Published:Updated:

ஹெல்த் காலண்டர்

ஹெல்த் காலண்டர்

அக்டோபர் 16 உலக முதுகுத்தண்டு தினம்

முதுகுத்தண்டு பாதிப்பு காரணமாக அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக, வேலை செய்யும்போது முதுகை வளைத்தும் அழுத்தம் கொடுத்தும் பாதிப்பை நாமே உருவாக்குகிறோம். இந்த ஆண்டு, ‘வேலை செய்யும்போது முதுகு’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு உலக முதுகுத்தண்டு தினம் கொண்டாடப்படுகிறது. முதுகுத்தண்டு ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை...

ஹெல்த் காலண்டர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. எப்போதும் நன்றாக நிமிர்ந்து அமருங்கள், நீண்ட நேரம் குனிந்து அமராதீர்கள். கணினி முன் அமர்ந்து  வேலை செய்பவர்கள், பிரத்யேக சாய்வு நாற்காலிகளைப் பயன்படுத்துங்கள். கணினித் திரையை அண்ணாந்தோ, குனிந்தோ பார்க்கக் கூடாது. எனவே, அதற்கு ஏற்ப கணினி மேசையை வடிவமைத்துக்கொள்ளுங்கள்.

2. நன்றாகக் குழி விழும் அளவுக்கு இருக்கும் மென்மையான மெத்தைகளில் படுக்காதீர்கள், ஓரளவு தடிமனான பஞ்சு மெத்தைகளைப் பயன்படுத்துங்கள். குப்புறப்படுத்துத் தூங்குவது முதுகு வலிக்கு முக்கியக் காரணம். எனவே, அதனைத் தவிருங்கள்.

3. எடை மிகுந்த பொருட்களைத் தூக்கும்போது, குனிந்து தூக்க வேண்டாம். காலை மடக்கி லேசாக உட்கார்ந்தவாறு, இரண்டு கைகளையும் பயன்படுத்திப் பொருட்களைத் தூக்குங்கள். எடை மிகுந்த பொருட்கள் உள்ள பைகளை ஒரே கையால் தூக்கிக்கொண்டு நடக்காமல், இரண்டு பைகளாக சம அளவு எடையாகப் பிரித்து, இரண்டு கைகளிலும் எடுத்துச் செல்லுங்கள்.

4. நிற்கும்போது எப்போதும் நேராக நிற்கவும். ஒரு காலுக்கு அதிக அழுத்தம் கொடுத்துச் சாய்ந்து நிற்பது, ஒரு காலுக்கு மட்டும் சப்போர்ட் வைத்துக்கொண்டு ஒரே காலில் உடலின் முழு எடையைத் தாங்குவது போன்றவற்றைத் தவிர்க்கவும். இல்லை எனில் கீழ் முதுகு வலி வரும்.

5. உடற்பயிற்சி அல்லது யோகா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தினமும் செய்வது முதுகுத்தண்டுக்கு மிகவும் நல்லது. இரு சக்கர வாகன ஓட்டிகள், அவரவர் எடையைப் பொறுத்து பிசியோதெரப்பி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அவரவர்க்கு உரிய முதுகுக்கான பயிற்சிகளைச் செய்வது அவசியம். முதுகுவலி வந்தால், ஆரம்பத்திலேயே கவனித்து, தக்க சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது.

அக்டோபர் 17  உலக ட்ராமா தினம்

டலில் காயத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் ‘ட்ராமா’ என்கிறோம். இப்படி விபத்துக்களில் ஏற்படும் காயங்கள் காரணமாக மிகப் பெரிய அளவில் உயிர் இழப்பும் ஊனமும் அதிகரித்துள்ளன. இது பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘உலக ட்ராமா தினம்’ கொண்டாடப்படுகிறது. உலக அளவில் காயங்கள் ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் இருப்பது சாலை விபத்துக்கள்தான். இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடி பேர் சாலை விபத்தில் சிக்குகின்றனர். இவர்களில், 10 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். தேசிய க்ரைம் ரெக்கார்ட் பீரோ புள்ளிவிவரத்தின்படி 2013-ம் ஆண்டில் மட்டும், ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர். விபத்து, உயிர் இழப்பு அல்லது ஊனத்தை ஏற்படுத்துவதோடு, அந்தக் குடும்பத்தின், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதைத் தடுக்கவேண்டியது மிக முக்கியப் பிரச்னையாக எழுந்திருக்கிறது.

ஹெல்த் காலண்டர்

விபத்தைத் தவிர்க்க...

• சாலை விதிகளை மதிக்க வேண்டும்.

• போக்குவரத்து சிக்னல் மற்றும் எச்சரிக்கை சிக்னல்களை கவனித்துச் செயல்பட வேண்டும்.

• இருசக்கர வாகனத்தில் பயணிப்போர், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

• வாகனம் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுவது, பாடல் கேட்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

• நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

• வீட்டில், குழந்தைகள் கையில் சுவிட்ச், ஒயர் போன்ற மின் பொருட்கள், மருந்துகள், கூரான பொருட்கள் எட்டாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

• வீட்டிலும் வாகனத்திலும் முதலுதவிப் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

• விபத்தில் சிக்கியவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகளைத் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம்.

• விபத்தில் சிக்கியவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி 108-ஐ தொடர்புகொண்டு விரைவாக வரவழைப்பதுதான்.

• தூக்கமின்றியோ, குடித்துவிட்டோ, வாகனம் ஓட்டக் கூடாது.

• வாகனம் ஓட்டும்போது அவசரம் கூடாது.

அக்டோபர் 20 உலக ஆஸ்டியோபொரோசிஸ் தினம்

ஹெல்த் காலண்டர்

ம்முடைய உடலின் அடிப்படை, எலும்பு அமைப்பு. கட்டடத்தின் உறுதித்தன்மைக்கு எப்படி உறுதியான பொருட்கள் தேவையோ, அதுபோல எலும்புக்கு கால்சியம், வைட்டமின் டி உள்ளிட்டவை தேவை. “எலும்பு மண்டலம் உறுதியாகும் வரை இந்தப் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்” என்ற மையக் கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆஸ்டியோபொரோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

ஹெல்த் காலண்டர்

சீரற்ற வளர்சிதை மாற்றம், தவறான உணவு, வாழ்க்கைமுறை ஆகியவற்றால் எலும்பின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. பொதுவாக, மெனோபாஸ் காலகட்டத்தை நோக்கிப் பயணிக்கும் பெண்கள், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமச்சீர் இன்மை காரணமாக அவதிப்படும் பெண்கள் போன்றோருக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆண்களுக்கும் தற்போது எலும்பு மெலிதல் பிரச்னை அதிகரித்து இருக்கிறது. ஆரோக்கியமான சமச்சீர் உணவும் உடற்பயிற்சியும் இருந்தால், ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையைத் தவிர்க்க முடியும். 30 வயதைக் கடந்தவர்கள் கால்சியம் உள்ள உணவுகளைக் கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும், மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். கால்சியம், வைட்டமின் டி விகிதம் சமச்சீராக இல்லாவிட்டால், ஆஸ்டியோபொரோசிஸ் வரலாம். எனவே, தினமும் காலை அரை மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் வேகமான நடையும், கீரை, காய்கறிகள், மீன், பால், முட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்து வருவதும் நல்லது.

- பா.பிரவீன் குமார், பு.விவேக் ஆனந்த்