Published:Updated:

உடல் பருமன் உண்டாக்கும், இதயத் துடிப்பை அதிகமாக்கும் ஸ்லீப் ஆப்னியா... கவனம்! #SleepApnea

உடல் பருமன் உண்டாக்கும், இதயத் துடிப்பை அதிகமாக்கும் ஸ்லீப் ஆப்னியா... கவனம்! #SleepApnea
உடல் பருமன் உண்டாக்கும், இதயத் துடிப்பை அதிகமாக்கும் ஸ்லீப் ஆப்னியா... கவனம்! #SleepApnea

உடல் பருமன் உண்டாக்கும், இதயத் துடிப்பை அதிகமாக்கும் ஸ்லீப் ஆப்னியா... கவனம்! #SleepApnea

தூக்கம்! இந்த நான்கெழுத்து மந்திரம் இரவில் நமக்குக் கிடைக்காவிட்டால், விடியல் நன்றாக இருக்காது. சதா பரபரப்பு, மனஅழுத்தத்துக்கு இடையே வாழும் நம் இளைய தலைமுறைக்கு, இன்றைய தேதியில் தூக்கம் வெகு தொலைவில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை 93 சதவிகிதம் பேர் தூக்கம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுவதாகக் கூறுகிறது ஓர் ஆய்வு. அவர்களில் இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே இதற்காக மருத்துவரை அணுகுகிறார்களாம். இது ஒருபுறம் இருக்க, `ஸ்லீப் ஆப்னியா’ (Sleep apnea) என்கிற ஒரு வகை தூக்கக் குறைபாடு பலரையும் இப்போது அதிக அளவில் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவில் ஐந்து கோடிப் பேர் இந்த ஸ்லீப் ஆப்னியாவால் (தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல்) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது இன்னோர் ஆய்வு முடிவின் அனுமானம். ஒரு நல்ல தூக்கம் எப்படி இருக்க வேண்டும், சிலர் குறட்டைவிடுவதற்கான காரணம் என்ன, அதைக் கண்டுகொள்ளாமல்விட்டால் ஏற்படும் 'ஸ்லீப் ஆப்னியா' (sleep apnea) என்ன செய்யும் என்பது பற்றியெல்லாம் விளக்குகிறார் தூக்கவியல் நிபுணர் இராமகிருஷ்ணன்.

``நிம்மதியான தூக்கம் என்பது, மூளையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான். இதனால் மனஅழுத்தம், சோர்வுகள் எல்லாம் நீங்கி, அடுத்த நாள் புத்துணர்ச்சியோடு தொடங்க உதவும். சிலருக்கு தூங்கும்போது குறட்டை வரும். குறட்டைவிட்டுத் தூங்குவதுதான், ஆழ்ந்த, நிம்மதியான உறக்கம் எனச் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. குறட்டை என்பது, தூக்கத்தில் சுவாசிக்க முடியாமல் திணறும்போது ஏற்படும் ஓர் ஒலி. ஆக, குறட்டை ஓர் ஆரோக்கியமான விஷயம் அல்ல. குறட்டையைக் கண்டுகொள்ளாமல்விட்டால் உண்டாகும் பல பிரச்னைகளில், முக்கியமான ஒன்றுதான் ஸ்லீப் ஆப்னியா. இந்தியாவில், கிட்டத்தட்ட 5 கோடிப் பேர் இந்தப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.

ஸ்லீப் ஆப்னியா ஏற்பட்டால் உடல் பருமன் ஏற்படும்; உறக்கத்தின்போது இதயத் துடிப்பு அதிகமாகும்; மூச்சுத்திணறல் அதிகமாகும்; ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்படக்கூட வாய்ப்பு உண்டு. இதில், அப்ஸ்ட்ரக்டிவ் (Obstructive Sleep Apnea), சென்ட்ரல் (Central Sleep Apnea) என இரண்டு வகை ஸ்லீப் ஆப்னியா உள்ளது. அப்ஸ்ட்ரக்டிவ் வகையில், தொண்டையின் பின்புறம் உள்ள மெல்லிய திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால், அதிகச் சத்தத்துடன் கூடிய குறட்டை ஒலி எழும்பும். சென்ட்ரல் ஆப்னியாவில், தொண்டைத் தசைகளின் செயல்பாடுகள் குறைந்து காணப்படும். இந்தக் குறைபாட்டுக்குக் காரணங்களாக இருப்பவை உடல் பருமன், இரைப்பை அழற்சி (GERD), மூக்கு, தொண்டை, நாக்கு முதலிய பகுதிகளில் தோன்றும் பிரச்னைகள் ஆகியவை.

ஸ்லீப் ஆப்னியா அறிகுறிகள்...

* இரவு நேரத் தூக்கத்தில், சத்தமாகக் குறட்டைவிடுவது.

* பகல் நேரத்தில் தூங்குவது; சோர்வாகக் காணப்படுவது.

* காலை எழும்போது தொண்டை வறண்டு, தாகத்தோடு இருப்பது.

* காலை எழுந்தவுடன் தலைவலிப்பது.

* தூக்கத்தின்போது மூச்சுவிட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அடிக்கடி திடுக்கிட்டு எழுவது.

* மூட் ஸ்விங் ஏற்படுவது, மறதி அதிகமாவது.

இவையெல்லாம் இருந்தால், தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது என உறுதி செய்துகொள்ளலாம். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு ஸ்லீப் ஆப்னியா எளிதில் ஏற்பட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்கள், தூக்கவியல் தொடர்பான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டியது அவசியம். குறிப்பாக, சர்க்கரைநோய், இதயநோய் இருப்பவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால் பிரச்னை பெரிதாகும்.

பரிசோதனை

ஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா இருக்கிறதா என்பதைக் கண்டறிய, பாலிசோம்னோகிராம் (Polysomnogram) என்ற டெஸ்ட் செய்யப்படும். இதில், சம்பந்தப்பட்ட நபரை தூங்கச் சொல்லி, அவர் தூங்கும் முறை, குறட்டைச் சத்தத்தின் அளவு, மூச்சுக்குழாயில் ஏற்படும் சிரமங்கள், கண்களின் அசைவுகள் போன்றவை எந்திரங்களின் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். அதை வைத்து, பாதிப்பின் தீவிரம் கண்டறியப்படும். சமீபத்தில், பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியாவுக்கு `டிரீம் மேப்பர்’ என்ற செயலியையும், டிரீம் ஸ்டேஷன் கருவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன. ஸ்லீப் ஆப்னியா என்பது, பார்வைக்குறைபாடு போன்ற ஒரு குறைபாடு. வாழ்நாள் முழுவதும் இருக்கும். சிலருக்கு நாள்பட நாள்படச் சரியாகும்.

சிகிச்சை

இதற்கான சிகிச்சைகளில், உடல் எடை குறைத்தல், மது, புகைப் பழக்கத்தை நிறுத்துவது, தூங்கும் முறையில் மாற்றம் கொண்டுவருவது, மாத்திரைகளைக் குறைப்பது போன்ற வாழ்வியல் மாற்றங்கள்தான் முதல்கட்ட பரிந்துரை. அதை தொடர்ந்து, CPAP (Continuous Positive Airways Pressure) அல்லது BPAP (Bi-level Positive Airways Pressure) என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும். இதில், ஒருவகை மாஸ்க் நோயாளிகளுக்குத் தரப்படும். தூங்கும் நேரத்தில் இதை அணிந்துகொள்ளச் சொல்வார்கள். இவை அனைத்தையும் செய்தும் பிரச்னை சரியாகாவிட்டால், அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருக்கும். குறட்டையை, ஏதோ சாதாரணப் பிரச்னை என்று பலரும் தட்டிக்கழிக்கிறார்கள். குறட்டை, நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு முறையான, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். உடலும் மனதும் ரிலாக்ஸாகி, அன்றாடம் நிம்மதியான தூக்கம் கிடைத்தால் போதும்... வேறென்ன வேண்டும் நமக்கு!

அடுத்த கட்டுரைக்கு