடாய் சுழற்சியின் தொடர்ச்சியைப் பொறுத்தது. ஒரு பெண் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சிக்கு ஆட்படுகிறார் என வைத்துக்கொள்வோம். மாதவிடாய் ஆன நாளை, முதல் நாள் எனக் கணக்கிட வேண்டும். 9-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள் ஆகும். இதைச் சரியாகக் கணக்கிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பெண்களுக்கு 28 நாட்கள் என்ற சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது இல்லை. 18-ம் நாள் கருத்தரிப்பு ஏற்பட்டால், அதை குறைந்தபட்ச சுழற்சி எனவும் 10-ம் நாள் கருத்தரித்தால், அதை அதிகபட்ச சுழற்சி எனவும் சொல்வோம்.”

“ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க என்ன செய்ய வேண்டும்?”

சி.காமாட்சி, சீர்காழி.

“பாலினத்தைத் தீர்மானிப்பது நம் கையில் இல்லை. இயற்கைதான் அதைத் தீர்மானிக்கிறது.”

பாலியல் தொடர்பான வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.