Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

எம்.சங்கீதா,சென்னை.

“நான் என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறேன். இரண்டு வயது முடிந்துவிட்டது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன். பால் கொடுக்காமல் இருக்கும்போது, மார்பகத்தில் பால் கட்டாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டாக்டர் சி.சூரியபிரபா, அரசு மகப்பேறு மருத்துவர், பெரம்பலூர்.

கன்சல்ட்டிங் ரூம்

“குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுத்தால், குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருக்கும். பால் தொடர்ந்து சுரப்பதற்கு ஹார்மோன்தான் காரணம். தற்போது, பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகு, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். ஆனால், குழந்தை எத்தனை வயது வரை பால் குடிக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுத்திருப்பதால், மார்பகத்தில் பால் கட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு இல்லை. அப்படியே பால் கட்டிக்கொண்டாலும், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரை சாப்பிட்டு சரிசெய்துகொள்ளலாம். பொதுவாக, எல்லா பெண்களுக்கும் இது சம்பந்தமாக சந்தேகம் இருக்கும். ‘மார்பகத்தில் பால் கட்டிக்கொள்ளும்போது, மாத்திரை சாப்பிடுவதால், அடுத்து பிறக்கப்போகும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாது’ என்று நினைக்கிறார்கள். இது தவறு. இதற்கு மாத்திரை சாப்பிட்டால், எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது. அடுத்த குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும். குழந்தைக்கு இரண்டு வயதில் பால் கொடுப்பதை நிறுத்தும்போது, அதற்குப் பிறகு மீண்டும் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. இரவு நேரத்தில் அழும்போதுகூட கொடுக்கக் கூடாது. ஏனெனில், தாய்ப்பாலை நிறுத்திய பிறகு, மீண்டும் பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக்கொள்ளும். இதனால், மார்பகத்தில் வலி ஏற்படும். ஒருவேளை பால்கட்டிக்கொண்டால், வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் வலி நீங்கும். மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டால் உடனே சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால், மார்பகத்தில் சீழ் கோத்து அறுவைசிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். மார்பகத்தில் பால் கட்டிக்கொண்ட உடனே, மகப்பேறு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.”

கன்சல்ட்டிங் ரூம்

க.விஷ்ணுக்குமார், தாம்பரம்.

“நான் ஓர் இதய நோயாளி. என் மனைவிக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. நாங்கள் இருவரும் வயதானவர்கள்; எங்களால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. அவசர காலங்களில் எங்களின் உயிர் காக்கும் மருந்துகளைச் சொல்லுங்களேன்...”

டாக்டர் ந.விஸ்வநாதன், இதய சிகிச்சை நிபுணர்.

கன்சல்ட்டிங் ரூம்

“இதய நோயாளி என்றால், மாரடைப்புப் பிரச்னை உள்ளவரா, இதய வால்வு பாதிப்பு உள்ளவரா, சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னை உள்ளவரா என்பது பற்றித் தெளிவான தகவல் உங்கள் கேள்வியில் இல்லை. இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாரடைப்போ நெஞ்சு வலியோ ஏற்பட்டால், சார்பிட்ரேட் (Sorbitrate) எனப்படும் ஐசோசார்பைட் டை நைட்ரேட் (Isosorbide di nitrate) வகை மாத்திரைகளை வாங்கி, நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளலாம். இதனால், உடனடியாக நெஞ்சு வலி குறைய வாய்ப்பு உள்ளது. மாத்திரையை நாக்கின் அடியில்வைத்தாலும், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். மாரடைப்பால் நெஞ்சுவலி ஏற்படும்போது, ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால மருத்துவ உதவிகளை அழைப்பதே சிறந்தது. மருத்துவமனைக்குச் செல்லும் இடைப்பட்ட காலத்தில் நன்றாக மூச்சுவிட வேண்டும். மாரடைப்பின்போது, செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு, ஓர் இடத்தில் அமர வேண்டும். நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.”

டாக்டர் அ.சண்முகம், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்.

கன்சல்ட்டிங் ரூம்

“சர்க்கரை நோயைப் பொறுத்தவரையில், சர்க்கரையின் அளவு குறைதல், சர்க்கரை அளவு அதிகரித்தல் என்று இரண்டு பிரச்னைகள் உள்ளன.  சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும்போது, படபடப்பு, அதிக வியர்வை உண்டாகுதல், கை நடுக்கம், தலைசுற்றுதல், பசி எடுத்தல் போன்ற அறிகுறிகளை உணரலாம். இந்த நிலையில், சுய நினைவுடன் இருந்தால், குளுக்கோஸ், பழச் சாறு, தண்ணீரில் சிறிதளவு சர்க்கரையைக் கலந்து குடிக்கலாம். இனிப்புகள் அல்லது சாக்லேட் போன்றவற்றை உண்ணலாம். அவசர உதவிக்கு ஹைபோடேப் (Hypotab) எனும் மாத்திரையை வாங்கிவைத்துக்கொண்டு, லோ சுகரின்போது உட்கொள்ளலாம். ஆனால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சுயநினைவு இல்லாதவர்களை அவசியம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியான நேரத்தில் உணவை உட்கொண்டு, கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உண்ணாமல் இருந்தால், சர்க்கரையின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஹை சுகரின் போதும், படபடப்பு, வாந்தி மற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகளை உணரலாம். இந்த நிலையில் தவிர்க்காமல் மருத்துவமனைக்குச் சென்று, இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும். இன்சுலினின் அளவை சர்க்கரையின் அளவைப் பொறுத்தே சொல்ல முடியும். அதனால், வீட்டில் இருந்தபடியே இன்சுலின் போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, சுய சிகிச்சை மேற்கொள்வது மிகவும் தவறானது. அது, சர்க்கரையின் அளவைக் குறைத்து, லோ சுகர் நிலைக்குக் கொண்டுசெல்ல வாய்ப்பு உள்ளது.”

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம்,டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002. doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.